�
காங்கிரஸில் இருந்து பிரிந்து கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த ஜி.கே.வாசன், தற்போது மீண்டும் காங்கிரசோடு தனது கட்சியை இணைக்க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. தனது தந்தையின் நண்பரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி மூலம் இந்த இணைப்பைச் சாத்தியமாக்க அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வாசன் வெளியிட்டுள்ளார்.
ஈரோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”உள்ளாட்சித் தேர்தலில் தமாகா பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ”தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து, இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. தமிழக மக்களின் மனநிலையைப் பொறுத்து, கூட்டணி குறித்துப் பேசி முடிவெடுப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய கப்பல்படையில் பயன்படுத்தப்பட்டுவரும் வருணா ரோந்துகப்பலை இலங்கைக்குப் பரிசளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் வாசன். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “வருணா கப்பலை இலங்கை அரசுக்கு நன்கொடை அளிப்பதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்தது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மேற்கொள்ளூம் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்திடும் முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.�,