�
சர்வதேச அளவில் ஆயுதங்கள் இறக்குமதியில் முன்னிலை வகித்துவந்த இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், சர்வதேச நாடுகளின் ஆயுத இறக்குமதி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2014-18 காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஆயுத இறக்குமதியில் 12 சதவிகிதப் பங்குகளுடன் சவுதி அரேபியா முதலிடத்தில் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக முன்னிலை வகித்து வந்த இந்தியா, 9.5 சதவிகிதப் பங்குகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2014-18 காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 24 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. போரில் பயன்படுத்தப்படும் ஜெட் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்தியா இச்சரிவைச் சந்தித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.
2014-2018 காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்து 54 சதவிகிதம் அளவிலான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் அரசு சீனாவிடமிருந்து 70 சதவிகித ஆயுதங்களையும், அமெரிக்காவிடமிருந்து 8.9 சதவிகித ஆயுதங்களையும் இறக்குமதி செய்துள்ளது. எனினும் 2009-2013 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014-2018 ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 39 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல, அமெரிக்காவின் ஆயுத இறக்குமதி 81 சதவிகிதம் குறைத்துள்ளது. ஆயுத இறக்குமதியில் சீனா 4.2 சதவிகிதப் பங்களிப்புடன் பட்டியலில் ஆறாம் இடம் வகிக்கிறது.�,