lபன்றிக் காய்ச்சல்: செய்ய வேண்டியது என்ன?

Published On:

| By Balaji

மெடிக்கல் செக்அப் – 3

பன்றிக் காய்ச்சல் எதனால் வருகிறது?

பன்றிக் காய்ச்சல் (swine flu), influenza நுண் கிருமியால் உண்டாகும் நோய்.

இந்நோய் எப்படி, எப்போது பரவுகிறது?

இது காற்று வழியாகப் பரவும். மழைக் காலத்தில் மற்றும் குளிர் காலங்களில் இதன் தாக்கம் இருக்கும்.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, வாந்தி மற்றும் உடம்பு வலி ஆகியவை இதன் அறிகுறிகள்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஓய்வு எடுக்க வேண்டும், பழரசம், சூப் போன்ற நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரை எப்பொழுது அணுக வேண்டும்?

முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவு உள்ளவர்கள் மற்றும் நரம்பு தொந்தரவு உள்ளவர்கள், காய்ச்சல் ஆரம்பித்த உடனேயே மருத்துவரைக் காண வேண்டும்.

மேலே கூறிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால், எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், தீராத அசதி, சிறு குழந்தைகள் என்றால் சாப்பிடாமல் இருந்தால், மந்தமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன ?

சாதாரணமாகப் பன்றிக் காய்ச்சல் மற்ற சளி இருமல் மாதிரிதான் வந்து போகும். ஆனால், மிக அரிதாக pneumonia நிமோனியாவாக மாறினால்தான் பிரச்சினை.

இந்தக் காய்ச்சலுக்கு வேற என்னென்ன செய்யலாம்?

காய்ச்சலைக் குறைக்க paracetamol மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். கையை மூக்கில் வாயில் வைக்கக் கூடாது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

வெளியே செல்லும்போது mask (முகமூடி) அணிந்தால் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க வேறு என்ன செய்யலாம்?

தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளலாம்.

யாரெல்லாம் தடுப்பு ஊசி எடுக்க வேண்டும்?

பன்றிக் காய்ச்சலின் தாக்கம் கூடுதலாக இருக்கக்கூடிய சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் (>60), நுரையீரல் மற்றும் நரம்புத் தொந்தரவு உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை இன்புளுயன்சா (influenza) தடுப்பு ஊசி எடுக்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சலைச் சமாளிக்க, காய்ச்சல் அறிகுறி இருந்தால் ஓய்வு எடுக்க வேண்டும், நீராகாரம் உண்ண வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும், தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ளலாம்.

சுவாசத் திணறல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

(கட்டுரையாளர் குறிப்பு)

**மருத்துவர் ரம்யா அய்யாதுரை**

**எம்.டி., டி.என்.பி., எம்.ஆர்.சி.பி (பொது மருத்துவம்)**

**மருத்துவப் பேராசிரியர்**

**கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர்.**

**சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share