வாட்ஸ் அப்பில் இந்தியர்களை உளவு பார்த்த இஸ்ரேல்!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டவர்களின் விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ்-கால், மெசேஜ், தகவல் பரிமாற்றம், புகைப்படம், வீடியோ காட்சிகள் பரிமாற்றம் உள்ளிட்ட இதன் வசதிகள் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் இதனை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் அக்டோபர் 29ஆம் தேதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அவ்வழக்கில், இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ, உலகம் முழுவதுமுள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் 1,400 பேரின் மொபைல் போனை ஹேக் செய்து, அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ் அப் நிர்வாகத் தலைவர் வில் கேட்ச்காரட் கூறும்போது, “இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் வாட்ஸ் அப்பில் வைரஸை பரப்பி மனித உரிமைகள் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை கண்காணித்துள்ளது. அமெரிக்க கணினி முறை கேடு தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சகம் இது பற்றி நேற்று(அக்.31) வெளியிட்ட அறிக்கையில், “இதுபற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம். இந்திய மக்களின் உரிமை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாப்பதை அரசு உறுதி செய்யும்”எனக் கூறியுள்ளது.

**என்எஸ்ஓ அனுப்பிய வைரஸ்**

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு உளவு, கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறது. பெகாசஸ் என்பது என்எஸ்ஓ குழுமம் உருவாக்கிய ஒரு மால்வேர் வைரஸாகும். இது ஒரு தொலைபேசியில் நிறுவப்படும் போது, அனைத்து தகவல்தொடர்புகளையும் (ஐமேசேஜ், வாட்ஸ்அப், ஜிமெயில், வைபர், பேஸ்புக், ஸ்கைப்) மற்றும் லொகேஷன்களை ஹேக் செய்கிறது. இது இலக்கு வைக்கப்பட்ட தொலைபேசியில் வேறுபட்ட சில வழிகளிலும் நிறுவப்படலாம்: வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்கு வைரஸ் அதிகமுள்ள லிங்குகளை அனுப்புவது(spear phishing), வாட்ஸ் அப்பை முடக்குவது அல்லது தகவல்களை திருடுவது போன்ற வழிகளில் இது இலக்கு வைக்கப்பட்ட தொலைபேசிகளை தாக்கக்கூடும். 2016 ஆம் ஆண்டு முதல் இந்த வைரஸ் செயல்பாட்டில் உள்ளது. இந்த வைரஸ் தான் தற்போது வாட்ஸ் அப் மூலம் என்எஸ்ஓ பரப்பியுள்ளது.

**இந்தியாவில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் யார்?**

பழங்குடியினர் பகுதிகளில் பணிபுரியும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், பீமா கோரேகான் வழக்கு வழக்கறிஞர், ஒரு தலித் ஆர்வலர், பாதுகாப்பு மற்றும் மூலோபாயம் குறித்து அறிக்கை அளிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் டெல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உள்ளிட்ட 17 பேர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

1. ரவீந்திரநாத் பல்லா: தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவின் பொதுச் செயலாளர்.

2. ஷாலினி கெரா: சிறையில் உள்ள சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜின் வழக்கறிஞர் மற்றும் ஜகதல்பூர் சட்ட உதவி குழுவின் இணை நிறுவனர்.

3. ஆனந்த் டெல்டும்ப்டே: சிவில் மற்றும் தலித் உரிமை ஆர்வலர் மற்றும் அறிஞர். கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பேராசிரியர். எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் இவர்.

4. பெலா சோமாரி: பஸ்தாரை தளமாகக் கொண்ட மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர்.

5. நிஹால் சிங் ரத்தோட்: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்.

6. ஜெகதீஷ் மெஷ்ரம்: கச்சிரோலியைச் சேர்ந்த வழக்கறிஞர், இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்.

7. அங்கித் க்ரூவால்: சண்டிகரை தளமாகக் கொண்ட மனித உரிமை வழக்கறிஞரும், இந்திய மக்கள் சங்கத்தின் இணைச் செயலாளருமானவர் இவர்.

8. விவேக் சுந்தரா : மும்பையைச் சேர்ந்த சிவில் மற்றும் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்.

9. டிகிரி பிரசாத் சவுகான்: சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினர், தலித் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.

10. சீமா ஆசாத்: மனித உரிமை ஆர்வலர் , அலகாபாத்தில் இருந்து *தஸ்தக் நயே சமய் கி* என்ற இந்தி பத்திரிகையை வெளியிடுகிறார்.

11. டாக்டர் சரோஜ் கிரி: டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் விரிவுரையாளர்.

12. அமர் சிங் சாஹல்: சண்டிகரைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரும், மனித உரிமைகளுக்கான சர்வதேச வழக்கறிஞர்களின் உறுப்பினர் இவர்.

13. ராஜீவ் சர்மா: டெல்லியைச் சேர்ந்த கட்டுரையாளர் மற்றும் மூலோபாய விவகார ஆய்வாளர்.

14. சுப்ரான்ஷு சவுத்ரி: முன்னர் பிபிசி உலக சேவையுடன் பணிபுரிந்த இவர், இப்போது சத்தீஸ்கரில் Peace journalism செய்து வருகின்றார். மேலும், அங்குள்ள ஆதிவாசிகளுக்கு புளூடூத் வானொலி சேவையை செய்து வருகின்றார்.

15. சந்தோஷ் பாரதியா: டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் , *சவுதி துனியா* என்ற ஆன்லைன் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர், முன்னாள் ஜனதா தள எம்.பி.

16: ஆஷிஷ் குப்தா: அசோமியா பிரதிடின் பணியகத்தின் தலைவரான டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் இவர். ஜனநாயக உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் சிவில் உரிமை ஆர்வலராகவும் பணியாற்றி வருகின்றார்.

17. சித்தாந்த் சிபல்: டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். WION செய்தி சானலில் முதன்மை பாதுகாப்பு நிருபர்.

இந்தியர்களின் தகவல் பரிமாற்றங்கள் உளவு பார்க்கப்பட்டது குறித்து வரும் 4ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel