கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஸ்வீட், காரம், சூப்… டிப்ஸ்!

Published On:

| By admin

* விருந்தினர்களின் வருகையின்போது பஜ்ஜி சுடலாம் என்று நினைப்பவர்கள்… உருளைக்கிழங்கு, வாழைக்காய் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் ஃப்ரோஸன் கார்ன் (Frozen corn) வாங்கி வைத்திருந்தால் அதை தேவையான அளவு நறுக்கி பஜ்ஜி போடலாம்.

* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது மாவில் வெந்நீர் ஊற்றிப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு செய்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

* பர்ஃபி போன்ற ஸ்வீட் செய்யும்போது கடைசி வரை அடுப்பில் வைத்துக் கிளறாமல், நன்கு கெட்டியாகி ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, அவ்வப்போது கிளறி, அப்படியே கடாயில் விட்டு விடவும். ஆற ஆற தானாக கெட்டியாகி விடும். பிறகு தட்டில் கொட்டி, வில்லைகள் போடலாம். இப்படிச் செய்யும்போது, பர்ஃபி சாஃப்ட்டாக நாவில் கரையும் பதத்தில் வரும்.

* வீட்டில் பூந்தி லட்டு செய்யும்போது, பாகு சரியான பதத்தில் இல்லையென்றால் லட்டு பிடிக்க வராது. இதற்கு அரை கப் சர்க்கரையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, கெட்டிப் பாகாகச் செய்து, பூந்தியில் ஊற்றிக் கிளறினால் சுலபமாக லட்டு பிடித்துவிடலாம்.

* தேன்குழல், முறுக்கு, ரிப்பன் பக்கோடா போன்றவை செய்யும்போது அடுப்புத் தீயைக் கூட்டிக் குறைத்துச் செய்யாமல், நிதானமான தீயில் வைத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் சீரான பக்குவத்தில் வெந்து கரகரப்பாக வரும்.

* கிரேவி, சைடிஷ் செய்யும்போது உப்பு அதிகமாகிவிட்டால் அரை கப் பாலும் அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலந்தால் சுவையும் மிக நன்றாக இருக்கும், உப்பும் சரியாகிவிடும்.

* சூப் செய்யும்போது ரெஸ்டாரன்ட்டில் பரிமாறுவது போன்ற சுவையை வரவழைக்க ஃபிரெஷ் க்ரீம் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு பாலும் ஒரு டீஸ்பூன் வெண்ணெயும் சேர்த்தால் போதும்.

* பாயசம் மற்ற இனிப்புகள் செய்யும்போது ஏலக்காய் பொடியை முதலில் சேர்க்காமல் அடுப்பை அணைத்து கீழே இறக்கும்போது சேர்த்தால் அதிக வாசனையாக இருக்கும்.

* வெண் பொங்கல் மீந்துவிட்டால் கவலைப்படாதீர்கள். பொங்கல் உள்ள அளவுக்கு இரண்டு மடங்கு கோதுமை மாவை அத்துடன் சேர்க்கவும். வேறு எதுவும் சேர்க்க வேண்டாம். தேவை யானால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு கலந்து நன்றாக பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

* கிரேவியில் காரம், உப்பு அதிகமாகி விட்டால்… தக்காளி அல்லது புளி சேர்த்தால் போதும் என்று நினைப்பவர்கள், ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பவுடர் (உலர்ந்த மாங்காய்த்தூள்), ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் போதும்.

**[நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூ புளிக்குழம்பு](https://minnambalam.com/public/2022/02/05/1/plaintain-flower-kulambu)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share