கடலூர் பகுதி மீனவர்களில் சிலர் சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டும், சிலர் தடை கேட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
**தடை கேட்டு போராட்டம்**
இன்று (ஜூலை 17) கடலூர் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு கொடி ஏந்தியும், கடலுக்குள் இறங்கியும், சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2000த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ், கடலூர் மீன்வளத் துறை இணை இயக்குநர் ரம்யா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் விசுமகாஜன் உறுதியளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
முன்னதாக, சுருக்கு வலை படகைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. எனினும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சுருக்கு வலை படகுகளை பயன்படுத்தித்தான் அந்தந்த பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
சுருக்கு வலை படகில் சுறா வலை, மத்தி வலை என இரு வகை வலைகள் பயன்படுத்தப்படுகிறது. சுறா வலையில் பெரிய மீன்கள் கிடைக்கும். மத்தி வலையில் சிறிய மீன்களான அயிலா, கானாங்கத்த, கவலை போன்ற மீன்கள் சிக்கும். ஒரு வலையின் மதிப்பு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சுருக்கு வலை படகுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
*அனுமதி கேட்டு போராட்டம்*
இந்நிலையில் கடந்த வாரம் சுருக்குமடி வலையை அனுமதிக்க வேண்டும் என்று தேவனாம்பட்டின மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட மூர்த்தி உள்ளிட்ட மீனவர்கள் நம்மிடம், “கடன் வாங்கி படகும், சுருக்குமடி வலையும் வாங்கியுள்ளோம். மீன் பிடிக்க முடியாததால் வட்டியும் கட்டமுடியாமல் தவணையும் செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் கடன் கொடுக்க மாட்டார்கள். காரணம், ரூ.75 லட்சத்தில் படகு வாங்கப் பல கோடிக்கு சொத்து பத்திரம், வருமான வரி சான்று கேட்பார்கள். மீனவர்கள் நாங்கள் கடலுக்குச் சென்றால்தான் வருமானம் என்றிருக்கும் போது, நாங்கள் எப்படி வருமான வரி செலுத்துவது. எங்களுக்குத் தனியார் ஆட்கள் தான் அதிக வட்டிக்குக் கோடிக் கணக்கில் பணம் கொடுப்பார்கள். அவர்களுக்கும் சரியாக திருப்பி கொடுத்துவிடுவோம். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு ஏன் எங்களை வஞ்சிக்கிறது” என்று குமுறினர்.
தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த ஞானசேகர் கூறுகையில், “சுருக்கு வலையை ஆதரித்தது இந்த அரசாங்கம் தானே. சுருக்கு வலைக்குத் தடை விதித்தபோது தடையை மீறி நாகை மாவட்டம் பழையாறு மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள். அப்போது யாரும் கேட்கவில்லை. 2002 பிப்ரவரி மாதத்தில் தேவனாம்பட்டினத்திலிருந்து கடல் வழியாக ஆயிரம் மீனவர்கள் சென்று வலையை எரித்து வெட்டி போட்டுவிட்டு வந்தோம். எங்கள் மீது வழக்குப் போட்டார்கள். இன்று வரையில் நீதிமன்றம் சென்று வருகிறோம்.
அதன் பிறகுதான் அதிகமான வட்டிக்குத் தனிநபரிடம் கடன் வாங்கி, கேரளாவுக்குச் சென்று ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் சுருக்கு வலை மற்றும் படகு (கண்ணா படகு) வாங்கி வந்தோம். வரும் வழியில் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அனுமதி கொடுக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தினோம். அப்போதே, சுருக்கு வலை படகுக்கு அனுமதி கொடுக்காமல் தடுத்திருந்தால் யாரும் வாங்கியிருக்க மாட்டோம்.
கடலூரில் மட்டும் 120 உட்பட தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சுருக்கு வலை படகுகள் உள்ளன. ஒரு படகில் 40 பேர் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்வார்கள். ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 2000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பாதிப்பார்கள். சுருக்கு வலையை நம்பி தினம்தோறும் ஒரு லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில், மீனவ சமுதாயம் அல்லாமல் கடலுக்குச் செல்பவர்கள் சுமார் 40 ஆயிரம் பேர். அதோடு மீன் தொழிலை நம்பியுள்ள பலருக்கும் இது வாழ்வாதாரமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தானே புயல் நேரத்தில் பாதிக்கப்பட்ட சுருக்கு வலை படகுகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டது. அப்போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மீன்வளத் துறை ஏடி, டிடி, இயக்குநர்கள் எங்கே சென்றார்கள். சுருக்கு வலை படகுக்கு நிவாரணம் கொடுக்கக்கூடாது என்று தடுத்திருக்கலாமே” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் “அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம், காசிமேடு, கே.வி.கே குப்பம் மீனவர்கள் ஆதரவிலிருந்து வருகிறார். அவர்கள் யாரும் சுருக்கு வலை படகுகள் வைத்திருக்கவில்லை. அதைவிட மினி கப்பல் போல் இருக்கும் கில்நெட் படகு வைத்துள்ளார்கள். அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கும், மீன் வளத் துறை உயரதிகாரிகளுக்கும் கூட கில்நெட் படகுகள் உள்ளன. சுருக்கு வலை போட்டால் அவர்களுக்கு மீன் கிடைக்காது என்று தவறான கண்ணோட்டத்தால் சுருக்கு வலை படகுகளுக்கு அனுமதி மறுத்து மீனவர்களை வஞ்சித்து வருகிறார்கள். ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுச்சேரி மீனவர்கள் சுருக்கு வலை படகில் மீன் பிடிக்கிறார்களே தமிழக எல்லையில் அதைத் தடுப்பார்களா அல்லது ஆந்திர மீனவர்களைத் தடுப்பார்களா” என்று பொங்கித் தீர்த்தார்.
இதுதொடர்பாக மின்வளத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தால், “கில்நெட் படகு அரசு மானியத்துடன் பணபலம் உள்ளவர்கள் வாங்கக்கூடியது. சுருக்கு வலைப் படகுகள் அரசின் மானியமில்லாமல், வங்கிக் கடன் இல்லாமல் தனியாரிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வாங்குவது. இது தேவையில்லாத பிரச்சனைதான். கொரோனா காலத்தில் மீனவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியல்ல. சுருக்கு வலை படகுகளுக்கு அனுமதி கொடுப்பதில் என்ன தவறு. கில்நெட் படகுகளில் பிடிக்கும் மீன்களைத்தான் சுருக்கு வலை படகுகளிலும் பிடிக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.
முன்னதாக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், “மத்திய அரசு நாடு முழுவதும் சுருக்கு மடி வலையை தடை செய்திருக்கிறது. நீதிமன்றமும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. சட்டத்தால் அனுமதிக்க முடியாத விஷயத்துக்கு எப்படி அனுமதி வழங்க முடியும். இரட்டைமடி வலைகளுக்கு விலக்கு தந்தால் நீதிமன்ற வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
இந்த சூழலில்தான் இன்று சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு தடை கேட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
**காசி**�,”