�ஆழ்துளைக் கிணறுக்குள் அசைவின்றி சுர்ஜித் :பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம் !

Published On:

| By Balaji

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இரண்டாவது ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) மாலை 5:40 மணியளவில் 600 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆரோக்கியராஜ் – கலாமேரி தம்பதியரின் மகன் சுர்ஜித் வில்சன், ஆழ்துளைக் கிணற்றின் 26 அடி ஆழத்தில் இருந்து 88 அடி ஆழத்துக்குக் கீழே சென்றுவிட்டார். 67 மணி நேரம் கடந்து அவரை மீட்க தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் வேறொரு குழியைத் தோண்டி அதன் வழியாகத் தீயணைப்புப் படை வீரர்கள் உள்ளே சென்று குழந்தையை மீட்டு வரத் திட்டமிடப்பட்டது. முன்னதாக நேற்று (அக்டோபர் 27) காலை 7 மணிக்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த என்எல்சி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் 35 அடிகள் வரை தோண்டிய நிலையில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன் கொண்ட புதிய ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுவனை மீட்கும் பணிகள் நடந்துவந்தது. நேற்று இரவு 12 மணியிலிருந்து துளையிடும் பணியில் ஈடுபட்டுவந்த இயந்திரம் 40 அடியை தாண்டி விட்ட நிலையில் தற்போது ரிக் இயந்திரத்தின் போல்ட் நட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்காலிகமாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் மாதேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது, “நாங்கள் வந்து பார்க்கும் போது குழந்தை மூச்சு விடும் சத்தம், அவரது அழுகுரல் எல்லாம் வெளியே இருந்த எங்களுக்கு தெளிவாகக் கேட்டது. ரப்பர் போன்ற ஒரு இடுக்கியை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டெடுத்திருக்க முடியும். ஆனால் அந்த கருவியை வேறு பணிகளுக்கு நாங்கள் பயன்படுத்தி விட்டோம். அது போன்ற கருவியைப் பயன்படுத்தி இருந்தால் சிறுவனை எளிதில் மீட்டிருக்க முடியும். மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் கூடி நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு சரியாகப் பணி செய்ய இயலவில்லை. ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் குழி தோண்ட ஆரம்பித்தார்கள். வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. நாங்கள் பயந்தது போன்றே இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே சென்றுவிட்டான்” என்று கூறினார்.

ரிக் இயந்திரம் பழுதானதைத் தொடர்ந்து 1200 குதிரைத் திறன் கொண்ட போர்வெல் கருவி மூலம் துளையிடும் பணிகள் தொடர்ந்துள்ளது.

நான்காவது நாளாக மீட்புப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் ஆழ்துளைக் கிணறின் 88 அடி ஆழத்தில் அசைவின்றி சுர்ஜித் இருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share