ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கப்பட வேண்டுமென பிரார்த்திப்பதாக பலரும் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 18 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
இதனையடுத்து சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ட்விட்டரிலும், முகநூலிலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #prayforsurjith மற்றும் #SaveSurjith என்னும் ஹாஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ““மனம் கனக்கிறது. குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், “மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித், நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், “சிறுவன் சுர்ஜித் நலமுடன் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து விரைவில் மீட்கப்பட அனைவரும் பிரார்த்திப்போம். அதற்கு உதவும் அமைச்சர்கள், அரசு எந்திரங்கள், பணியாளர்கள், பொது மக்கள் அனைவரின் முயற்சி பெரும் நம்பிக்கையை தருகிறது. சிறுவன் மீட்கப்படும் வரை அவனது பெற்றோருக்கு மனவுறுதியை இறைவன் அருள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விவேக் கருத்து தெரிவிக்கையில், “சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு” என்று கூறியுள்ளார். இதுபோலவே பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
சுர்ஜித் மீண்டு வருவதைக் காண தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.�,