டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமடைந்துள்ளதால், தேவைப்பட்டால் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. தலைநகரில் வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருந்து வந்தது. இதற்கிடையில், தீபாவளி பண்டிகையின் போது தடை மீறி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 499 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(நவம்பர் 13) தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
டெல்லியில் ஒருவர் 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமாக காற்று மாசுபாடு அடைந்துள்ளது என்று மாநில அரசு கூறியுள்ளது. இதனை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் இதற்கு என்னதான் தீர்வு? அவசரநிலை நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் டெல்லியில் 2 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.
இடையில் குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘கடந்த 6 நாட்களாக டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுக்கு பஞ்சாப் விவசாயிகள் கழிவுகளை எரிப்பதே காரணம். இதனை அந்த மாநில அரசு தடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
அனைத்து விவகாரங்களுக்கும் விவசாயிகளை குறைகூறுவது தற்போது வழக்கமாகிவிட்டது. காற்று மாசு ஏற்படுவதற்கு அவர்கள் குறிப்பிட்ட அளவு காரணமாக இருக்கிறார்கள் என்றால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு மற்ற காரணங்கள் என்ன? கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது என்பதை கவனித்தீர்களா? பொதுமக்கள் வீடுகளுக்குள் மாஸ்க் அணியும் அளவிற்கு மாசுபாடு மிகவும் மோசமாக உள்ளது. டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது?. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்,
இரண்டு வாரத்திற்கு முன்புதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் அச்சுறுத்தி வரும் நிலையில்,காற்று மாசும் குழந்தைகளை பலவீனம் அடைய செய்து வருகிறது என்று கவலை தெரிவித்தனர்.
டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த 2-3 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
**-வினிதா**
�,