யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை; வறுமையின் காரணமாகதான் ஒருவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாவது அலை தாக்கக் கூடும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுப்பதற்கு பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் தடை விதிக்கவும், அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று(ஜூலை 27) நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கும் தொழிலை தேர்வு செய்யவில்லை. பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவர்களை வசதியானவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடியாது. அவர்களிடம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக தெருக்களில் பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது சமூக, பொருளாதார பிரச்சனை. அதனால், பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது. மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடங்களை அளிக்க முடியாத அரசால் பிச்சை எடுப்பது குற்றம் என எப்படி அறிவிக்க முடியும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே மருத்துவ வசதி பெற உரிமை இருக்கிறது. அதனால், பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு உயர் கல்வியை வழங்க வேண்டியது அவசியம். பிச்சை எடுப்பதை தடை செய்வதை விட பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாவுழ்வு மையம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இதுகுறித்து இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உத்தரவிட்டனர்.
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 2.2 லட்சம் பேர் ஆண்கள். 1.90 லட்சம் பேர் பெண்கள். இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் தான் அதிக பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,