wஒரே நேரத்தில் சூரியன் மறைவு – சந்திரன் உதயம்!

Published On:

| By admin

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இவ்விரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. கன்னியாகுமரியில் நிகழும் இந்த அழகான காட்சியைக் காண சித்ரா பவுர்ணமி அன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
அன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ண ஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்தின் மேல் பகுதியில் சந்திரன் நெருப்புப் பந்து போன்ற வடிவத்தில் எழும். அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளி வெளிச்சத்தில் மின்னும்.
இந்த அரிய காட்சியைக் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதி மற்றும் கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள்.
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 16ஆம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், விசே‌ஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடக்கின்றன. மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share