சிலருக்கு வெளியிடங்களில் சாப்பிடவே பயமாக இருக்கும். காரணம்… சாப்பிட்ட உடனே மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வு. இதை ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable bowel syndrome – IBS) பிரச்சினை என்கிறது மருத்துவம். தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் தரவுகளின்படி, உலக அளவில் 11 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்று தெரிகிறது. பிரச்சினை ஏற்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேர் மட்டும் மருத்துவரை அணுகுகின்றனர். பலர் இந்தப் பிரச்சினையோடே வாழ்வதற்குப் பழகிக்கொள்கிறார்கள்.
‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ பெருங்குடலும் மனதும் சேர்ந்த பிரச்சினை. சில உணவுப்பொருள்கள் ஒவ்வாமையால் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். ஏதேனும் வைரஸ் தொற்றின் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதைத் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை தொடங்கலாம்.
மன அழுத்தம், பதற்றம், ஆளுமை தொடர்பான குறைபாடுகள் என உளவியல் சார்ந்த பிரச்சினைகளாலும் இந்தப் பிரச்சினை வரலாம். உதாரணத்துக்கு, மனதுக்கு நெருங்கியவர்களின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், தேர்வெழுதும் மாணவர்கள், அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்புபவர்கள்… நாட்கள் தொடங்கி மாதங்கள், வருடக்கணக்காகக்கூட பிரச்சினை நீடிக்கலாம்.
பால், கோதுமை, ஹோட்டல் உணவுகள், சில காய்கறிகள் என குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடும்போது மட்டும் பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதைக் கண்டறிய ‘டயட் டைரி’ என்பதைப் பின்பற்ற வேண்டும். சாப்பிடும் உணவுகளை அதில் குறித்து வைத்துக்கொண்டு எந்த உணவு சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து விட்டாலே பிரச்சினை சரியாகிவிடும்.
பொதுவாக காலை உணவு சாப்பிட்ட உடன் இந்தப் பிரச்சினை ஏற்படும். பெரும்பாலும் 10-15 நாள்களில் பிரச்சினை தானாகவே சரியாகி விடும். அதைத் தாண்டியும் பிரச்சினை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். வைரஸ் தொற்றுக்குப் பிறகு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.
உளவியல் தொடர்பான பிரச்சினை காரணமாக இருந்தால் அதற்கும் சிகிச்சை பெறுவது அவசியம். இவை எதுவும் காரணம் இல்லை என்றால் குடல் சார்ந்த வேறு பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பதற்கான பரிசோதனை அவசியம். ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ உயிரை பாதிக்கும் பிரச்சினை இல்லை என்றாலும், நீண்ட நாட்கள் பாதிப்பு தொடர்ந்தால் வாழ்க்கைமுறை மற்றும் தரம் பெரிதும் பாதிக்கப்படும் என்கிறார்கள் இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர்கள்.
**[நேற்றைய ரெசிப்பி – நாட்டு ஊத்தப்பம்!](https://minnambalam.com/public/2022/06/11/1/uthappam)**
.