எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜிம் செல்கிறார்கள். ஆனால், எடையில் பெரிய மாற்றம் தெரியவில்லை என்கிறார்கள். இதுகுறித்து ஜிம் பயிற்சியாளர்களிடம் கேட்டால், ‘எடைக்குறைப்புக்கு வொர்க் அவுட்டை விடவும் டயட்தான் முக்கியம்’ என்கிறார்கள்.
அப்படியானால் எதற்கு ஜிம் போக வேண்டும்? வெறும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமே எடையைக் குறைக்க முடியாதா? ஜிம் செல்வதால் என்ன பயன்?
இப்படிப்பட்ட கேள்விகள் எடையைக் குறைக்க வேண்டும் நினைக்கும் பலருக்கு எழுகின்றன. உண்மை நிலை என்ன? ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
“எடைக்குறைப்பு என்பது 20 சதவிகிதம் உடற்பயிற்சியாலும் 80 சதவிகிதம் உணவுக்கட்டுப்பாட்டாலும் சாத்தியமாவதுதான். பிறகு ஏன் வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் செய்தாக வேண்டும். உடற்பயிற்சிகள் செய்தால்தான் உங்களால் உங்கள் தசைகளையும் மூட்டுகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைக்க முடியும். ஆனால் உடற்பயிற்சிகளின் மூலம் மட்டுமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
உணவுக்கட்டுப்பாடு என்பது பலருக்கும் சவாலானதாக இருப்பதாலேயே பலரும் அதை விரும்புவதில்லை. ஆனால் சுத்தமான உணவுகளை உண்பதும் நன்றாக வொர்க் அவுட் செய்வதும் மட்டும்தான் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை கொடுக்கும்.
கலோரிகள் குறைவான உணவுகளை உண்பதாலும் எடை குறையும். ஆனால் உங்கள் எனர்ஜி அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். நம் உடலானது ஓய்விலிருக்கும்போதுகூட கலோரிகளை எரிக்கும். அதுவே உடல் அசையும்போது அதிக கலோரிகள் எரிக்கப்படும்.
வீடு கட்டும்போது வெறும் சிமென்ட்டை மட்டுமா வைத்துக் கட்டுகிறோம்? இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்துகிறோமே… வெறும் சிமென்ட்டை கொட்டிக் கட்டும் வீடு உறுதியாக இருக்காது என்பதால்தானே இரும்புக்கம்பிகளைப் பயன்படுத்துகிறோம்… அதே போன்றதுதான் உடற்பயிற்சியும்.
எடை மட்டும் குறைந்தால் போதுமா, எனர்ஜியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்பதுதான் ஃபிட்னெஸ் பயிற்சியாளர்களின் பதிலாக உள்ளது.
**[நேற்றைய ரெசிப்பி: பொருள்விளங்கா உருண்டை!](https://www.minnambalam.com/public/2022/06/18/1/sweet-ball)**
.