vகுழந்தை மீட்புப் பணிகள்: இன்று நடந்தது என்ன?

Published On:

| By Balaji

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்று (அக்டோபர் 28) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது சுஜித் 88 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகவும், சிறுவனிடம் எந்த அசைவும் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுஜித்தை மீட்கும் பணி 72 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வந்தாலும், அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலைதான் நீடித்து வருகிறது. சுஜித்தை எப்படியாவது நலமுடன் மீட்டுவிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

**ராதாகிருஷ்ணன் விளக்கம்**

இன்று காலை பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து, சுஜித்தை மீட்கும் பணியில் தாமதம் ஏன் என்பது பற்றி விளக்கமளித்தார்.

அவர் கூறுகையில், “இயந்திரம் மூலம் நடைபெறும் மீட்புப் பணிகள் திருப்தியளிக்கவில்லை. பல்வேறு வழிகள் மூலம் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும். மீட்புப் பணியை கைவிடும் திட்டமில்லை. சவாலை சமாளிப்போம். எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சுஜித்தை மீட்போம்.பலதரப்பிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுக்கப்பட்டு வருகிறது; குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம்.

சுஜித்தை மீட்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஆலோசனை வழங்கலாம், அதற்கான செலவை அரசே ஏற்கும். 88 அடி ஆழத்தில் குழந்தை சுஜித் சிக்கியுள்ளான். 98 அடி ஆழம் வரை குழிதோண்டி சுஜித்தை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “சமூக வலைதளங்களில் பலர் பலூன் முறையை பயன்படுத்துமாறு கருத்து தெரிவிக்கின்றனர். பலூன் முறையை பயன்படுத்த முடியாத அளவிற்கு சுஜித் சிக்கியுள்ளான். நான்கரை இன்ச் போர் குழியில் பலூனை செலுத்தக் கூட இடமில்லை” என்றும் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

**போர்வெல் மூலம் பாறைகளில் துளையிடப்பட்டது**

ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரத்தின் மூலம் குழிதோண்டப்பட்டு வருகிறது. 50 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், பாறைகள் அதிகமாக இருந்ததால் மேற்கொண்டு ரிக் இயந்திரம் குழி தோண்டுவது கடினமாகியது. மேலும், இயந்திரங்கள் பழுதினாலும் அவ்வப்போது பெய்யும் மழையாலும் குழி தோண்டும் பணிகளில் தொய்வும் ஏற்பட்டது.

ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலமாக பாறைகளை துளையிட்டு அதன்பின்னர் குழியைத் தோண்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இன்று மதியம் 1 மணிக்குத் தொடங்கின. போர்வெல் இயந்திரம் மூலம் 65 அடி ஆழம் வரை 5 இடங்களில் துளையிடப்பட்டது. இந்தத் துளைகள் ரிக் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எஞ்சிய தூரத்தையும் இதேபோல் போர்வெல், ரிக் இயந்திரங்கள் மூலம் அகழ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் ஆழ்துளைகளை இணைப்பதற்கான துளையைப் போடக்கூடிய கருவி கோவையில் இருந்து வரவழைக்கப்படுகிறது.

இதற்கிடையே குழந்தை சுர்ஜித்தின் மீது விழுந்துள்ள மணலை மீட்புக்குழுவினர் கருவி மூலம் உறிஞ்சி எடுக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பார்வையிட்டு வருகின்றனர். இன்று பிற்பகல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடுக்காட்டுப்பட்டிக்கு நேரில் வருகை தந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

**மீட்புப் பணிகள்: கேட்டறிந்த பிரதமர்**

இந்த நிலையில் சுஜித்தை மீட்கும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். இதுதொடர்பாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில், “தைரியமான குழந்தை சுஜித் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். குழந்தையை மீட்கும் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share