திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த தகவல் தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியாவது குழந்தையை மீட்டுக் கொண்டு வந்துவிடலாம் என்று தமிழக அரசின் பல்வேறு துறைகள் இரவு பகல் பாராமல் நடத்திய போராட்டம், தோல்வியடைந்து குழந்தையின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது.
நான்கு நாட்களாக அங்கேயே இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் மீட்புப் பணி பற்றிய நிலவரங்களை முதல்வருக்குத் தெரியப்படுத்தியபடி இருந்தனர்.
சேலத்தில் இருந்தவரை முன்னாள் அமைச்சர் பொன்னையன் சந்தித்து முதல்வர் மாமனார் காலமானது பற்றி துக்கம் விசாரிக்க சென்றிருந்தார். அப்போது அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அண்ணே… ஏற்கனவே நீங்க பேனர் விவகாரத்துல காத்துமேலதான் கேஸ் போடணும்னு சொல்லி ஒரு பேட்டி கொடுக்க அது முழுக்க முழுக்க அரசாங்கத்து மேல மக்களோட கோபத்தை அதிகமாகிடுச்சு. அதனால இந்த சுஜித் விவகாரத்துல நீங்க ஏதும் மீடியாவுல சொல்லிடாதீங்க. மறுபடியும் ஏதும் பிரச்சினை ஆக வேணாம்’ என்று நேருக்கு நேராகவே சொல்லிவிட்டார் எடப்பாடி.
குழந்தை சுஜித்தை உயிரோடு மீட்க முடியவில்லை என்று நேற்று இரவு 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலையிலேயே திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு முதல்வர் தரப்பில் இருந்து,
“குழந்தை சுஜித் மரணம் பற்றி நீங்கள் மீடியாக்களிடம் ஏதும் பேசக் கூடாது. நீங்கள் ஏதாவது பேசப் போய் அது பொதுமக்களின் கோபத்தை கிளறும்படி அமைந்துவிடக் கூடும் என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்கள் தொடர்புகொண்டு கேட்டால் கூட கருத்து சொல்லாதீர்கள். அதை உரிய அதிகாரிகளும், உரிய அமைச்சர்களும் பார்த்துக் கொள்வார்கள்” என்று கறாரான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.�,