ககன்யான் திட்டம்: எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் ராக்கெட் சோதனைகள் !

Published On:

| By admin

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்திற்கான 3 சோதனை ராக்கெட்டுகள் வருகிற மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் விண்ணில் ஏவ திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இதில் விண்வெளிக்கு அனுப்புவதற்கு இந்திய விமானப்படையிலிருந்து 3 பேரை விண்வெளிக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.

வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு, ககன்யான் திட்டத்திற்கு இரண்டு ஆளில்லாத ராக்கெட்டுகளில் மனித ரோபோக்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர் மூன்று வீரர்கள் செல்லும் விண்கலம் பூமியில் இருந்து 300 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வீரர்கள் செல்லும் விண்கலம் 3.7 மீட்டர் விட்டமும், 7 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். இதன் எடை 7 டன்களாக இருக்கும். விண்வெளியில் வீரர்கள் 5 முதல் 7 நாட்கள் வரை தங்கி இருப்பார்கள். பின்னர் இறங்கும் போது ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் வங்க கடலில் இறங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கடலில் இறங்கிய 20 நிமிடங்களில் வீரர்கள் மீட்கப்படுவார்கள். இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்படும் இந்த விண்வெளி திட்டத்தை செயல்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் வருகிற மே மாதம், 2-வது ராக்கெட் ஆகஸ்ட் மாதம், 3-வது ராக்கெட் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share