ஆன்லைனில் மது விற்பனை செய்ய தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (ஜூன் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டதால் டாஸ்மாக் கடையை திறக்க தடைகோரிய வழக்கு தேவையற்றது, நாடு முழுவதும் சகஜ நிலைக்குத் திரும்பி அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுவிட்டதால், வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மது விற்பனை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினர். மேலும், மதுபானத்தை எவ்வாறு விற்க முடியும் என்பதை நீதிமன்றம் முன்வைக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், என்ன செய்ய வேண்டும் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர். ஆன்லைனில் மது விற்பனை மற்றும் விநியோகம் செய்ய பரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு கேட்டுக்கொண்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என தெரிவித்து, வழக்கினை தள்ளிவைத்தனர்.
**எழில்**�,”