ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பள்ளிக்கூட மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த குன்னம்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியை சேர்ந்த 238 மாணவ-மாணவிகள் அங்கு படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து மரத்தடியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த பெற்றோர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, நில வருவாய் ஆய்வாளர் ராக்கிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மாணவ-மாணவிகள் அதிகாரிகளிடம், ‘பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறையில் இருக்கைகள் இல்லை. தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை இல்லை. இதுபற்றி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு உடனே அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கோரிக்கை நிறைவேற்றினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம்’ என்றார்கள்.
அதற்கு அதிகாரிகள், உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி நாளைக்குள் தாசில்தாரிடம் கொடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். அதை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றார்கள். பெற்றோர்கள் வீடு திரும்பினர்.
**-ராஜ்**
.