ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி நடைபெற்று வரும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வகுப்புகளை ஆன்லைனில் வைத்து விட்டு தேர்வுகளை மட்டும் நேரடியாக வைப்பதா? ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று [மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்]( https://minnambalam.com/public/2021/11/15/17/American-college-students-protest-against-direct-exam-method) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தினால் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் தேர்வை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது. ஆயினும், ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும், அதுவரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் நேற்று கூறியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும்(நவம்பர் 16) பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடைபெறுகிறது. ஆன்லைன் தேர்வு வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தும் மாணவர்களின் போராட்டம் பல மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. நேரடி தேர்வு வேண்டாம் என்றும் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்றும் ஈரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் மன்னர் திருமலை கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி மாணவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்று, திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில், திருப்பத்தூர் அருகே உள்ள அரசு கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனர். அதில், இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தது. இந்த சூழ்நிலையில் அரசு நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
மாணவர்களின் போராட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியவில்லை…எளிதில் தேர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. இதற்கு தேர்வின்றி அனைவருமே தேர்ச்சி என்று அறிவிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தை நடத்தலாமே என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், மற்ற பள்ளி மாணவர்களிடையேயும், இந்த போராட்டம் எதிர்மறையான எண்ணங்களை கொண்டுவரும் என்றும் கூறுகின்றனர்.
**-வினிதா**
�,