�காட்பாடி: உயிர் பயத்துடன் சாலையைக் கடக்கும் மாணவிகள் – தீர்வு கிடைக்குமா?

Published On:

| By admin

வேலூர் மாவட்டம், காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உயிர் பயத்துடன் சாலையைக் கடக்கின்றனர். இங்கு உயர் நடை மேடையை அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடியில் உள்ள கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்துள்ள தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. குறிப்பாக, இந்த நெடுஞ்சாலைதான் தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கிறது. அதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன.
எப்போதும் இந்தச் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகக் காணப்படும். குறிப்பாக, பொதுப் போக்குவரத்தான வேலூர் – சித்தூர், வேலூர் – திருப்பதி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் செல்கின்றன. காட்பாடி – பாகாயம் டவுன் பஸ்களும் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. இந்த இடத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த இடத்தின் அருகில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடிந்த பின்னர் சாலையைக் கடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி முன்பு போக்குவரத்து போலீஸார் யாரும் இல்லாததால் மாணவிகள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஐந்து அல்லது பத்து மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து தான் வரிசையாக சாலையைக் கடந்து செல்கின்றனர். இதில் ஏதேனும் ஒரு வாகனம் மோதி விடுமோ என்ற அச்சத்திலேயே சாலையைக் கடக்கின்றனர். மாணவிகள் செல்கிறார்கள் என எந்த வாகன ஓட்டியும் நின்று செல்வதில்லை. அப்போதுதான் இன்னும் வேகமாகச் செல்வார்கள். இதனால் மாணவிகள் தினமும் ஒருவித பதற்றத்துடனேயே சாலையைக் கடந்து செல்கின்றனர்.
மேலும் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய வருபவர்களும், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களும், உழவர் சந்தைக்கு காய்கறிகளை வாங்க வருபவர்களும், காட்பாடி ரெயில் நிலையத்துக்கு உழவர் சந்தை வழியாக செல்பவர்களும் எனப் பலதரப்பட்ட மக்கள், வணிகர்கள், பொதுமக்களும் சாலையைக் கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.
அதனால் பெண்கள் பள்ளி முன்பு உயர் நடை மேடை அமைக்க வேண்டும் எனப் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு உயர் நடைமேடை அமைத்து விரைவில் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share