zகண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

Published On:

| By Balaji

ஓசூர் அருகே அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், ஆசிரியையை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 5 ஆசிரியர் 15 ஆசிரியைகள் என மொத்தம் 20 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில முதுநிலை பட்டதாரி ஆசிரியை இந்திரா என்பவர் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆசிரியைக்கும், மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாணவர், சற்றும் எதிர்பாராதவிதமாக ஆசிரியையின் கன்னத்தில் இரண்டுமுறை ஓங்கி அறைந்துவிட்டு, அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அந்த ஆசிரியை மட்டுமில்லாமல்,அங்கிருந்த மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆசிரியை இந்திரா உடனடியாக, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்களும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால், இதுவரை மாணவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளன.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share