ராஜன் குறை
முப்பதாண்டுகளுக்கு முன்னால் சோவியத் ரஷ்யாவில் மாற்றங்கள் நிகழ்ந்தபோது, அது உடைந்து சிதறியபோது, தொழிலாளர் வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது போன்ற அரசியல் லட்சியங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாயின. இன்று மக்களாட்சி எனப்படும் சுதந்திரவாத ஜனநாயகம் என்ற லட்சியமே கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நெருக்கடி, மக்களாட்சிக்கு மாற்றான சர்வாதிகாரம், பாசிசம், எதேச்சதிகாரம் போன்றவற்றால் ஏற்படவில்லை. மக்களாட்சி பழைய கட்டடம் ஒன்று தானாகவே இடிந்து சரிவதுபோல, மண் கோபுரம் திடீரென சரிவதைப் போல சரிகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், உள்ளீடற்றுப் போகிறது. ஆளும்கட்சி தான் நினைத்ததையெல்லாம் செய்வதாக அது மாறிவிட்டது. ஐந்தாண்டு எதேச்சதிகாரமே மக்களாட்சி என்றாகிவிட்டது.
மக்களாட்சி என்பது தேர்தலில் மக்கள் ஓட்டளித்து ஆளும்கட்சியை தீர்மானிப்பது மட்டுமல்ல. தேர்தலில் மக்கள் தங்கள் விருப்பத்தை, தேர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றாலும் அதை மட்டுமே கருத்தில்கொண்டு மக்களாட்சியில் எந்த முக்கிய அதிகாரப் பகிர்வும் நடந்துவிடாது. எப்படி ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே கல்வி இல்லையோ, அதைப்போலத்தான் தேர்தல் மட்டுமே மக்களாட்சி இல்லை என்பதும்.
மாணவர்கள் தேர்வைவிட கற்பதை முக்கியமானதாக, தொடர்ச்சியான செயல்பாடாக நினைப்பது போல, ஆட்சியாளர்களும் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதையும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன், பொறுப்புடன் செயல்படுவதையும் முக்கியமாக நினைப்பதே மக்களாட்சி. மக்களால் ஆட்சியாளர்களை நேரடியாகக் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் மக்களின் எண்ணிக்கை பிரமாண்டமானது. அத்தனை பேரும் ஆட்சியாளர்களிடம் உரையாட முடியாது. அதனால் மக்களின் கருத்துகளை. பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஆட்சியாளர்களிடம் கூறவும், கேள்விகளை எழுப்பவும் உரிமையுள்ளவர்கள். ஆட்சியாளர்கள் அவ்வாறு கூறப்படும் கருத்துகளையும், எழுப்பப்படும் கேள்விகளையும் செவிமடுப்பது மக்களாட்சியின் சாராம்சம் எனலாம். அதுவே உண்மையில் அதிகாரப் பகிர்வின் இயக்கம். அரசு தன்னிச்சையாக, தான் தோன்றித்தனமாக, எதேச்சதிகாரமாக நடந்துகொள்ள முடியாது என்பதுதான் மக்களாட்சியின் அடிப்படை. ஆனால், தேர்தலைத் தவிர வேறு எதையும் வெற்றி பெறும் ஆளும் கட்சி ஐந்தாண்டுகளுக்குப் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதே நிதர்சனமாகி வருகிறது. கொரோனா தொற்றுக்காலத்தில் இந்திய நடுவண் அரசின் செயல்கள் எல்லாம் இந்த உண்மையையே நமக்கு உணர்த்துகின்றன என்றால் மிகையாகாது. மூன்று முக்கிய பிரச்சினைகளை விரிவாகப் பரிசீலிப்போம். ஒன்று, புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை. இரண்டு, பொருளாதார நலிவுற்ற பிரிவினருக்கு உதவி. மூன்று, கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் விதம்.
**புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை**
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்வதற்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் எவ்வளவு இருக்கும் என்ற கேள்விக்குப் பலரும் சரியான பதிலை சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே. ஏனெனில் இவர்களில் பெரும்பாலோனார் கண்ணுக்குப் புலனாகாத பணியிடங்களில்தான் குழுக்களாக வசித்தார்கள். பெரும்பாலானோர் பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் தென்மாநிலங்களில் பணிபுரிய வந்தவர்கள் எனலாம். ஒப்பீட்டளவில் சிறிய அளவில் பிற மாநிலங்களுக்கிடையேயும் இந்த இடப்பெயர்ச்சி இருந்திருக்கலாம். மொத்தம் பதிமூன்று கோடி பேர் புலம்பெயர்ந்து இவ்விதம் பணிபுரிந்து வந்துள்ளார்கள் என்று தெரிகிறது.
நிச்சயம் அரசாள்பவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கவில்லையென்றால் அவர்கள் அரசாள தகுதியற்றவர்கள். தெரிந்தும் அவர்கள் நிலையைக் குறித்து சிந்திக்காமல் ஊரடங்கை அறிவித்திருந்தால் அது மாபெரும் அலட்சியம். இவர்கள் சொற்ப ஊதியத்துக்காக சொந்த ஊரிலிருந்து மொழி தெரியாத அந்நிய நிலப்பகுதிகளுக்கு வந்தவர்கள். திடீரென்று 21 நாட்கள் வேலை நிறுத்தப்பட்டால் அவர்கள் எதற்காக அந்நிய நிலத்தில் தங்கியிருக்கப் போகிறார்கள்? உணவு உறைவிடத் தேவைகளைத் தவிர, அவர்கள் புலம்பெயர் இருப்பின் அடிப்படையான வேலை இல்லாவிட்டால் அவர்கள் சொந்த ஊர் செல்லத்தானே விரும்புவார்கள்? ஐம்பது நாட்களாக அவர்கள் சாரி, சாரியாக தொலைதூர சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள். இடையில் பலர் பசியாலும், விபத்துகளிலும் இறந்தே போனார்கள். மத்திய மாநில அரசுகள் இவர்கள் மகா பரிதாபமான தொலைதூர நடைப்பயணங்களை ஈவு, இரக்கமின்றி வேடிக்கை பார்த்தன. பிரதமர் ஒருமுறைகூட இவர்கள் நிலையைப் பற்றி வருந்திப் பேசவில்லை. ஒருமுறை இவர்கள் கஷ்டப்பட நேர்ந்ததற்காக மன்னிப்புக் கேட்டார். ஆனால் பிரமாண்டமான, பரிதாபகரமான இந்த நடைப்பயணங்களைத் தடுத்து நிறுத்தவோ அவர்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்தித் தரவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது மக்களாட்சியென்றால் இவர்களெல்லாம் குடிமக்களா, இல்லையா? அவர்களுக்கு சொந்த ஊர் செல்ல உரிமை இருக்கிறதா, இல்லையா? இன்று வரை இந்தப் பயணங்கள் தொடர்கின்றன. வலைதளங்கள் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. உலகமே இந்த பரிதாபக் காட்சிகளைக் கண்டு திகைத்துப் போயுள்ளது. மத்திய நிதியமைச்சர் கேள்வி கேட்பவர்கள் ஏன் அவர்கள் சுமைகளைச் சுமந்துகொண்டு அவர்களுடன் நடந்து செல்லக்கூடாது என்று ஏகடியம் பேசுகிறார். பிரெஞ்சுப் புரட்சிக்கான காரணங்கள் உள்ளன; ஆனால் அப்படி எதுவும் நடக்காது போலத்தான் தெரிகிறது.
**நலிவுற்றோருக்கு உதவி**
ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே அனைத்து பொருளாதார நிபுணர்களும், நோபல் பரிசு வாங்கிய மேதைகளும், உடனடியாக பொருளாதார நலிவுற்றோருக்கு மாதம் ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ரூபாய் நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டும், இதன் மூலம் அவர்கள் வறுமை நிவாரணம் பெறுவதுடன், பொருளாதார மந்த நிலை உருவாவதையும் தவிர்க்கலாம் என்றுதான் சொல்லி வருகிறார்கள். அதற்காக அமெரிக்கா போல மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் ஜி.டி.பி-யில் பத்து சதவிகிதம் வரை ஒதுக்கலாம் என்று கூறி வந்தார்கள். பிரதமர் மே 12ஆம் தேதி தொலைக்காட்சியில் தேசத்துக்கு உரையாற்றியபோது ஜி.டி.பி-யில் பத்து சதவிகிதம் இருபது லட்சம் கோடி ரூபாய் பொருளாதார தற்சார்பிற்காக செலவழிக்கப்படும் என்றார். இதில் நலிவுற்றோர் நிவாரணமும் இருக்கும் என்றார்.
ஆனால், இதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும்போது நலிவுற்றோருக்கு, ஊரடங்கால் ஊதியம் இழந்தோருக்கு நேரடியாக எந்த பண உதவியையும் அறிவிக்கவில்லை. இவ்வாறு செய்யுமாறு பொருளாதார அறிஞர்கள் தேசிய ஊடகங்களில் எழுதியதையும், எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியதையும் அரசு சிறிதும் பொருட்படுத்தவில்லை. முற்றிலும் புறக்கணித்தது. உண்மையில் இந்த இருபது லட்சம் கோடி ரூபாயில் பெரும்பகுதியை அரசு செலவழிக்கவே போவதில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை. அதில் ஒரு பகுதி ஏற்கனவே பட்ஜெட்டில் செலவாக ஒதுக்கியிருந்தது. மற்றொரு பகுதி அரசு வங்கிகளுக்குத் தரும் உத்தரவாதம். இப்படியாக ஒரு ஜோடனையை மத்திய அரசு செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது குரூர நகைச்சுவை என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.
**தனியார்மயமாக்கல், சட்டங்களை மாற்றுதல்**
இது போன்ற உதவிகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் பல தடாலடி முடிவுகளையும் அரசு தொடர்ந்து வெளியிடுகிறது. உதாரணமாக ராணுவத் தளவாட உற்பத்தி, கரிச் சுரங்கம் போன்ற பல தொழில்களில் தனியார் பங்கேற்பைக் கடுமையாக அதிகரித்துள்ளது. விமான நிலையங்களை தனியார் நிர்வாகத்துக்குஏலத்துக்கு விடுகிறது. தொழிலாளர்கள் வேலை நேரத்தை அதிகரிக்கிறது. இவையெல்லாம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடந்தனவா, எதிர்க்கட்சிகளின், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் பெறப்பட்டனவா என்பதெல்லாம் தெரியவில்லை.
நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாகவே இயங்குவதாகப் பரவலாக ஓர் எண்ணம் உருவாகிவிட்டது. ஊடகங்கள் பல அரசுக்கு ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றன; விவாதிக்கின்றன.
இந்த நிலையில் அரசு எதை நினைத்தாலும் செய்யலாம்; யார் விமர்சித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடி என்ற தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட காலத்திலிருந்தே பல முடிவுகளையும் அவர் தனியாகவே வெளியிடுகிறார். கேபினட் என்னும் அமைச்சரவை விவாதித்ததாகக் கூட தகவல்கள் வருவதில்லை. அரசின் செயல்பாடுகளுக்கு விவாதங்கள், கலந்தாலோசனைகள், விமர்சனங்களுக்குச் செவிமடுத்தல், விளக்கம் கூறுதல் ஆகிய அம்சங்கள் முற்றிலும் அந்நியமாகிவிட்டன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிரதமர் நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
தேர்தல் ஜனநாயகம் என்பதைவிட இதைத் தேர்தல் எதேச்சதிகாரம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எதேச்சதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று மக்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.
**((கட்டுரையாளர் குறிப்பு ))**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
�,”