ஸ்ரீராம் சர்மா
உலகமெங்கும், லிஃப்ட் எனப்படும் தானியங்கிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கின்றன.
அவைகளுக்கென்று காலப் பிரமாணம் ஏதுமில்லை.
மனிதர்கள் நினைத்தால் ஏறும். மனிதர்கள் நினைத்தால் இறங்கும். அவ்வளவுதான். ஓர் “இயந்திரத்துக்கான விதி” என்று அதைக் கொள்ளலாம்.
ஆனால், அந்த இயந்திர விதிக்குள் மனிதர் ஒருவரையும் பிணைத்து வைத்து, அவரைப் பற்றி எந்த சிந்தனையுமே இல்லாமல் மேலும் கீழுமாக இயக்கிக் கொண்டிருக்கிறதே இந்த சமூகம்…!?
**“லிஃப்ட் மேன்”**
நகரமெங்கும் துணிக்கடைகள். ஓட்டல்கள். தியேட்டர்கள். ஷாப்பிங் மால்கள். இன்னபிற வணிக வளாகங்கள்.
ஒவ்வொன்றிலும் ஆறு மாடிகள், ஏழு மாடிகள்.
வாடிக்கையாளர்களைக் கவர அனைத்திலும் லிஃப்ட் வசதி. லிஃப்ட்டில் ஏறி இறங்காத ஏழை – பணக்காரர்களே இல்லை.
சென்னை போன்ற நகரக் கடைகளில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் ஏறி இறங்குகிறார்கள். விழாக் காலங்களில் சொல்லி மாளாது.
கசகசவென்று புகுந்து வெளியேறும் அவர்களை எல்லாம் ஏற்றி இறக்குபவர் “லிஃப்ட் மேன்”.
“லிஃப்ட் மேன்” – அந்த சின்னஞ் சிறிய வாகனத்தின் கோணவாட்டு மூலையில் ஒரு சிறிய ஸ்டூலில் அமர்ந்திருப்பார்.
கேட்கும் ஃப்ளோர்களை எல்லாம் அழுத்தி, மூடி – அழுத்தி மூடி… மேலும் கீழுமாகப் பயணிப்பார்.
நான் கவனித்த வகையில் பெரும்பாலும், கேள்விக்குறிகள் அடைத்து வைக்கப்பட்ட இறுகிய பெட்டகங்களாகவே அவர்களின் முகங்கள் இருக்கின்றன.
கொஞ்சம் அணுகிப் பேச்சுக் கொடுத்தாலும், நம் உரையாடலை சில வார்த்தைகளில் தவிர்த்துவிட்டு “உம்” எனும் இயந்திர சத்தத்தோடு பயணிப்பதை உணர்ந்திருக்கிறேன்.
லிஃப்ட் மேன் என்பவர்கள், நமது பரிதாபத்துக்கு உரியவர்கள் என்பதைக் காட்டிலும், அதீத அக்கறைக்கு உரியவர்கள் என்றே எண்ணுகிறேன்.
ஆம், வெளியே சொல்லப்படாத அவர்களது உளவியல் சிக்கல்கள் ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.
**அறுந்து தொங்கும் ஹேஷ்யங்கள்…**
பயணிகளே இயக்கிக்கொள்ளும் வகையில் ஆட்டோமேட்டிக் தானியங்கிகள் வந்துவிட்டாலும், லிஃப்ட் பயணிகளின் ஆபத்துக் காலப் பாதுகாப்புக்காக அவர்களுடன் லிஃப்ட் மேன் இருந்தாக வேண்டும் என்பது விதி.
லிஃப்ட் மேன்கள் தங்கள் பயணிகளோடு அநாவசியமாக பேசக் கூடாது என்பதும் ஒழுக்க விதிகளுள் ஒன்று.
துணி எடுக்க அல்லது ஏதேனும் பொருள்கள் வாங்க வணிக வளாகங்களுக்குப் போகும் மனிதர்கள், குடும்பத்தாரோடு அல்லது நண்பர்களோடுதான் போகிறார்கள்.
போகும்போது ஏதேனும் ஓர் உரையாடலோடுதான் லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள்.
காதல் பிரச்சினை, கல்யாணப் பிரச்சினை, பணப் பிரச்சினை, அரசியல் சூது, பிள்ளைகளின் எதிர்காலப் படிப்பு, பெரும் பணம் சம்பாதிக்கும் வழி, ஜோஸியத்தைக் குறித்த நம்பிக்கை, ஆஸ்பத்திரிக் கதை, புண்ணிய ஸ்தலங்களின் மகிமை, சினிமா கிசுகிசுக்கள், செக்ஸ் ஜோக்குகள் எனப் பல தரப்பட்ட செய்திகளோடுதான் லிஃப்டுக்குள் நுழைகிறார்கள்.
மொத்த சம்பாஷணைகளையும் மெல்லிய “ஹஸ்கி வாய்ஸ்” கொண்டே பேசிக்கொள்கிறார்கள். அவை மொத்தமும் லிஃப்ட் மேன் அறியாமலேயே அவரது மூளைக்குள் பதிகின்றன.
இலக்குக்குண்டாண ஃப்ளோர் வந்ததும், அந்த விஷயத்தைப் பாதியாக விட்டுவிட்டுச் சட்டென வெளியேறிவிடுகிறார்கள் மனிதர்கள்.
அந்த சுவாரஸியத்தின் அடுத்த பகுதி என்னவாகத்தான் இருக்கும் என்று லிஃப்ட் மேனின் மனம் அவரறியாமலேயே எண்ணிக்கொண்டேயிருக்கக்கூடும். அதற்கான விடை கிடைக்காமலே போகுமானால், அவரது மனம் அதிலேயே புரண்டுகொண்டிருக்கவும்கூடும் .
இவ்வாறான விடையில்லாக் கேள்விகள் பல்லாயிரங்களாகப் பெருகப் பெருக, அந்த எளிய மனிதரின் மனதுக்குள் பெருங் கூச்சல் எழலாம். அது ஆழ் மன நோயாகக்கூட மாறலாம். அந்த மனநோய் அவரது குடும்ப வாழ்வையும் பாதிக்கலாம்.
வேலை விட்டு, வீட்டுக்கு வரும் லிஃப்ட் மேனின் மனநிலை பிள்ளைகளிடம் காட்டப்படலாம். “ஏன்…அப்பா இப்படி எரிந்து விழுகிறார்…” என்று குடும்பம் திகைக்கலாம்.
ஒரு விடுகதையைப் போட்டு நகர்ந்தாலே… “ஐயோ, பதில் சொல்லிவிட்டுப் போ, இல்லையென்றால் எனக்குத் தலையே வெடித்துப் போகும்” என்பவர்கள் மனிதர்கள்.
ஒரு மனிதனுக்குள் ஓராயிரம் விடுகதைகள் என்றால்…? சராசரி நான்குக்கு நான்கு சதுர அடி கொண்ட ஓர் உலகுக்குள், ஒரு நாளைக்கு சராசரி எட்டு மணிநேரம் வாழும் அந்த மனிதரின் மனச்சிக்கல் எவ்வளவு ஆழமானதாக இருக்கக்கூடும்?
மன நோய் என்பது எல்லோருக்குள்ளும் இருப்பதுதான். அதன் பர்ஸன்டேஜ் மிக மிக குறைவாக இருக்கும் வரையில், அது வெளியே தெரிவதில்லை. அவரால் அவருக்கும் இந்தச் சமூகத்துக்கும் எந்த பாதிப்புமில்லை.
மாறாக, அதன் அளவு கூடக்கூட நிலைமை மோசமாகிறது. அப்படி,மன நோய் கூடிவிடும்படியான சூழலில் ஒரு மனிதரின் வாழ்க்கையை கொண்டு நிறுத்திவிடக் கூடாது என்பதே இந்தக் கட்டுரையின் வேண்டுகோள்.
**தனித்து மிதக்கும் தீவுகள்…**
ஒரு லிஃப்டுக்குள் இருக்கும் எல்லோரும் தங்களுக்குள் குசு குசுவென்று பேசிக்கொண்டேயிப்பார்கள். ஆனால், அவரோடு மட்டும் யாரும் பேசவே மாட்டார்கள். அவரும் யாரோடும் பேசிவிட முடியாது. இப்படியே எட்டு மணி நேரம் கழிக்க வேண்டும். என்ன கொடூரம் இது?
லிஃப்டிலிருந்து வெளிப்படுபவர்களில் சிலர் “தாங்க்ஸ்” என்று சொல்லியபடியே போலிப் பகட்டோடு வெளியேறுவதைக் கண்டிருக்கிறேன்.
லிஃப்ட் மேனின் முகம் பார்த்து நன்றி சொன்னவர்கள் யாரேனும் உண்டா என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள்.
பொதுவாக கார் டிரைவர்கள் தொணதொணவென்று பேசிக்கொண்டே வருவதைக் கண்டிருக்கிறோம். “உங்களைச் சுமந்து செல்லும் இந்தக் காரைப்போல நானும் ஓர் இயந்திரம் என்று எண்ணிவிடாதீர்கள்” என்னும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் அது இருக்கக்கூடும் என்று எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்?
லிஃப்ட் குறித்து எத்தனையோ ஆங்கிலப் படங்கள் வந்திருக்கின்றன. பெரும்பாலும், த்ரில்லர் வகை. ‘லிஃப்ட் மேன்’ என்றொரு அற்புதமான கன்னடப் படம் உண்டு. அதிலும், லிஃப்ட் மேன் பற்றிய கவலை பேசப்படவில்லை.
பல்லாயிரக்கணக்கான லிஃப்ட் மேன்கள். லட்சக்கணக்காண PUZZLEகளோடு நாடெங்கும் இயங்க வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
லிஃப்ட் கம்பெனிகளின் வியாபார ப்ரௌஷர்கள் அனைத்தும் பயன்பாட்டாளர்களின் நலன் குறித்தே அக்கறைப்படுகின்றன. அதனை இயக்கும் லிஃப்ட் மேன் குறித்து ஒரு வரிகூட அச்சிட்டுக் காண முடியவில்லை.
“லிஃப்ட் மேன் ஒழுக்க விதிகள்” என்று வரிசைப்படுத்தி உறுத்தி சொல்லும் லிஃப்ட் கம்பெனிகள், அவர்களின் மனநலம் குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம். அதுசரி, தொழிலாளர்களைக் குறித்து என்றுதான் கவலைப்பட்டிருக்கிறது இந்த முதலாளிகளின் உலகம்.
லிஃப்ட் மேன்களின் மன நலம் குறித்து, எல்லாம் வல்ல மனித உரிமை ஆணையம்கூட இன்னமும் யோசிக்கவில்லை என்பது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிதுரதிர்ஷ்டமும்கூட…
தீர்வுதான் என்ன?
ஒன்று:
லிஃப்டுக்குள், லிஃப்ட் மேன்களுக்கு எதிரே சின்னதாக ஒரு டிவியைப் பொருத்தி வைகலாம். லிஃப்ட் பயணிகளின் சம்பாஷணைகளிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்டுத் தன் மனம் குவிக்க அது உதவக்கூடும்.
இரண்டு:
லிஃப்ட் இயங்கும் தருணத்தில் எல்லாம், அதற்குள் புதுப்புதுப் பாடல்களை ஒலிக்கும்படி செய்யலாம். அதன் மூலம் அவர் மனம் சம்பாஷணைகளிலிருந்து வேறுபட வாய்ப்பு ஏற்படும்.
மூன்று:
லிஃப்டுக்குள் பயணிக்கும் மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளை ஹஸ்கி வாய்ஸில் பேசாமல் இருக்கலாம். ஆனால், அது நம்மாட்களால் முடியவே முடியாது.
நான்கு:
லிஃப்ட் புறப்படும் கணம்…
“அன்பார்ந்த லிஃப்ட் பயணிகளே, உங்களைச் சுமந்து செல்லும் இந்த லிஃப்ட்டை ஓட்டுபவர் திரு. செல்வராஜ். இவர் திருநெல்வேலியில் ஃபுட் பால் ப்ளேயராக இருந்தவர். பி.சுசீலாவின் குரல் இவருக்குப் பிடிக்கும்…” இப்படியான அவர் குறித்த விஷயங்களை ஒலிக்கவிடலாம்.
அதன் மூலம், நான் இயந்திரத்தோடு இணைந்தவனில்லை என்னும் ஆசுவாசம் லிஃப்ட் மேனுக்கு ஏற்படக்கூடும்.
ஒருவேளை அந்த லிஃப்ட் மேன் வேலையை விட்டுப் போய்விட்டாலும், அடுத்து வரும் லிஃப்ட்மேன் குறித்த விவரங்களை ‘சிப்’பில் மாற்றிக்கொள்ளலாம். செலவு வெறும் 500 ரூபாய்தான்.
இந்தியாவில், சுமார் இரண்டு கோடிக் கடைகள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனில், குறைந்தது இருபது லட்சம் லிஃப்ட் மேன்களாவது இருப்பார்கள்.
இது கணிசமான சதவிகிதம். அவர்களைப் பற்றி அரசாங்கங்கள் கவலை கொண்டே ஆக வேண்டும். என்.ஜி.ஓ.க்கள் அக்கறையோடு முன்னெடுக்கலாம்.
இந்தக் கட்டுரையை முடிக்கும் முன் எனது நண்பரும், யோகா குருவுமான என்.கே.டி ஜெயகோபால் அவர்களுக்கு ஃபோன் போட்டேன். நல்லவேளை அவர் எடுக்கவில்லை.
எடுத்திருந்தால்…
”எதுக்குங்க லிஃப்ட்…? என்ன பெரிய ஆறு மாடி, ஏழு மாடி? கடகடன்னு ஏறி இறங்க வேண்டியதுதானே. அதுசரி, கொஞ்ச நாளா யோகா க்ளாஸுக்கு வரலையாமே… ரொம்ப பிஸியோ…?” என்று லிஃப்டே இல்லாமல் என் பி.பி.யை ஏற்றி, இறக்கியிருப்பார்.
அன்பார்ந்த மின்னம்பலத்தார்களே…
அடுத்த முறை லிஃப்டில் ஏறும்போது, லிஃப்ட் மேனிடம் அவரது பெயரை அக்கறையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவரை நோக்கிய அன்பான புன்சிரிப்போடு வெளியேறுங்கள்.
முடிந்தால், அவரோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளுங்கள்.
சக மனிதர்களின் மேல் காட்டப்படும் அக்கறையைப் போலவொரு புண்ணியம் இந்த மண்ணில் வேறு இல்லை.
***
(கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ovmtheatres@gmail.com)�,”