ப்ரிஸ்ட்லி நகர் – பேரவலம் !

public

ஸ்ரீராம் சர்மா

பூவிருந்தவல்லிக்கு பூனமல்லி – திருவல்லிக்கேணிக்கு ட்ரிப்ளிகேண் என்பது போல தமிழகம் முழுவதும் தங்கள் வாய்க்கு வந்ததை பெயராக வைத்துவிட்டுப் போனார்கள் அன்று இந்த மண்ணை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்கள்.

அவர்களைச் சொல்லித் தப்பில்லை. ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அஞ்சல் துறை முதற் கொண்டு சகலமும் அதனைத் தூக்கிச் சுமக்க இரட்டை உச்சரிப்புகளில் ஊர்ப் பெயர்கள் அனைத்தும் அழகிழந்திருந்தன.

நல்லவேளையாக தற்போது தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டு ஆங்கில எழுத்திலும் தமிழ் உச்சரிப்பு வருவதைப் போலவே எழுதி அழைத்தாக வேண்டும் என அரசாங்க ஆணையாகவே வெளியிட்டு விட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருக்கும் – அதன் இயக்குனருக்கும் முதலில் நமது நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

ஆனால், அதைவிட பேரவமானம் ஒன்று நமது தலை நகரத்தின் நெற்றியிலேயே எழுதி ஒட்டப்பட்டிருக்கிறதே ! அதைப் பற்றி எப்போது கவலைப்படப் போகிறோம் ? அதை என்று ஒழிக்கப் போகிறோம் ?

உடனடியாகக் களைந்தாக வேண்டிய அந்தப் பேரவலத்தை – அதன் பின்னணியை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டியது நமது கடமையாகிறது .

**குற்றப் பரம்பரை சட்டம். (CRIMINAL TRIBES ACT)**

அன்றைய அடிமை இந்தியாவில் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து நாடெங்கும் கலகக் குரல்கள் எழுந்தன.

அவற்றை ஒடுக்கி ஒழிப்பதற்குப் பற்பல சூழ்ச்சிகளை செய்தார்கள் அன்னியர்கள். அதன் உச்சமாகக் கொண்டு வரப்பட்டதுதான் குற்றப் பரம்பரைச் சட்டம்.

இந்தக் கொடுஞ்சட்டம் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் அமல்படுத்தப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தினால் அவமானப்படுத்தப்பட்டனர்.

1871 ல் வட இந்தியாவில் புனையப்பட்ட அந்த அயோக்கிய சட்டம் 1876 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் அமல்படுத்தப்பட்டு கடைசியாக தமிழகத்தில் எட்டிப் பார்த்தது.

ஆண்டு 1911. அதிகம் பாதிக்கப்பட்டது தென் மாவட்டங்கள்.

வேலு நாச்சியார் – மருது பாண்டியர்கள் காலம் தொட்டே அது விடுதலை வீரியம் கொண்ட பூமி என்பதை தங்கள் ரெக்கார்டுகளில் மூலமாகத் தெரிந்து கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களைத் தங்கள் முதல் டார்கெட்டாக வைத்தார்கள்.

அந்தப்பகுதி வாழ் மக்கள் பிரித்தடிக்கப்பட்டனர். ‘கச்சேரி’ எனப்பட்ட போலீஸ் பூத்களில் அன்றாடம் கைரேகை பதிக்க வேண்டும். கிழிக்கப்பட்ட கோடுகளுக்குள் வாழ்ந்து கொள்ள வேண்டும் என நசுக்கப்பட்டனர்.

அத்தியாவசிய பாத்திரங்கள் தவிர ஆயுதமாகக் கூடிய அனைத்தும் பிடுங்கப்பட்டன. கொடுக்கப்படும் ரேஷனைப் பொங்கித் தின்று கொண்டு ஆடு மாடுகள் போல் பட்டிகளில் அடைந்து கொள்ள வேண்டும்.

**ராத்திரி சீட்டு**

அக்கம்பக்கத்துச் சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதுகளுக்கு போக வேண்டும் என்றாலும் கூட ஆங்கே ‘மேனேஜர்’ பொறுப்பிலிருந்த வெள்ளையனிடம் ‘ராத்திரி சீட்டு’ பெற்றுக் கொண்ட பின்பே செல்ல முடியும். விடிவதற்குள் வந்தாக வேண்டும் இல்லையென்றால் இங்கே குடும்பம் குறைக்கப்பட்டிருக்கும்.

உணர்வுபூர்வமான மக்கள் மேல் செலுத்தப்பட்ட உளவியல் போர் அது. குற்றப்பரம்பரை சட்டம் என்பது இந்தியர்களின் மேல் ஏவப்பட்ட பேரவமானம். சொல்லப் போனால் இப்படிப்பட்ட சட்டத்தைப் புனைந்ததுதான் குற்றம்.

அன்றாடம் வைக்கும் கைரேகையின் மூலம் “நீ நம்பத்தகாதவன். நீ ஒரு குற்றவாளி என்பதை நீயே ஏற்றுக் கொள்கிறாய்…” என எளிய மனிதர்களின் மனதில் ஆழப் பதிக்க முயன்றது அதிகாரத்தின் திமிர்க் குற்றமல்லாமல் வேறென்ன ?

இந்தக் கேவலத்தை ஏற்க மறுத்து தமிழகத்தில் கலகம் செய்தார்கள் நம் முன்னோர்கள். சுட்டுத் தள்ளினார்கள் வெள்ளையர்கள். ஏறத்தாழ 20 உயிரை பலி கொண்டனர்.

வெள்ளையர்களின் துப்பாக்கிகளோடு – தங்களிடம் இருந்த வில் , ஈட்டி , வேலாயுதங்களைப் பொருத்திச் சமராட முடியாத தமிழ்ப் போராளிகள் மறைந்திருந்து தாக்கத் துவங்கினார்கள். திணறிப் போனது கூலிப்படை.

**உள் நாட்டுக் கடத்தல்**

கலகம் மேலும் பரவிவிடக் கூடாது என்று பதட்டப்பட்ட அன்னியர்கள் ஆலோசனை கலந்தனர். வீரியமான போராளி மக்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து வேரும் வேரடி மண்ணுமாகப் பிடுங்கி எடுத்து விட்டால் அடங்கி விடுவார்கள் எனக் கணக்குப் போட்டனர்.

உள் நாட்டுக் கடத்தலாக நாடெங்கும் பிரித்து அடித்தனர். அவ்வாறு ஆரம்பத்தில் தென் மாவட்டங்களை சார்ந்த 32 கிராமங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்டவர்கள் விழுப்புரம் பகுதியில் வந்து விழுந்திருக்கிறார்கள்.

முற்றிலும் புதிய நிலப்பரப்பு . உணவை உண்டாக்குவதும் – பெண்டு குழந்தைகளை உயிரோடு காப்பாற்றுவதுமே முதல் கவனமாக ஆகி விட தலையெழுத்தே என வாழ்ந்து கொண்டார்கள் முன்னோர்கள்.

அவர்களின் அன்றைய குடியிருப்புக்கு அன்றிருந்த ஏதோவோர் நவாபின் பெயரால் ‘ஹசீஸ் நகர் செட்டில்மெண்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

நாளடைவில் கொஞ்சம் பேர் பிரிக்கப்பட்டு ‘பம்மல்’ என்னுமிடத்தில் வைக்கப்பட்டார்கள். நீண்ட நாட்கள் ஓரிடத்திலேயே வைத்திருப்பது நல்லதல்ல என செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிடமிருந்து அறிவுறுத்தல் வர…

பம்மலில் இருந்தவர்களை மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்தார் அன்றைய சென்னை மாகாண லேபர் கமிஷனராக இருந்த வெள்ளை அதிகாரி ‘பிரிஸ்ட்லி’.

**பிரிஸ்ட்லி நகர் செட்டில்மண்ட் **

சென்னை ஓட்டேரி அப்போது ஆளரவமற்ற புளியங்காடாக இருந்திருக்கிறது. அங்கே கொண்டு வந்து ஒரு பகுதியினரைக் குவித்தார் ப்ரிஸ்ட்லி. அந்த வெள்ளையரின் பெயரால் அமைந்ததுதான் ‘பிரிஸ்ட்லி நகர் செட்டில்மெண்ட்’.

இது ஏதோ அடிமை இந்தியாவில் நடந்த அவலம்தானே என்று கடந்து போய்விடாதீர்கள். விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் ஏறத்தாழ 270 குடும்பங்களோடு இன்னமும் அதே அவலப் பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கிறது அங்கே. சென்று பாருங்கள்…

அன்றடைந்த அழுக்கோடு தொங்கிக் கொண்டிருக்கும் ‘பிரிஸ்ட்லி நகர் செட்டில்மெண்ட்’ என்னும் அந்தப் பெயர்ப் பலகை சுதந்திர இந்தியாவை கேலி செய்தபடி இருப்பதைக் காணச் சகிக்கவில்லை.

கேட்கிறேன். யாருடைய மண்ணில் யார் – யாரை செட்டில் செய்வது ? இந்த சுதந்திர மண்ணில் உங்கள் அடிமை நாமகரணம் எங்களுக்கு எதற்கு ?

மனிதாபிமானத்தோடு உதவிய ஆங்கிலேயர்களும் இருந்தார்கள். பேச்சிப்பாறை அணையைக் கட்டிய மூக்கன் துரை எனப்படும் எஞ்சினியர் ஹம்ப்ரே போன்றவர்களை இன்றும் நாம் நன்றியோடு நினைவு கூறாமல் இல்லை. அதற்காக, செட்டில்மண்ட் என்ற பெயரில் பிரித்து அடிக்கப்பட்ட அவமானத்தை எல்லாம் தூக்கிச் சுமக்க முடியாது.

**அவமான முகவரி**

நுழைவாயில் சுவரில் சாய்ந்தபடி பழிக்கும் அதன் துருப்பிடித்த தகர உதடுகள் அந்தமான் வரை நீள்கிறது. ஆம், அங்கும் ஓர் ‘செட்டில்மெண்ட்’ இருக்கிறது. அனைத்தும் அழிக்கப்பட்டாக வேண்டும்.

குற்றப்பரம்பரை சட்டம் என்பது இந்தியர்கள் மேல் செலுத்தப்பட்ட உளவியல் போர் என்றால் அதன் நீட்சியாக இன்றும் அவலமாடிக் கொண்டிருக்கிறது ‘செட்டில்மெண்ட்’ என்னும் அந்தக் கெட்ட வார்த்தை.

இந்த சுதந்திர மண்ணில் அந்த அவமான முகவரி தூக்கி எறியப் பட்டாக வேண்டும். கனவிலும் ஏற்க முடியாத அந்தப் பேரசிங்கத்தை உடனடியாகத் துடைத்தெறிந்தாக வேண்டும்.

அரசாங்கத்தின் உடனடிக் கவனம் பதிய வேண்டியது ‘பிரிஸ்ட்லி நகர் செட்டில்மண்ட்’ பலகையின் மீதுதான்.

காரணம், அது சுதந்திர இந்தியாவையும் அதன் இறையாண்மையையும் அதன் குடிமக்களையும் நேரடியாக அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆம், செட்டில்மெண்ட் என்ற வார்த்தையும் குற்றப்பரம்பரை என்பதும் ஒன்றுதான். குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்பது உண்மையானால் அதன் இன்னொரு பரிமாணமான செட்டில்மண்ட் என்ற பேரவலமும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் .

**எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது அவசியம் என்றால் எப்படி உச்சரிக்கப்படக் கூடாது என்பதும் அவசியம் அல்லவா ?**

இன்று அந்த நகரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆணிவேர் மதுரைக்கு சொந்தமானது. சங்கம் வளர்த்த மதுரையம்பதி மண்ணில் வாழ்ந்திருந்த நமது முன்னோர்கள் தன்மானமிக்கவர்கள். வேலு நாச்சியார் – மருது பாண்டியர்கள் வழி வந்த வீரம் செறிந்த விடுதலைப் போராளிகள்.

இந்த மண்ணையும் மக்களையும் அன்னியர்களிடமிருந்து காக்க இன்னுயிர் ஈந்தும் போராடிய மாமல்லர்கள் அவர்கள்.

அப்படிப்பட்டவர்களின் குடியிருப்புக்கு ‘செட்டில்மண்ட்’ என்ற அடிமைச் சொல் பொருத்தமற்றது. இழுக்கு சேர்க்கக் கூடியது.

உடனடியாக அந்தப் பெயரை அகற்றிவிடுவது நம் முன்னோர்களுக்கு நாம் செய்தாக வேண்டிய நன்றிக் கடனாகிறது.

இந்த நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் செவி மடுக்கும் என நம்புவோம் !

((**கட்டுரையாளர் குறிப்பு**))

விநாயக் வே.ஸ்ரீராம் – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *