தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆம்பன் புயல் உச்ச உயர் தீவிர புயலாக வலுப் பெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 18) தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக மாறியது. இதற்கு ஆம்பன் என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆம்பன் அதிதீவிர புயல் வட திசையில் நகர்ந்து இன்று காலை உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று மத்திய வங்கக் கடலின் தென் பகுதியில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வரையிலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும். தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நாளை காற்றின் வேகம் அதிகரித்து வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 170 முதல் 180 கிலோமீட்டர் வரையிலும் இடையிடையே 200 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும். அதுவே வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வரையிலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும். இதன் வேகம் மே 20ஆம் தேதி மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே கடல் அதி சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் வரும் 20ஆம் தேதி வரை மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புயல் வரும் 20ஆம் தேதி மாலை மேற்கு வங்க திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் 17 தேசிய பேரிடர் குழு அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறிய நிலையில், இரவு 11.30 மணியளவில் வீசத் தொடங்கிய அதிவேக காற்றால் ராமேஷ்வரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,