தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு சீல் வைத்தது.
இந்நிலையில் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வேதாந்தா நிறுவனம், தமிழக அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரது சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த ஜனவரியில் விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது. “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்” என்று கூறி 850 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.
வேதாந்தா நிறுவனம் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் தூத்துக்குடி பகுதி மக்கள் இந்த தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி இன்று தூத்துக்குடியில் மட்டும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
[ஸ்டெர்லைட்: என்ன நடக்கும்?](https://minnambalam.com/public/2020/08/18/14/tuticorin-sterlite-case)
**-கவிபிரியா**�,