ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

Published On:

| By Balaji

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு சீல் வைத்தது.

இந்நிலையில் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி ஆலை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டது..

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share