ஒட்டகக் குட்டியைத் திருடி காதலிக்குப் பிறந்தநாள் பரிசாக அளித்த காதலனும் காதலியும் போலீஸில் சிக்கியுள்ளனர்.
துபாயில் வசித்து வரும் அமீரக வாலிபர் ஒருவரின் காதலிக்குப் பிறந்தநாள் வந்தது. எனவே, அன்று ஏதாவது ஒரு பரிசளிக்க வழங்க வேண்டும் என அவர் திட்டமிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்குச் சென்று அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் ஒட்டகக் குட்டி ஒன்றை எடுத்து வந்து காதலிக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்.
இந்த நிலையில் ஒட்டகப் பண்ணையின் உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகம் ஒன்றின் குட்டி, பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
போலீஸார் காணாமல் போன ஒட்டகக் குட்டியைத் தேடி வருவதாகத் தகவல் கிடைத்ததும் அமீரக வாலிபர் அதிர்ச்சியடைந்தார். போலீஸுக்கு பயந்து காதலியிடம் இருந்த ஒட்டகக் குட்டியை வாங்கி அதைத் திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார். அதன் பின்னர் போலீஸுக்கு போன் செய்து ஒட்டகக் குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் நிற்பதாகக் கூறினார்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினார். எனவே சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் ஒட்டகக் குட்டியைத் திருடி தனது காதலிக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் இதற்காக இரவு நேரத்தில் அந்த பண்ணைக்குச் சென்று திருடியதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் ஒட்டகக் குட்டியைத் திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தைப் பரிசாகப் பெற்ற காதலியையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
**-ராஜ்**�,