மாஃபா பாண்டியராஜன்: திமுகவினருக்கு உத்தரவிட்ட ஸ்டாலின்

Published On:

| By Balaji

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதான விவகாரம் தொடர்பாக இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை. மிசா காலத்தில் சிறை சென்றார். அவர் ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடிவாங்கவில்லை. தனது தவறான செய்கைகளுக்காகவே அடிவாங்கினார்” என்று கூறி மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துக்கள் பகிரப்பட்டன. சென்னை அண்ணா நகரில் அவரின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அமைச்சரின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தை தவிர்க்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 7) வெளியிட்ட அறிக்கையில், “சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில் வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத எத்தனிக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

நான் மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம். அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டமன்ற ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்களால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. தியாகம் செய்து, துன்பங்களை தாங்கி பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள். எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்க வேண்டும்” என்று திமுகவினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share