நாடகமே! நடு முதுகே!

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

நதி எனில் அது இரு கரை தாங்கியே ஓட வேண்டும்.

ஒருபக்கமாய் கரை உடைத்துப் புரண்டு புகுமெனில் நதிக்கரையோர நாகரிகங்கள் அழிந்துபடும். முடிவில், கசடுகளே மிஞ்சும்.

அன்றந்த வைகை நதிக் கரை மீறி பெருக்கெடுத்ததையும், அதற்கு அணைகட்ட முயன்ற அரிமர்த்தன பாண்டிய மன்னனின் உத்தரவையும், முதுகிழவியாம் வந்தியம்மையின் பதைபதைப்பையும், அவளுக்காக – அவளது பிட்டுக்காக மண் சுமந்து முதுகடிபட்ட ஈசனின் ஆடலையும், அதுகுறித்து மாணிக்கவாசகப் பெருமான் மனமுருகிப் பாடியதனைத்தையும் நாம் புராணங்களாக மட்டுமே கொண்டு கடந்து விடுகிறோம்.

அல்ல, அவையனைத்தும் எதிர்கால மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், மண் உள்ள வரையில் இந்த மனித வாழ்க்கை என்னவெல்லாம் காண வேண்டுமோ, எப்படியெல்லாம் கவனித்து கரை சேர வேண்டுமோ… அத்துணைக்கும் உதாரணமாகவும், உட்பொருளாகவும் நிற்பதாகவே கொள்ள வேண்டும்!

அப்படித்தான், தமிழ் நாடக உலகத்தில் வரலாற்று புராண நாடகங்கள் எழுச்சியோடு கொண்டாட்டப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சமூக நாடகங்களுக்குக் குறைவில்லை எனினும் அன்றைய ரசிகப் பெருமக்கள் இரண்டையும் சரிசமமாகக் கொண்டாடி நின்றார்கள், இரு கரை கொண்ட நதி ஒன்று அழகுற அசைந்து ஓடுவதைப் போல…

எண்ணிலடங்கா நாடக விற்பன்னர்கள் இந்த மண்ணில் முன்னோடிகளாக நின்றிருந்தார்கள் எனினும், எனக்குத் தெரிந்து ஆர்.எஸ்.மனோகர், ஹெரான் ராமசாமி, ருத்ராபதி போன்ற ஈடு இணையற்ற படைப்பாளர்களை என்.கே.டி. கலா மண்டபத்தில் எனது பள்ளிப்பருவத்தில் விழி விரியக் கண்டு வியந்திருக்கிறேன்.

கூடவே, தென்சென்னை – வடசென்னை படைப்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சமூக நாடகங்களை அரங்கேற்றி வந்தார்கள்.

எண்பது, தொண்ணூறுகளில் மொத்தமும் மாறிப் போனது.

சென்னை சபாக்கள் அதன் பாரம்பரிய நெறிமுறைகளை இழந்து சிரிப்பு – துணுக்கு நாடகங்களுக்கு மட்டுமே கதவு திறந்தது. மக்களை கலகலவென சிரிக்க வைத்து கலெக்‌ஷன் பார்க்கும் கூடாரமாகிப் போனது.

கலை என்னும் நதி ஒருபுறமாக புரண்டோடிக் கசடு கொண்ட காலம் அது எனலாம். அந்த நாட்களில், ஒருசில படைப்பாளர்கள் மட்டுமே உணர்வுபூர்வமாக மரபுவழி நாடகத்தை விடாப்பிடியாகக் கொண்டிருந்தார்கள்.

அதில், குறிப்பிடத்தக்கவர் ஆசான் “நாடகப்பணி” அருணகிரி!

சேலத்தின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் இருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்து, தனது மொத்த வாழ்வையும் புராண, சரித்திர நாடகங்களுக்காகவே ஒப்புக்கொடுத்த – காத்திரமான நாடகாசிரியரான “நாடகப்பணி” அருணகிரி அவர்கள் இறுதிக் காலத்திலும் வறுமையோடு மறைந்து போனது தமிழ் மேடையுலகத்தின் அவலம்! அபத்தம்!

பிரசித்தி பெற்ற தனது ‘பீஷ்மரின் சபதம்’ நாடகத்தை தமிழகமெங்கும் நடத்திக் கொண்டிருந்தார் ஆசான் அருணகிரி. பெரிய நடிகர்கள் எல்லாம் அவரது ட்ரூப்பில் இருந்தார்கள்.

கே.கே. சுந்தர், எஸ்.ஆர்.சரோஜா, மயிலை மோகன், தீனபந்து, சீனிவாசன், நந்தகுமார் இன்னும் எத்தனையோ பேர்… ஆசானின் மரபார்ந்த தமிழ் வசனங்களை உணர்ச்சி பொங்க ஏற்ற இறக்கமாய் வெளிப்படுத்தி மேடையில் தீ மூட்டுவார்கள். கூடவே, பொடியன் நானும்.

இருப்பதிலேயே சிறுவன் என்பதாலும், நாடகத்தின் மொத்த வசனங்களும் எனக்கு மனப்பாடம் என்பதாலும் அருணகிரி சாருக்கு என் மேல் வாஞ்சை அதிகம்.

ம்யூஸிக் அகாடெமியில் அவர் போராடி வாங்கிய ‘டேட்’ ஒன்றில் பீஷ்மரின் சபதம் நடக்கவிருந்தது. அகாடெமியில் நாடகம் என்பதால் ‘ஸ்பெஷல் ரிகர்ஸல்’ வைத்தார்.

எனக்கு ஆறு சீன்ஸ் கொண்ட ரோல் ஒன்றைக் கொடுத்து “தைரியமா செய்…” எனத் தட்டிக் கொடுத்தார். இன்றைய சின்னத்திரை நாகலக்ஷ்மி அன்று எனக்கு ஜோடி. தலைகால் புரியவில்லை. நண்பர்களை எல்லாம் அகாடெமிக்கு வரச் சொல்லி விட்டேன்.

நாடகம் தொடங்குமுன் திரைக்கு உள்ளே சன்னமாக மணியடித்து பூஜை நடந்து கொண்டிருந்தது.

நான் மட்டும் நைஸாக நகர்ந்து மெல்லிய மேடை வெளிச்சத்தில் மூடிய திரையை நெருங்கினேன். படுதாவில் இருந்த ஓட்டை ஒன்றின் வழியே நண்பர்களைத் தேடினேன்.

அதோ சென்டர் சீட்டில் குண்டு ரகு, தங்கை ரஞ்சனியோட வந்துட்டான். அடுத்த ரோவில் தங்கவேலுவும் அருணா நர்சரி பரமனும். ஜெயகோபாலும் சசியும் வரலையா? மணவாளன் எங்கேருக்கான்… ஏதேதோ யோசனைகளில் ஓட்டைகளினூடே தேடிக்கொண்டிருந்தவனின் நடு முதுகில் இடிபோல இறங்கியது அருணகிரி ஆசானின் இடது கை.

“சொத்தேர்ர்ர்….”

“உள்ளே போ” காதருகில் சன்னமாக கர்ஜித்த அந்த பொல்லாத ஆசானின் முகம் பார்க்கப் பயந்து விருட்டென்று ஓடி எனது வேடத்துள் புகுந்து திரை மறைவில் விரைத்து நின்றுகொண்டேன்.

அன்றைய ஆறு சீனிலும் நானும் – நாகலக்ஷ்மியும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தோம். பெரிய ஆர்டிஸ்டுகள் நடித்த அந்த நாடகத்தில் எங்களுக்கும் ஈக்வலான கிளாப்ஸ் அள்ளியது.

நாடகம் முடிந்ததும், விறுவிறுவென க்ரீன் ரூம் போனவன்… தேங்காய் எண்ணெயைச் சரித்து, முகத்தில் அறைந்து அப்பியபடி மேக்கப் கலைத்து அந்த அஞ்சு ரூபா சம்பளத்தைப் புறக்கணித்து விருட்டென்று வெளியேறிப் போனேன்.

மறுநாள்…

வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு கிரவுண்டில் வாலிபால் ப்ராக்டீஸ்ஸில் இருந்த என்னை வந்து பிடித்துவிட்டார் நாடகப்பணி அருணகிரி.

“என்னடா சீராமா… கோவிச்சுக்கிட்டு போயிட்டியா?”

முகம் திருப்பிக்கொண்டு கேட்டேன்…

“என்ன சார் தப்புப் பண்ணிட்டேன்… பூஜைக்கு நிக்காதது ஒரு தப்பா?”

“அப்படி இல்லப்பா, கொஞ்சம் பொறுமையா கேட்டுக்குவியா?”

“…………”

“இந்த காலத்துல என்ன மாதிரி ஆளுங்களுக்கு டேட் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா… புராண நாடகங்களுக்கு கூட்டம் வராது, கிளம்புங்க ப்ளீஸ்ன்னு துரத்துறாங்க. என் சக்திக்கு மீறி போராடி வாங்கிய அகாடெமி டேட்டுப்பா அது…”

“…………”

“ஸ்க்ரீன் தூக்கறத்துக்கு முன்னால இடுக்கால எட்டிப் பார்க்கக் கூடாதாம். அப்படி எட்டி எட்டிப் பார்த்தா கூட்டம் ஏறாதுன்னு சொல்லுவாங்கப்பா…”

“…………”

“இந்த மாதிரி சென்டிமென்டெல்லாம் எனக்கு ஆகாதுன்னாலும், எத்த தின்னா பித்தம் தெளியும்ன்னு சுத்திக்கிட்டு வரேன். என்ன செய்ய? இந்த நாடகத்தால என்னோட சேர்த்து இருபது பேருக்காச்சும் சம்பளம் கிடைக்குதே! சரி, நான் செஞ்சது தப்புத்தான். விட்டுக்குடுப்பா…”

“ஐயோ, இதையெல்லாம் முன்னவே சொல்லிக்குடுத்திருந்தா அப்படி செஞ்சிருக்க மாட்டேன் சார்… மன்னிச்சிருங்க சார்…”

“கடங்காரப் பயலே… இந்தாப் பிடி உன் அஞ்சு ரூபா!”

அந்தி கிழித்த வானம் பின்புலமாய் விரிய, எட்ட நடை போட்டு போய்க் கொண்டிருந்தார் ஆசான் நாடகப்பணி அருணகிரி.

காலச்சக்கரம் மெல்லச் சுழன்று என் விதியை வந்து முட்டியது.

2010 முதல் எனது படைப்பான “வேலு நாச்சியார்” ம்யூஸிக்கல் தியேட்டரை நாற்பது நடிகர்களோடு அரங்கம் நிறைய மேடையேற்றி வருகிறேன். தமிழ் நாடக உலகம் மீண்டு எழுந்து விடும் எனும் நம்பிக்கை கொள்கிறேன்.

அரங்கம் நிறையாமல் போனதும் உண்டு. அன்று மனம் படும்பாடு சொல்லி மாளாது. புதிதாக வந்து சேர்ந்த அமெச்சூர் நடிகர்கள் யாரேனும் திரை இடுக்கில் பார்த்திருப்பார்களோ என்ற எண்ணம் வந்து போகும் அந்த தருணங்களில் வேகமாக தலைமுடி கசக்கியபடி சிரித்துக் கொண்டே ஆசானை நினைத்துக்கொள்வேன்.

இணையற்ற எழுத்தாற்றலோடு, வெள்ளந்தியாய் வாழ்ந்து, கேட்பாரின்றி மறைந்து போன ஆசான் அருணகிரி பெயரால் விருது ஒன்றை உண்டாக்கி, இன்றைய “விஸ்காம்“ மாணவர்களுக்கு அளிக்க எண்ணம் உண்டு.

இதுபோன்ற உணர்வுபூர்வமான கட்டுரையை ஒரே மூச்சில் தொடர்ந்தெழுத மனமும், விரல்களும் அதிவிருப்பம் கொண்டாலும், முதுகுத்தண்டு வலி காட்டி விடுகிறது.

அந்த நேரம், இடது கை வளைத்து நடுமுதுகு நிரடும் தருணம், என்னிரு ஏழைக் காதுகளில் திடுமென அதிர்ந்தொலித்து விடுகிறது அந்த…

“சொத்தேர்ர்ர்….”

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share