yபத்தாம் வகுப்பு தேர்வு ரத்து: முழுப் பின்னணி!

public

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 9) அறிவிப்பு வெளியிட்டார். இது வெகு எளிதாக பெறப்பட்ட அறிவுப்பு அல்ல. நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகே இப்படி ஓர் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

இன்று (ஜூன் 10) பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்பாட்டம் அறிவித்திருந்த நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தமிழக அரசுக்கும் உளவுத் துறை மூலம் ஒட்டுமொத்த மக்களின் மனோபாவம் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு கடந்த மே 12ஆம் தேதியன்று 9.79 லட்சம் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் பொதுத்தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு திமுக மற்றும் பல்வேறு தரப்பட்ட கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினால் அந்த தேர்வை 15 .6.20 அன்று நடத்துவதாகத் தள்ளிவைத்தது. இதைத் தொடர்ந்து மே 20ஆம் தேதி மீண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 15.6.2020 முதல் 26.6.2020 வரை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு மத்திய அரசு அறிவித்த நான்காம்கட்ட ஊரடங்கு காலகட்டத்திற்குள், மத்திய அரசின் மே 17ஆம் தேதியிட்ட அறிவிப்புக்கு விரோதமானது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு மே 30ஆம் தேதி, 1.6.2020 முதல் 30.6.2020 வரை அமல்படுத்தப்படும் ஊரடங்குக்கான, நடைமுறைப்படுத்த வேண்டிய ஆணைகளை வெளியிட்டது. இந்த ஆணையில் பள்ளிக்கல்வி, கல்லூரி கல்வி குறித்து வேறு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும், அந்த அரசு மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர வகுப்பினர் அனைவரையும் கலந்து ஆலோசித்து , அப்படி கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஜூலை 2020-க்குப் பிறகு பள்ளிகளைத் தொடங்குவது, வேறு நடவடிக்கை எடுப்பதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து 31.5.2020 அன்று தமிழக அரசு மத்திய அரசின் ஆணையின் அடிப்படையில், “பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்றும் நேரடியாக ஆணையிட்டது. ஆனால், பள்ளிக்கல்வி நிர்வாகமோ தனது 20.5.2020 தேதியிட்ட பழைய ஆணையின்படி தேர்வை நடத்துவது என்றும், அந்த தேர்வில் 9.79 லட்சம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் 2.21 லட்சம் ஆசிரியர்களும் மேலும் இரண்டு லட்சம் வேறு பணியாளர்களும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், அதுமட்டுமல்லாமல் 8.41 லட்சம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அதற்கு இரண்டு லட்சம் ஆசிரியர்கள் மற்றும் வேறு பல பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், அதற்காக பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 97, 900 வகுப்பறைகள் தயார்படுத்தப் படுவதாகவும் கூறியது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அந்த மனுவில், “மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு காப்பகங்களில் (ஹாஸ்டல்கள் )படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுப்படி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் இந்தத் தேர்வு அறிவிப்பு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கிறது.

ஐநா சபையின் கீழ் உள்ள குழந்தைகளுக்கான அமைப்பில் குழந்தைகளுக்கான உரிமையாக வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமையும் மறுக்கப்பட்டு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு நடத்துவது என்றால் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு , மாணவர்களுக்கு இரண்டு வார காலம் நேரடி சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, அதன் பிறகு தேர்வுகள் நடத்துவதே பொருத்தமாக இருக்கும். எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவுக்குப் பின்னாலும் திமுகவின் முயற்சி இருந்தது.

இந்த மனுவை ஜூன் 8 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் இந்த மனுவுக்கு தலைமை அரசு வழக்கறிஞர் பதிலளிக்கக் கேட்டுக் கொண்டனர். அன்று பிற்பகல் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், “தற்சமயம் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைவாக இருக்கிறது. அது ஜூலை மாதம் முதல் வாரத்தில் இரண்டு லட்சம் அளவில் அதிகரிக்க கூடும். அக்டோபர் மாதத்தில் 10 லட்சமாக அதிகரிக்கும். அப்படி என்றால் அது அந்த சமயத்தில் தேர்வுகள நடத்துவது கடினமாக இருக்குமென்பதால், இப்போதே தேர்வுகள் நடத்துவது சிறந்தது” என்று குறிப்பிட்டார்.

அதற்கு நீதிமன்றம், “இந்த தேர்வில் இத்தனை லட்சம் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் வெளியே வந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்தாலும் அந்த உயிரை திருப்பித் தரமுடியுமா?” என்று கேட்க, அரசு தலைமை வழக்கறிஞர், “ நான் அரசை கேட்டு சொல்கிறேன்” என்று பதிலளித்தார். மேலும் அவர், “மற்ற மாநிலங்களில் தேர்வுகள் நடத்தி விட்டதால் நம் தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படும். மத்திய அரசின் சிபிஎஸ்சி தேர்வுகள் 1. 7 . 2020 அன்று ஆரம்பிக்க உள்ளதால் அது மட்டும் நடக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். நீதிபதிகள் அவருக்கு 11 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து அன்றைய தினம், முறையாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ஆசிரியரோ பெற்றோரோ இந்த மனுவில் இணைந்து கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் பலரும் இந்த வழக்கில் இணையத் தயாராகினர். நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகளையும், சட்ட ரீதியான பிரச்சினைகளையும் ஆலோசித்தார் முதல்வர். எதிர்க்கட்சிகளின் அழுத்தம் ஒருபக்கம் என்றால், ‘உயிரைத் திருப்பித் தருவீர்களா?’ என்ற நீதிமன்றத்தின் கேள்வி ஒருபக்கம் அரசுக்கு நெருக்கடியாக அமைந்தது.

இந்த நிலையில்தான் ஜூன் 9 ஆம்தேதியே, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்து அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியது திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான என்ஆர் இளங்கோவும், திமுக வழக்கறிஞர் அருணும்தான். நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பிய இவர்களுக்கு பல ஆசிரியர் சங்கங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், “திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வழக்கு தொடுத்தால் சரியாக இருக்காது என்ற காரணத்தின் அடிப்படையில் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுத்து அரசை திக்குமுக்காட செய்துள்ளார்கள் வழக்கறிஞர்கள் இளங்கோவும், அருணும். அவர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்த மாணவர்கள் சார்பாகவும் தேர்வு பணியில் ஈடுபட இருந்த ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றி” என்று கூறியிருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தானதன் பின்னணியில் இத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *