வில்சன் கொலை வழக்கு: கடலூர், தூத்துக்குடியில் என்ஐஏ சோதனை!

Published On:

| By Balaji

கன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகர்கோவில் இளங்கடைப் பகுதியைச் சேர்ந்த தவுபிக், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ஆயுதங்கள் கொடுத்தவர்கள் என பலரையும் போலீஸார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி, வில்சன் கொலை வழக்கு குறித்து மத்திய உளவுத் துறைக்குத் தகவல் தெரிவித்த தமிழக அரசு இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றப் பரிந்துரை செய்தது. அதன்படி பிப்ரவரி 2ஆம் தேதி வில்சன் கொலை வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. கன்னியாகுமரி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வந்த நிலையில் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் என்ஐஏ விடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கொச்சியிலிருந்து நேற்று காலை தமிழகம் வந்த என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சில இடங்களில் நேற்று சோதனை நடத்திய அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 24) தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சீதக்காதி நகரில் வசிக்கும் மெய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.எஸ்.ஐ வில்சன் கொல்லப்படுவதற்கு முன்னதாக, டிசம்பர் மாதத்தில் மெய்தீன் பாத்திமா வீட்டுக்குக் கைதான இருவரும் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்று சென்னையில் ராஜேஷ் என்பவரது வீட்டிலும், நெய்வேலி அருகே காஜாமைதீன் என்பவரது வீட்டிலும், பரங்கிப்பேட்டையில் அப்துல் சமீது, பட்டாம்பாக்கம் பகுதியில் ஜாபர் அலி ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share