தந்தையைப் பிரிந்த ஆண்டாள்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

பேரெழில் கொஞ்சும் டாப்ஸ்லிப்பில் தகப்பன் ஸ்ரீதரனுக்கும் தாய் வசந்திக்கும் அருமை மகளாக 28.02.1978 அன்று விசாக நட்சத்திரத்தில் பிறந்தாள் என்கிறது அவளது ரெக்கார்டு.

அவளுடைய தகப்பனார் ஸ்ரீதரன் மிகப் பிரபலமானவர். “ஐ.ஜி” ஸ்ரீதரன் என்றால் சுற்று வட்டாரத்தில் மிகப் பிரசித்தம்.

தீங்கு விளைவிக்கும் காட்டு விலங்குகளை மோதி விரட்டும் நெஞ்சுரமிக்கவர். சுமார் 9 அடி உயரம். பக்கத்துக்கு மூன்றடியாக வெண்ணிற தந்தங்களோடு விளங்கிய மகா புத்திசாலி.

ஆம், வனத் துறையால் “இன்ஸ்பெக்டர் ஆஃப் ஜெனரல்” என்னும் பட்டயம் அளிக்கப்பட்ட ஒரே யானை “ஐ.ஜி” ஸ்ரீதரன்தான்.

அந்த ஐ.ஜி.யின் மகள்தான் இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் நியாயம் தேடி நிற்கிறாள்…

**ஆண்டாள்!**

பிறந்தபோது அவளுக்குப் “பிரியா” என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் காரமடை ரங்கநாதர் கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது “ஆண்டாள்” என்னும் திருப்பெயர் சூட்டப்பெற்று எட்டு வயது வரை அங்கே வாசம் செய்தாள்.

16.10.1986 அன்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாள். அழைத்து வந்தவர் மாவுத்தன் ஸ்ரீதரன். அவள் வாழ்வில் மீண்டும் ஒரு ஸ்ரீதரன்.

மனிதர்களுக்குத் தாயும் தந்தையுமாக குரு அமைந்துவிடுவது ஒரு வரம். யானைக்குப் பாகன் அமைவதும் அப்படியே!

அந்த விதத்திலும் ஆண்டாள் அதிர்ஷ்டக்காரிதான். சகல ஒழுக்கங்களையும் போதிக்கும் குருவாக நின்று அவளை வளர்த்தெடுத்தார் ஸ்ரீதரன்.

தன் தந்தையின் பெயரையே கொண்டதொரு பாகன் தனக்கு வளர்ப்புத் தந்தையாக அமைந்துவிட அவரது பாச அரவணைப்பில் வந்த நாளென்றே பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய தொடங்கி விட்டாள்.

குதூகலமாக வளர்ந்து ஸ்ரீரங்கத்துக்கே அணி செய்தாள் ஆண்டாள்.

**மாவுத்தன் ஸ்ரீதரன்!**

சிறந்த பக்தர். நைஷ்டிக பிரம்மச்சாரி. தேவைகள் அதிகமில்லாதவர் என்பதால் “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்…” என்பது போன்றதொரு வாழ்க்கை. ஆண்டாள் மேல் அளவு கடந்த பாசம்.

பொதுவாக, பாகன்கள் யானையைக் கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டுமென்று வடிகம்பு, துவட்டிக் கொண்டு அளவுக்கு மீறி அடிப்பார்கள். கால்களை இறுகக் கட்டிவைத்து இடிகோல் கொண்டு துன்புறுத்துவார்கள். பெரும்பாலான பாகன்களுக்குப் போதைப் பழக்கம் உண்டு என்பதால் ஆனைக்கும் அந்தப் பழக்கத்தைப் புகுத்தப் பார்ப்பார்கள்.

ஆனால், பாசக்கார மாவுத்தனான ஸ்ரீதரன், ஆண்டாளை அடித்ததே இல்லை. எப்போதாவது செல்லக் கோபத்தில் “போடீ எருமை…” என்பார். அதற்கே ஆண்டாள் “ஊய்…” என்று சீட்டி அடித்து சலித்துக்கொள்வாள்.

தாயும் தந்தையுமாகத் தன்னைக் கவனித்துக்கொள்ளும் தன் பாகனிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டாள் ஆண்டாள்.

சிறுநீர் கழிப்பது, சாணமிடுவது முதற்கொண்டு எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இடையேயான பரிபாஷையில் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டுதான் செய்வாள்.

ஒழுக்கமென்றால் ஒழுக்கம் அவளைக் காட்டிப் பிள்ளைகளை வளர்க்கலாம் என்பது போன்றதோர் ஒழுக்கம்!

சாக்லேட், கடலை மிட்டாய் எல்லாம் சாப்பிடுவாள் ஆண்டாள்.

அதுபோக ஆண்டாளுக்கு ஃபில்டர் காபி என்றால் உயிர். தான் காபி அருந்தும்போதெல்லாம் ஆண்டாளுக்கும் கொடுத்துவிட்டுத்தான் குடிப்பார் மாவுத்தன் ஸ்ரீதரன்.

ஆண்டாள் குளிப்பதற்காகக் கொள்ளிடத்தில் இறங்கினால், அவள் தானாகக் கரையேறும்வரை அவளைக் கோபிக்கவே மாட்டாராம்.

நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி திருமண் இட்டு ஜம்மென்று கோயிலில் நிற்க வைத்து “பாருங்கள் என் மகளை…” என்றபடி அருகே கைகட்டிக்கொண்டு நிற்பாராம்.

கண்கலங்கச் சொல்கிறார் தன் சிறு வயதில் ஸ்ரீதரன் அவர்களிடம் துணைப் பாகனாக வேலை பார்த்த மணிகண்டன் மாவுத்.

“அண்ணே, குடும்ப பாரம் தீர்க்க தாய் தகப்பனை விட்டுவிட்டு சில வருடங்கள் அரபு நாட்டுக்குப் போனவன் நான். அங்கே, கீறும் வெயிலில் கடுமையான வேலையில் ஈடுபடும் சமயம் என் தாய் தந்தையை நினைத்து நான் எந்த அளவு மறுகினேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். அந்த நிலையில்தான் இப்போது ஆண்டாள் இருப்பாள் என்பது மட்டும் நிச்சயம்…”

தழுதழுத்த மணிகண்ட மாவுத்தை அமைதிப்படுத்துவதற்கு வார்த்தைகளில்லாமல் போனது.

கொஞ்ச நஞ்சமல்ல. ஸ்ரீதரன் பாகனுக்கும் ஆண்டாளுக்கும் இடையே ஏறத்தாழ 27 வருட பந்தம்.

தகப்பனுக்கும் மகளுக்குமான அந்த நுண்ணிய பந்தம் இன்று துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஆம், இன்று ஆண்டாள் தன் வளர்ப்புத் தகப்பனோடு இல்லை. கடந்த ஐந்தாறு வருடங்களாக மாவுத்தன் ஸ்ரீதரனையும் ஆண்டாளையும் வம்படியாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

இன்று, கொட்டாரத்தில் இருக்கும் ஆண்டாளின் நிலை சகிக்கும்படி இல்லை. ஒழுக்கமே வடிவாகச் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த ஆண்டாள் இன்று அங்குசத்தில் அடிபிடியில் இருக்கிறாள் என்பது பக்தர்களின் மனதை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

பக்தர்களுக்கே அப்படியென்றால் பார்த்துப் பார்த்து வளர்த்த பாகன் ஸ்ரீதரனுக்கு? அவரும் உருக்குலைந்து போயிருக்கிறார். அவரைப் போலவே ஆண்டாளும் மேனி மெலிந்து நிற்கிறாள்.

மதுரை நீதிமன்றக் கிளையில் இவர்களின் கதையைக் கேட்ட கனம் நீதிபதி மகாதேவன் அவர்கள் மனம் கசிந்து மீண்டும் அவர்களை எப்படியேனும் ஒன்றிணைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

அதன்படி, “உடனடியாக ஆண்டாளை மீண்டும் ஸ்ரீதரன் பாகனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்…” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

ஆனால், கனம் நீதிபதி அவர்களின் உத்தரவு இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்ரீரங்கத்திலேயே பிறந்து வளர்ந்த மாவுத்தன் ஸ்ரீதரன் அவர்கள் தீய பழக்கங்கள் எதற்கும் ஆட்படாதவர் என்று ஊரே சொல்கிறது.

பிறகு, ஏன் ஆண்டாளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்? ஏன் கோயிலிலிருந்து நீக்கப்பட்டார்? நீக்கியது யார்? நீதிபதி சொன்ன பின்பும் நியமனம் செய்யாதது ஏன்? அதன்பின் இருக்கும் நிர்வாக லாவணிகள் என்ன என்பது போன்ற அநாவசியங்கள் எல்லாம் இந்தக் கட்டுரையின் நோக்கத்துக்குத் தேவையற்றவை. அதை நாம் விரும்பவும் இல்லை.

நம் எண்ணமெல்லாம் ஆண்டாள் மட்டுமே !

அவளது எதிர்கால நலன் மட்டுமே !

அதிகாலையில் பெருமாளுக்கு அபிஷேகத் தீர்த்தக் குடம் சுமந்து செல்லும் தருணம் அவள் காட்டும் பெண்மை மிளிர்ந்த அந்த நளின நடையும் அதில் தொனிக்கும் பணிவு மிகுந்த பக்திப் பாவமும்தான் நம்மை அவளுக்காக எழுதச் செய்கிறது.

அவளுக்கு வம்பு தெரியாது. வாயாடத் தெரியாது. கோர்ட் தெரியாது. நெடும்படிகளேறி சட்டம் பேசத் தெரியாது. ஆனால், பாசம் அதிகம். பொதுவாகவே யானைகளுக்கு பாசம் அதிகம் என்பார்கள். ஆண்டாளுக்கு மேலதிகம்.

கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேல் தன்னைச் செல்லம் கொஞ்சி வளர்த்தப் பாகனை எண்ணி எண்ணி அவள் ஒவ்வொரு நாளும் குன்றிக் குன்றி மௌனமாக அழுது இளைத்துக் கொண்டிருக்கும் அவலத்தை என்னும்போது மனம் கசிகிறது.

இந்து தர்ம சாஸ்திரத்தில் இரண்டு விலங்குகளின் உடலில்தான் முக்கோடி தேவர்களும் குடியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று பசு. மற்றொன்று யானை.

மந்திர பூமியாம் மலையாள தேசத்தின் பழமொழி ஒன்று “ஆனயுடெ சாபம் ஒருக்கிலும் மேடிச்சுகட்டாம் பாடில்யா…” என்கிறது. அதாவது, “யானையின் சாபம் தலைமுறையாய் தொடர்ந்து வரும். வாங்கிக் கட்டிக் கொள்ளாதே…” என்பது அதன் அர்த்தம்.

அப்படிப்பட்ட யானையைத் துன்புறுத்திக்கொண்டிருந்தால் ஐஸ்வர்யம் சேருமா? ஐஸ்வர்யம் என்பது பணம் மட்டும்தானா? நிம்மதியும்தான் அல்லவா?

108 வைணவ திவ்ய தேசங்களில் தலையாயது ஸ்ரீரங்கம். அது, பூலோக வைகுண்டம். அந்த புண்ணிய க்ஷேத்திரத்தின் கொட்டாரத்தில் ஆனை ஒன்று அழுது கொண்டிருக்கலாமா…?

கஜேந்திர மோக்ஷம் அருளிய பெருமாளின் சந்நிதியில் கண்ணீரா? அடுக்குமா? அரங்கன் மனம் சுளிக்க மாட்டானா?

போனவை போகட்டும்.

இன்று, கோயிலின் டிரஸ்டியாகப் பெரும் செல்வந்தர் டிவிஎஸ் வேணு ஸ்ரீனிவாசன் அவர்கள் இருக்கிறார். அவர் நினைத்தால் ஆண்டாளுக்கு நிம்மதி தந்துவிட முடியும் என்கிறார்கள்.

அவர் சற்று மனம்வைத்தால் ஆண்டாளை மாவுத்தன் ஸ்ரீதரனிடம் மறுபடியும் சேர்த்து விட முடியும் என்கிறார்கள்.

அவர் தலையிட்டு உடனடியாக நன்மையில் கொண்டு நிறுத்த வேண்டுமாய் விரும்புகிறோம். தள்ளிப் போடப்படும் ஒவ்வொரு நாளும் ஆண்டாளின் ஆயுளைக் குறைக்கும். அது பக்தர்களின் மனதை நோகடிக்கும்.

கடந்த 30 வருடங்களாக பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வருவதைத் தவிர வேறொன்றும் அறியாத அபலை ஆண்டாளுக்கு எதற்காக இந்த தண்டனை ?

“ஆண்டாளே, உன் மன வலி என்ன… உன் தரப்புதான் என்ன…?” என்று நாம் சென்று கேட்டாலும் கனிந்த கண்களோடு தும்பிக்கை உயர்த்தி ஆசீர்வதிப்பதைத் தவிர வேறென்ன தெரியும் அவளுக்கு?

காட்டு மிருகங்கள் நாட்டுக்குள் புகுந்து மனிதர்களைத் தொந்தரவு செய்த நேரங்களில் அவற்றை விரட்டி அடிக்கும் பணியைத் துணிந்து செய்ததால்தான் ஆண்டாளின் தகப்பன் ஸ்ரீதரன் யானைக்கு “ஐ.ஜி”அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அந்த ஐ.ஜி.யின் மகளை நிம்மதியாக வைத்திருக்க வேண்டியது நமது கடன் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும்.

ஸ்ரீரங்கத்திலேயே பிறந்து வளர்ந்த மாவுத்தர் ஸ்ரீதரன் அவர்களுக்குத் தீய பழக்கங்கள் ஏதும் இல்லை என்கிறார்கள்.

அதுதவிர வேறேதும் ஆட்சேபனைகள் நிர்வாகத்துக்கு இருக்கலாம்.

அப்படி இருக்குமானால் ஸ்ரீதரன் மாவுத்தரைக் கூப்பிட்டு அதை ஆழ எடுத்துச் சொல்லி, அறிவுறுத்தி, தேவைப்பட்டால் எழுதியும் வாங்கிக்கொண்டு மீண்டும் ஆண்டாளை அவளது வளர்ப்புத் தகப்பனோடு இணைத்துவிடுவதுதான் ஆன்மிகத்துக்கு அழகு.

ஆண்டாளிடம் அமைதி திரும்பட்டும்!�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share