இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 8 ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையக்குழு தெரிவிக்கின்றது. இலங்கை முழுவதும், 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
இந்த முறை 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவா்களைத் தவிர, இந்தத் தோ்தலில் 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.
இந்நிலையில், இன்று காலை மன்னார்-தந்திரி மலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பேருந்தில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இலங்கை ஊடகங்கள், ”இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியான மன்னாரில் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரம் இல்லை. மேலும் தாக்குதல் நடத்தியவர் சாலையில் வாகனங்களின் டயர்களையும் எரித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்த விசாரணையை தந்திரிமலை மற்றும் செட்டிக்குளம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
�,