எரிபொருளை ரேஷன் முறையில் வழங்கும் இலங்கை!

Published On:

| By admin

இலங்கையில் ரேஷன் முறையில் எரிபொருள் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இலங்கை தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. உணவு, மருந்துகள், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் தற்போது மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலர்களை ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் எரிபொருள் பற்றாக்குறையால் 24 மணி நேர மின் விநியோகத்துக்காக, மாதம்தோறும் 100 மில்லியன் டாலர் டீசலுக்குக் கூடுதலாகச் செலவாகிறது. இலங்கையின் குறைந்தபட்ச தினசரி டீசல் தேவை 5,000 மெட்ரிக் டன் ஆக உள்ளது.
இதுகுறித்து இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நான்கு மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மாதாந்திர எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவியை நம்பியே இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட வாராந்திர அளவிலான எரிபொருளை ரேஷன் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share