~இலங்கை அதிபர் கோத்தபய: வரவேற்பும் எதிர்ப்பும்!

Published On:

| By Balaji

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷே 50 சதவிகிதம் வாக்குகளைக் கடந்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பல நாடுகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’அதிபர் தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்! நமது இருநாடுகள், மக்களுடனான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையிலும் நமது பிராந்தியத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவை மேம்படும் வகையிலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்திக்கு உடனடியாக கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

’என்னை வாழ்த்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது இருநாடுகளும் வரலாறு, பொது நம்பிக்கை ஆகியவற்றால் பிணைந்துள்ளது. நமது நட்புறவை பலப்படுத்த விரைவில் உங்களை சந்திக்கவும் காத்திருக்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

கோத்தபய வெற்றி குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.

கோத்தபாயா ராஜபக்சே சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது. இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும்; போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட சிங்கள மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரச்சாரத்தையே கோத்தபாய முன்னெடுத்தார். அவரது இனவெறி பிரச்சாரம் தான் இப்போது அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.

இத்தகைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம்? என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகள் இன்னொரு கள எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபாயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்கவில்லை; அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90% வாக்குகளும், மற்ற பகுதிகளில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்கள் தனித் தீவாகவும், சிங்களர்கள் தனித்தீவாகவும் வாக்களித்திருப்பது இரு இனங்களும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதை அனைத்து உலக நாடுகளும் புரிந்து கொள்ள முயல வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இது மிக மோசமான நாள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்திருக்கிறார்.

கோத்தபய வெற்றி குறித்து வைகோ இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

“இந்த நாள் மனதுக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகின்ற நாளாக அமைந்துவிட்டது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, 90 ஆயிரம் விதவைகளைக் கண்ணீரில் தவிக்க விட்டு, எண்ணற்ற இளம் பெண்களை நாசப்படுத்தி, பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல், வயதானவர்கள் என்றும் பாராமல் இனப்படுகொலை செய்து, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைக்குக் காரணம் மகிந்த ராஜபக்சே என்று சொன்னால், முழுக்க முழுக்க அதை இயக்கியது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே.

கொத்தபய ராஜபக்சேவின் கைகளில் தமிழர்கள் இரத்தம் காயாமலேயே இருக்கிறது. நடந்து முடிந்திருக்கக்கூடிய தேர்தலில், தமிழர்கள் சஜித் பிரேமதேசாவுக்குத்தான் அதிகமான வாக்குகளைத் தந்திருக்கிறார்கள். இன்னும் அழிவு வருமே! ஆபத்து வருமே! என்ற கவலையில் தந்திருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேவின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே வந்துவிட்டால் கொத்துக் கொத்தாக இன்னும் கொலை செய்வதற்குத்தானே காத்திருப்பான் என்ற வேதனையில் வாக்களித்திருக்கின்றார்கள்.

ஆனால் சிங்கள வெறியர்கள் மத்தியில், வெறித்தனத்தை ஊட்டி வருகின்ற கொத்தபய ராஜபக்சே கூட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

இந்திய அரசுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது. காணாமல் போன இலட்சக்கணக்கான தமிழர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கவில்லை. படுகொலைகளைச் செய்து, கோர நர்த்தனமாடிய கொலைபாதகன்தான் கொத்தபய ராஜபக்சே. எனவே இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள். எதிர்காலத்தில் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும்” என்று கூறினார் வைகோ.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share