இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ஷே இன்று (நவம்பர் 18) பதவியேற்கிறார். நவம்பர் 16 அன்று நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
அதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே பதிவான வாக்குகளில் 52.25 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகளின் என்ணிக்கை 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ஆகும்.
கோத்தபயவை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளைப் பெற்றார். இது பதிவான வாக்குகளில் 41.99% ஆகும்.
தேர்தல் முடிவைப் பார்க்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் வடஇலங்கைப் பகுதிகளில் முழுக்க முழுக்க சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். ஆனால், அதற்கு நேர் எதிராக சிங்களர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெற்றுள்ளார்.
நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருக்கோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாசா அமோக வெற்றி பெற்றார். அதேநேரம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுராதாபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
அனுராதாபுரம் வரை அதிக வாக்குகளைப் பெற்ற கோத்தபய ராஜபக்ஷே அதன் பிறகான தமிழர்கள் பகுதிகளுக்குச் செல்லும்போது வாக்குகள் படு பாதாளத்தில் வீழ்ந்துவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புகளைத் தனது பிரச்சாரத்தில் முக்கியமாகக் குறிப்பிட்ட கோத்தபய ராஜபக்ஷே, நாட்டின் பாதுகாப்பை முன் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் தான் ஆட்சிக்கு வந்தால் 2009 போர் பற்றிய ஐ.நா விசாரணைகளில் ராணுவத்தினர் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
2009 போரின்போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கோத்தபயவை அதிபராகப் பார்க்க விரும்பாத தமிழ் மக்கள் முழுக்க முழுக்க தங்கள் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அறிவிப்பை வைத்தே சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் சஜித்தைத் தனிமைப்படுத்த அரசியல் ரீதியாகப் பிரச்சாரம் செய்தது அவரது எதிர்த்தரப்பு.
தமிழர்கள் ஓட்டு முழுக்க முழுக்க சஜீத்துக்குக் கிடைத்த நிலையில், பெரும்பான்மை சிங்களர்கள் ஓட்டு முழுக்க முழுக்க கோத்தபயாவுக்குச் சென்றுவிட்டது.
இந்த நிலையில், “நாட்டில் இன மொழி பாகுபாடின்றி சேவையாற்றுவேன்” என்று கோத்தபய ராஜபக்ஷே தெரிவித்திருக்கிறார். வழக்கம்போல் கொழும்பில் பதவியேற்காமல் அனுராதாபுரத்தில் அவர் இன்று பதவி ஏற்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.
�,