மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“இப்போது திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக இருந்தபோது உடன் பிறப்புகளுடன் கள ஆய்வு என்றொரு நிகழ்ச்சியை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கள ஆய்விலே, ‘கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் வளர்ச்சிக்காக ஆலோசனைகளை சொல்லலாம். உங்கள் மாவட்டச் செயலாளர் மீது குறையிருந்தாலும் சொல்லலாம். ஏன் என் மீது தவறு இருந்தாலும் சொல்லுங்கள்’ என்று அறிவித்தார் ஸ்டாலின். இந்த கள ஆய்வு நிகழ்ச்சியுடனே புகார் பெட்டி என்ற ஒரு பெட்டியையும் வைத்தார். அதில் எந்த நிர்வாகிகள் மீதும் தயங்காமல் புகார் சொல்லலாம், நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார்
அப்போது திருப்பூர் மாவட்டத்துக்கான கள ஆய்வுக் கூட்டமும் நடந்தது. அதில் முன்னாள் நகர செயலாளரான வேசு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வே.சுப்பிரமணியன் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘ எனக்கு வயசாயிடுச்சு. நான் சாகறதுக்குள்ள திருப்பூர் திமுக நல்லவங்க கையில இருக்கிறத பார்க்க ஆசைப்படுகிறேன். அதை செயல் தலைவர் நிறைவேற்ற வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கையில் ஒன்று நிறைவேறிவிட்டது. அண்மையில் அவர் காலமாகிவிட்டார். ஆனால் திருப்பூர் திமுக நல்லவர்கள் கையில் இருக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இதில் இன்னும் கொடுமை என்னவெனில் திருப்பூர் திமுக புள்ளிகளின் அட்டூழியத்தால் கொங்கு பகுதி முழுதுமே திமுக கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இப்போது திருப்பூர் திமுக முக்கிய புள்ளிகளை குறிவைத்து விசாரித்து வரும் க்யூ பிராஞ்ச் போலீஸ், இதன் தொடர்ச்சியாக திமுக உயர் மட்டப் பிரமுகர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள் திருப்பூர் உடன் பிறப்புகள்.
அக்டோபர் 1 ஆம் தேதி திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக முரசொலியில் அறிவிப்பு வெளியானது. காரணம் போலி ஆவணங்கள், பாஸ்போர்ட் தயாரித்து இலங்கை பிரமுகரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயன்ற புகாரில் செப்டம்பர் 30 ஆம் தேதி ராஜ் மோகன் குமாரை க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தார்கள். அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை செய்துள்ள க்யூ பிராஞ்ச் போலீஸார் இந்த மோசடியில் அவரோடு உடந்தையாக இருந்தது யார் யார் என்பது பற்றித் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் குண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அதை நேரில் பார்த்த திருப்பூர் திமுக மாசெ செல்வராஜின் பேட்டி ஊடகங்களில் வந்தது. தேர்தல் முடிந்தபிறகு நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாக செல்வராஜ் கூறியிருந்தார். அப்போது செல்வராஜை இலங்கைக்கு அழைத்துச் சென்றதே இந்த ராஜ்மோகன் குமார்தான் என்றும், இவர்களுடன் இன்னும் மூன்று திமுக நிர்வாகிகள் இலங்கைக்குச் சென்றார்கள் என்றும் க்யூ பிராஞ்ச் போலீஸார் தரப்பில் சொல்கிறார்கள். சூலூர் இடைத்தேர்தல் இருக்கும் நிலையில் அவசரமாக எதற்கு இலங்கை சென்றீர்கள் என்று மாசெவை திமுக தலைமை கேள்வி கேட்டதாகவும் கூட அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் பயணத்துக்கும் போலி பாஸ்போர்ட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்றும் விசாரித்து வரும் போலீசார், ராஜ்மோகன் உடன் இலங்கை சென்றுவந்த பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருக்கிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர் திமுக தலைமையகத்தில் இருக்கும் நிர்வாகி. அவர் ஏன் ராஜ்மோகனுடன் இலங்கை சென்றார்? அங்கே என்னென்ன நடந்தது என்பது குறித்து விசாரணையை க்யூ பிராஞ்ச் போலீசார் முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் திமுக உடன்பிறப்புகள் சிலர், ‘திருப்பூர் மாவட்ட திமுகவில் பல்வேறு நிர்வாகிகள் நிதி மோசடி, பெண் புகார்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் பட்டியல் போட்டு ஆதாரத்தோடு செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும்போதே ஸ்டாலினுக்கு அளித்தோம். ஆனால் அறிவாலயத் தலைமையில் இருக்கும் சிலரால் இந்த புகார்கள் குப்பையில் போடப்பட்டது. தொடர்ந்து அவர்களே கட்சியை நடத்துகிறார்கள். இதன் விளைவுதான் இப்போது திமுக தலைமைக் கழக நிர்வாகியையே க்யூ பிராஞ்ச் விசாரிக்க திட்டமிட்டும் அளவுக்குப் போய்விட்டது என்கிறார்கள்.
திருப்பூர் திமுக புள்ளிகள் பற்றியும் இது தொடர்புடைய திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பற்றியும் முழுமையாக விசாரிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் திமுகவுக்கு இன்னொரு தலைவலி ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள் திருப்பூர் வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
�,”