நல்லிணக்க பூமி! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

கசந்தேறி விட்ட நாசகரத்தால் நடுங்கி நகர்கிறது இலங்கை !

கடந்த நாட்களில் கிறித்துவ தேவாலயங்களாக குறிவைத்து தகர்த்து வீசப்பட்ட கொடூரமான குண்டுவெடிப்புகளால் ஏறத்தாழ 700க்கும் மேலான அப்பாவி உயிர்கள் சிக்கிச் சிதைந்து சிதிலமாகிப் போக…

உள்நாட்டு வெளிநாட்டு அப்பாவிக் குடும்பங்களெல்லாம் ஓலக் குரலோய்ந்து விக்கித்து நிற்க…

அந்த அவலத்தைக் கண்ணுற்ற நாகரிக உலகம் நெளிந்த புருவங்களோடு வெறுத்துக் கரித்துக் கொட்ட…

“ஈஸ்டர் அட்டாக்” என்னும் வரலாற்றுப் பழி சுமந்து குமைந்துகொண்டிருக்கிறது இலங்கை !

இலங்கை என்று நம்மால் அழைக்கப்பட்டாலும் உலக வரைபடத்தில் அது ஸ்ரீலங்கா என்றே குறிக்கப்படுகின்றது.

ஸ்ரீ என்றால் செல்வம் என்று பொருள். செல்வங்களோடு இலங்கும் நாடு என்னும் பொருள்படப் பெருமை கொண்டிலங்கிய அந்த சின்னஞ் சிறிய நாடு இன்று உள்ளறிந்தும் அறியா பயங்கரவாத சக்திகளொடு தன்னைத் தற்காத்துக்கொள்ள சகட்டு மேனிக்குப் போராடிக்கொண்டிருக்கிறது !

“இன்னுமா எங்களவர்களைக் கொல்லச் சம்மதிப்பீர்கள்? தமிழர்கள் செய்த பாவமென்ன…?” என்னும் சீற்றம் சுமந்த கேள்விகள் தமிழகமெங்கும் துயரத் தூற்றலோடு சுழன்று கொண்டிருக்கிறது.

கடந்த நாட்களில் ஊரடங்குச் சட்டம், அவசரச் சட்டம், சந்தேகப்பட்டோரைக் கண்டதும் சுட அனுமதி, பெண்கள் புர்கா அணியத் தடை, பள்ளிவாசல்களில் கூடித் தொழ எச்சரிக்கை என சகல முஸ்தீபுகளிலும் இறங்கியிருக்கிறது இலங்கை.

நியூஸிலாந்து நாட்டின் மசூதி தாக்குதலுக்கு எதிர்வினைதான் இது என்கிறார்கள் சிலர்.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே இருக்கும் பகைமையின்பாற்பட்ட தூஷணைத் தாக்குதல் இது என்கிறார்கள் சிலர்.

இலங்கை மண்ணில் இரு மதத்தாருக்கும் இடையே பகைமை ஏதும் இல்லையே என்னும் மிமிக்கிரிக் குரல்கள் ஒருபுறம் கேட்டாலும்…

எங்கோ நியூஸிலாந்து நாட்டில் நிகழ்த்தப்பட்ட மசூதித் தாக்குதலுக்குப் பகை தீர்த்துக்கொள்ளச் சற்றேறக்குறைய பத்தாயிரம் கிலோ மீட்டர் கடந்த இலங்கைதான் இலக்கா என்பதையும் சிந்தித்தாக வேண்டும்.

மனித உயிர்கள் பணயம் வைக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல முஸ்தீபுகளையும் ஆதரித்துப் போவதுதான் சரி என்றாலும்…

இந்த வரலாற்றுப் பழிக்கு ஆளானது ஏன் என்பது குறித்து அவர்கள் விஸ்தீரணமாகச் சிந்தித்தாக வேண்டிய காலகட்டம் இது !

அண்டை நாட்டாருக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும். அதற்கு முன் நம்மை நாம் சரி செய்துகொள்வது அவசியம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் !

**ஆக்கிரமிப்பாளர்கள்!**

ஆதி காலம்தொட்டே பூர்வ குடிகளின் வாழ்க்கை அன்னியர்களுக்கு அடிவருடியே நசிந்திருக்கிறது.

காரணம், ஒற்றுமையின்மை !

சாதி மத வர்க்க பேதங்கள் வந்தேறிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட உழைத்தறியாத சில கொடுமதியாளர்கள் வந்தேறிகளுக்கு இடைத் தரகர்களாய் வாய்த்துவிட…

அன்னியர்கள் கோலோச்சினார்கள்.

பாதிக்கப்பட்ட எளிய மக்கள் மனம் நொந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு மக்கள்பால் நேரடிச் சலுகைகளை அள்ளி வீசத் துவங்கினார்கள் அன்னிய ஆக்ரமிப்பாளர்கள்.

அடடா, கடை நிலையில் இருக்கும் நம்மையும் அணுகி ஆராதித்து மகிமை செய்கிறார்களே… இவர்களல்லவோ நிஜமான ஆட்சியாளர்கள் என மகிழ்ந்த அப்பாவி மனிதர்கள் எல்லாம் கூட்டமாய்க் கூடி நெருப்பிடைப்பட்ட ஈசலாய் உருத்தெரியாமல் போனார்கள்.

ஆம், ஆக்கிரமிப்பாளர்களின் தந்திர வலைக்கு வசமாகிவிட்ட அத்தனையும் காலப்போக்கில் நொந்து நூலாகிச் சீழ்பட்டு அழிந்திருக்கின்றன என்பதே உலக வரலாறு!

அப்படிப்பட்டதோர் ஆக்ரமிப்பு நாளை நமதிந்த இந்திய மண்ணிலும் நிகழலாம். ஆக்கிரமிப்பின் நுழைவாயில் தமிழகமாகவும் இருக்கலாம்.

அந்த ஆக்கிரமிப்பாளர்களின் அம்பறாத் தூணியில் இந்து – முஸ்லிம் பேதங்களும் விரோதங்களும் விஷ அம்புகளாய்க் காத்திருக்கலாம்.

அந்த விஷ அம்புகளின் கொடிய அடியில் நாளை எந்தக் குடும்பம் வீழ்ந்து அலறுமோ நாமறியோம் !

**“ஸ்ஸிங் ஸூயி”**

இதே மின்னம்பலத்தில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 2017, நவம்பர் மாதம் வெளியான எனது “ஸ்ஸிங் ஸூயி” என்னும் கட்டுரையை இங்கே அச்சத்தோடு நினைவுறுத்துகிறேன்.

அந்தக் கட்டுரையை இரண்டு பாகமாக விரித்து எழுதிய அவசியத்தையும் இங்கே வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே, எனது அந்தக் கட்டுரைகளைப் பதிப்பித்த மின்னம்பலம் பெரும் படிப்பாளிகளும் அறிவாளிகளும் சூழ்ந்த எடிட்டோரியலைக் கொண்டது என்பதை இங்கே குறித்துக் கொண்டாக வேண்டும்.

அந்தக் கட்டுரைகளில் ஆசியப் பிரதேச வல்லாண்மையை நிலைநிறுத்த சீனர்கள் இங்கே கால் பதிக்கக்கூடும் என்று அன்றே எச்சரித்திருக்கிறேன்.

நானென்ன தீர்க்கதரிசியா? இல்லை.

ஆனால், தென்கிழக்கு ஐரோப்பியாவில் மலைகள் சூழ்ந்த அந்த மாஸிடோனியாவில் தோன்றிய “பாபா வான்கா” என்னும் அந்தக தீர்க்கதரிசியாளை என்னால் அச்சத்தோடு எதிர்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அந்தப் பெண்மணியின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் ஏறத்தாழ 85 சதவிகிதம் பலித்துவிட்டன என்பதால் மனம் பதைக்கின்றேன்!

எனது பதைப்பை முழுமையாக உணர்ந்துகொள்ள எனது முந்தைய “ஸ்ஸிங் ஸூயி” கட்டுரைகளை ([முதல் பகுதி](https://minnambalam.com/k/2017/11/13/1510511427), [இரண்டாம் பகுதி](https://minnambalam.com/k/2017/11/14/1510643144)) தயவுசெய்து படித்துப் பாருங்கள்.

எனது அச்சமெல்லாம் இன்றைய தமிழகம் எதிரிகளுக்கு Vulnerable Target ஆக இருந்துவிடக் கூடாது என்பதுதான்.

அண்டை நாட்டில் புகுந்துகொண்ட அன்னிய சக்திகள் சர்வ நிச்சயமாக தமிழகத்திலும் புகும். அமைதியான நமது தமிழகத்தில் இந்து – முஸ்லிம் விரோதத்தை உண்டாக்கிவிட முனையும். அதற்கு வாய்ப்பு கொடுத்துவிடவே கூடாது.

எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் அச்சுறுத்த விரும்புவதில்லை.

சொல்லப்போனால் சிறுபான்மையினரை அரவணைக்கும் செயலைப் பெரும்பான்மையினர் பெருமைக்கேனும் செய்து மகிழ்கிறார்கள் என்பதைச் சில நாடுகளில் நேரில் கண்டிருக்கிறேன்.

சில தனிப்பட்ட அனுபவங்களினால் “நாம் இளைத்தவர்களோ…?” என்னும் தாழ்வு மனப்பான்மையைச் சிறுபான்மை மக்களில் சிலர் கொண்டுவிடுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை ஊதிப் பெரிதாக்கி மூளைச் சலவை செய்துவிடுவதுதான் எதிரிகளின் தந்திரம்..

குறித்துக்கொள்ளுங்கள். ஒரு நாட்டை கபளீகரம் செய்ய விரும்பும் எதிரிகள் முதலில் அந்த நாட்டின் சிறுபான்மையினரைத்தான் குறிவைப்பார்கள். சீண்டுவார்கள்.

பெரும்பான்மை மக்களோடு சிறுபான்மையினரை மோதவிட்டுக் காரியம் சாதிக்கப் பார்ப்பார்கள்.

நாம் அதற்கு கொஞ்சமும் இடம் கொடுத்துவிடலாகாது.

பெரும்பான்மை மக்களோடு இணைந்து வாழும் சிறுபான்மை மக்கள்தான் உலகமெங்கும் நிம்மதியாக வாழ்ந்தனுபவிக்கிறார்கள் என்னும் நல்லுண்மையை உணர்ந்துகொண்டாக வேண்டும்.

அன்னியரின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுப் பெரும்பான்மையைப் பகைத்துக்கொண்டால் முடிவில் பாதிக்கப்படுவது என்னமோ சிறுபான்மையினர்தான். இது உலக நிதர்சனம்.

**இது நல்லிணக்க பூமி!**

அரசியல் வியாபாரிகள் எத்தனைதான் தடுக்குக் கட்டைகளைப் போட்டாலும் இந்த மண்ணில் முஸ்லிம்களை இந்துக்கள் மனதார நேசிக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சொன்னால் அன்பான முஸ்லீம்களை அள்ளிக் கொண்டாடுகிறார்கள்.

1998இல் கோவையில் நிகழ்ந்த வெடிகுண்டு கொடூரத்துக்குப் பின் ஐஸ் அவுஸில் அச்சத்தோடும், அவசியமற்ற குழைந்த புன்னகையோடும் என்னெதிரே நடமாடிய இஸ்லாமிய நண்பர்களை நெஞ்சு நெகிழக் கண்டு அருகழைத்து அரவணைத்ததை நினைவுகூர்கிறேன்.

1999இல், அந்த கார்கில் காலத்தில், பழந்துணிகள் பாத்திரம் கேட்டு திருவல்லிக்கேணி – மீர்சாகிப்பேட்டை வீதியெங்கிலும் நடையாய் நடந்தபோதில் கார்கில் வீரர்களுக்காக இஸ்லாமியத் தாய்மார்கள் அள்ளிக் கொடுத்து நல்வார்த்தை சொல்லி வழியனுப்பிய பாங்கை எண்ணி இன்றும் கண்ணீர் மல்குகிறேன்.

அந்த நாள் அனுபவம் ஒன்றை இங்கே பகிர்கிறேன்…

“ஸ்ருதிலயா” என்னும் ஆடியோ ஸ்டூடியோ ஆழ்வார்பேட்டையில் இருந்தது. இன்றும் இருக்கிறது. அந்த ஸ்ருதிலயா நிறுவனத்துக்காகப் பற்பல ஆல்பங்களை எழுதியிருக்கிறேன்.

அதன் முதலாளி கிருஷ்ணா. அருமையான கிடார் ப்ளேயர். பக்திப் பாடல்களைப் பாடி அழியாப் புகழ் பெற்ற வீரமணி ஐயா அவர்களின் மகன். எனக்கு நெருங்கிய நண்பர்.

ஒருமுறை தி. நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டை ஸ்டூடியோவுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணா அவரது மாருதி ஆம்னி காரை ஓட்டிவர அருகில் அமர்ந்து நான் பல்லவிகளைக் கோர்த்துப் பாடிக்கொண்டே வந்தேன்.

ஆழ்வார்ப்பேட்டை சிக்னல்.

மூகாம்பிகை காம்ப்ளெக்ஸ் அருகில் எங்களுக்கு முன்பு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அதன் முந்தைய காரை லேசாக சைடு வாங்கி இடித்து நின்றது. ட்ராஃபிக் ஜாம்.

நாங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் வண்டியை நிறுத்திக்கொண்டு எங்களுக்குள் கம்போஸிங் செய்துகொண்டிருந்தோம்.

திடீரென ஒரு ஓலக் குரல். துல்லிய வெள்ளைச் சட்டையில் ரத்தம் சிதறியிருக்க தாடியோடு ஓடிவந்த அந்த பாய் மரண பயத்தோடு எங்கள் காரை ஓங்கி ஓங்கித் தட்டினார்.

பின்னால் சில பேர் கையில் கத்தியோடு ட்ராஃபிக்கைக் கடந்து வர முயன்றுகொண்டிருந்தார்கள்.

முன்னால் உக்கார்ந்திருந்த நான் என்னையறியாமல் சட்டென திரும்பிப் பின் டோரின் பட்டனை இழுத்துவிட, சரேலென கதவைத் திறந்து தாவி அமர்ந்துகொண்டவர்…

“காப்பாத்துங்க பிரதர்…அல்லாஹ் சத்தியம். காப்பாத்துங்க பிரதர்…”என்று அலறினார்.

ஏதோ ஒரு உள்ளுணர்வோடு “தூக்குங்க கிருஷ்ணாஜி..” என்று நான் குரல் கொடுக்க, அசாத்திய தைரியத்தோடு காரை லேசாக ரிவர்ஸ் வாங்கி வேகமெடுத்தார் கிருஷ்ணா.

பதற்றத்தில் எங்கள் இலக்கைத் தாண்டி நேராகப் போய்க்கொண்டிருந்தோம்.

பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

பெருமூச்சோடு சரிந்து சாய்ந்துகொண்டு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்தார் பாய்.

“கவலைப்படாதீங்க பாய்… வீடு எங்க சொல்லுங்க. கொண்டு விட்டுர்றோம் ”

“ஐயோ, வீடு வேணாம். அவங்க என்னை விட மாட்டாங்க. நான் சொல்ற இடத்துக்கு கொண்டு விட்ருங்கையா…பிழைச்சுக்குவேன்” என்று தழுதழுத்தார்.

“சரி, எங்க போகணும் சொல்லுங்க பாய்…”

நம்பிக்கையோடு நிமிர்ந்து உக்கார்ந்தவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டும் மேல் மூச்சு வாங்கியபடியும்…

“லெஃப்ட் போங்க ப்ரதர்…ரைட் போங்க..” என்றபடி ஒருவழியாக செயின்ட் மேரீஸ் ரோட்டில் கொண்டு போய் ஒரு வீட்டில் நிறுத்தச் சொன்னார்.

வண்டியை ஓரம் கட்டி நிறுத்திய அடுத்த கணம் தாவி இறங்கி அந்த வீட்டுக்குள் ஓடினார். நாங்களும் அந்த வீட்டுக்குள் நுழைந்தோம்.

அங்கே, அந்த வீட்டின் சிட் அவுட்டில் மரத்திலானதொரு ஈஸி சேர்.

அதில், ஆஜானுபாகுவாக அமர்ந்து சாவகாசமாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் டி.என். சேஷன்.

“ஐயா…” என்று அலறியபடி அந்த சிட் அவுட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு கதறி அழுதார் பாய்.

கணீரென்ற குரலில் பட்டும்படாத தொனியில் பதற்றமேயில்லாமல் கேட்டார் டி.என். சேஷன்.

“என்னடா இங்கே..?”

ஏதும் சொல்லாமல் தன் வெள்ளை சட்டையில் இருந்த ரத்தக் கறையைக் காட்டிக்காட்டி அழுதுகொண்டே இருந்தார் பாய்.

“யேய்…அழறாய்..? உங்கப்பன் பேரை கெடுக்க வந்தியோ…சண்டாள சங்காத்தம் சங்கடம் கேட்டியோடா…?”

தலை குனிந்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே இருந்தார் பாய்.

“பின்னால போய் முகம் அலம்பிண்டு வா…ஆஸ்ப்பிடல் சொல்லி அனுப்பறேன்…”

நடுக்கத்தோடு அகன்ற பாய் உள்ளே ஓடி மறைந்தார்.

நடப்பதையெல்லாம் பிரமை பிடித்தாற் போல் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவும் நானும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டபடி சட்டெனத் திரும்ப யத்தனித்தோம்.

“நில்லுங்கோ, நீங்கள்லாம் ஆரு…?”

“சார், நாங்க ஸ்டூடியோவுக்கு போற வழியில இந்த பாய் ஆபத்துன்னு வந்தார். ஒண்ணும் புரியல. வண்டியில ஏத்திக்கிட்டு வேகமா வந்துட்டோம். அவ்வளவுதான்…”

“குட் ஜாப்…எங்க ஜாகை..?”

“எனக்கு திருவல்லிக்கேணி. இவருக்கு ஆழ்வார்பேட் சார்…”

“ம்ம்…பத்ரமா போங்கோ. டேக் மை அட்ரஸ்…”

அதன் பின் அந்த பாய் என்னவானார் என்று தெரியவில்லை.

மேற்கண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்கு பேரில் ஒருவர் டி.என்.சேஷன். அவர் மறைந்துவிட்டாரெனப் பல முறை ரூமர் கிளம்பி பொய்த்திருக்கிறது. அது அப்படியே இருந்துவிடட்டும்.

நானும் ஸ்ருதிலயா கிருஷ்ணாவும் இன்று இருக்கிறோம்.

ரத்த சாட்சியான அந்த பாய் இன்று நம்மிடையே இருந்து, அவர் இந்தக் கட்டுரையைப் படித்து வழிமொழிந்துவிடுவார் என்றால் இன்ஷா அல்லாஹ் தமிழகம் விழித்துக்கொள்ளும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share