தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகுகள் உட்பட 105 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படவுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மொத்தம் 105 படகுகளை இலங்கையில் ஏலம் விட அந்நாட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 7ஆம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8ஆம் தேதி காங்கேசன் துறையில் 5 படகுகளையும், பிப்ரவரி 9ஆம் தேதி கிராஞ்சியில் 24 படகுகளையும், பிப்ரவரி 10ஆம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளையும், பிப்ரவரி 11ஆம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசின் இந்த முடிவு தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட
விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சமும், நாட்டு படகுகளுக்கு ரூ.1.5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,