இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல் ,டீசல் வாங்க எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல கிலோ மீட்டருக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போராட்டங்களும் வெடித்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் 108 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி உள்ளன. இந்நிலையில் ரஷ்யாவை விட்டு வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
என்னதான் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை தள்ளுபடி விலையில் வாங்கி வருகிறது. இலங்கையும் ரஷியாவிடமிருந்து 2 வாரங்களுக்கு முன்பு 99 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் வாங்கியது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து மேலும் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை தயாராக உள்ளது.
இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், “இலங்கையில் தற்பொழுது எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. நாங்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து மட்டுமல்ல, எந்த நாடு தர தயாராக இருக்கிறதோ அந்த நாட்டிடமிருந்து வாங்குவோம். இலங்கையில் உணவு இல்லாமல், எரிபொருள் இல்லாமல் மக்கள் தவிப்பதை பார்ப்பது இதுவே முதல் முறையாகும். இது நாங்களே உருவாக்கிக்கொண்ட ஒரு நிலைதான். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க என்னென்ன திட்டங்கள் அவசியமோ அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.” என்று தெரிவித்தார்.