நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் யானைகள் சாலையைக் கடக்க முடியாமல் தவிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கையிலெடுத்து, தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தியது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
யானைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாலையைக் கடந்து வனத்துக்குள் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். மேலும் சாலையைக் கடக்கும் பகுதிகளில் ஆய்வு செய்து அந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்க அறிவுறுத்தினர்.
இதை தொடர்ந்து ஆய்வு செய்ததில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப் பகுதியில் 9 இடங்களில் யானைகள் சாலையை கடப்பதைக் கண்டறிந்தனர். இதில் தற்போது 8 இடங்களில் 16 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பது கிடையாது. தவிர்க்க முடியாத நிலையில் விபத்துகள் அதிகரிக்கும் பகுதிகளில் வேகத் தடைகள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு முதன்முறையாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
மேலும், “யானைகள் செல்வதற்கு விசாலமான வழியை ஏற்படுத்தவும், யானைகள் சாலையை கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கவும் ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். யானைகள் கடக்கும் 9 இடங்களில் 18 வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்தோம். தற்போது 8 இடங்களில் 16 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் விரிவாக்க பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பணி முடிந்ததும் அமைக்கப்படும். இதனால் யானை உட்பட வனவிலங்குகள் விபத்தின்றி சாலையைக் கடந்து செல்ல முடியும்” என்று கூறினர்.
.