`இட்லியுடன் வடையா அல்லது பொங்கலுடன் வடையா?’ என்ற கேள்விக்கு இடையில் சிங்கிள் டீயுடன் ஒரு வடை சாப்பிட்டு பாருங்கள்… அதன் அருமை புரியும் என்பார்கள் சிலர். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல… ரிலாக்ஸ் டைமில் இரண்டு வடையை ருசிக்கும்போது அதில் கிடைக்கும் இன்பமே தனி. அதற்கு இந்த ஸ்பெஷல் வடை உதவும்.
**எப்படிச் செய்வது?**
ஒரு கப் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு, மிக்ஸியில் கொரகொரப்பாகத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய அரை கப் வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு தோல் சீவிய பொடியாக நறுக்கிய இஞ்சி, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை டீஸ்பூன் சீரகம், சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய வடைகளாகத் தட்டிப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
**சிறப்பு**
அனைத்து வயதினருக்கும் ஏற்ற இது, உடனடி புத்துணர்ச்சி தரும். பெண்களுக்கு இந்த வடை மிகவும் ஏற்றது.
�,