“சாதி, மதம், இனம், மொழி கடந்த சமூக மேன்மையே நமது நோக்கம்! அதுவே, மானுடத் தத்துவம்! அதனை விஞ்சியதொரு ஆத்ம சாதனை இங்கில்லை.”
இப்படியானதொரு மகத்தான பிரகடனம் இந்திய வரலாற்றில் – 16ஆம் நூற்றாண்டில் முழங்கப்பட்டது. முழங்கிய குரலுக்குச் சொந்தக்காரர் விஜயநகர பேரரசை கட்டி ஆண்ட பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர். ஆட்சிக் காலம் கிபி 1509 – 1529.
பேரரசர் கிருஷ்ணதேவராயரை நவீன வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப நாயகர் என்றே நாம் குறித்துக் கொள்ளலாம். சாதி, மத, இன, மொழிகளால் இந்த மண் பிரிந்து நின்றுவிடக் கூடாது என்று உளமாற எண்ணிய வரலாற்று அரசர்களில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் தலையாயவராக விளங்குகிறார். கட்டுப்பாடற்ற மத வழிபாட்டு சிந்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு போர்ச்சுகீசியர்களுக்கும் வழிபாட்டு உரிமையை இந்த மண்ணில் அளித்தவர் இவர்.
இவரது ஆட்சிக் காலத்தில் பற்பல புதுமைகள் நிகழ்த்தப்பட்டன. அவைகளில், குறிப்பிடத் தகுந்ததொன்றாக விளங்குவது இவரால் தோற்றுவிக்கப்பட்ட ‘நியோகி வம்சம்’ என்கிறது விஜய நகர வரலாறு.
**யார் இந்த நியோகி வம்சத்தார்?**
தெனாலி ராமனை நாம் அறிவோம். அவரை வெறும் விதூஷகனாகவும் விகடகவியாகவும் மட்டுமே தமிழுக்குக் கடத்திவந்து விட்டோம்.
ஆனால், தெனாலி ராமன் அவர்கள் ஆற்றிய ‘சமூகப்பணி’ ஈடு இணையற்றது. நெகிழ்ச்சிக்குரியது. போற்றி வணங்கத்தக்கது.
ஒருமுறை, ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் தனக்கு மிகவும் நெருக்கமான அமைச்சரான தெனாலி ஸ்ரீ ராமன் அவர்களைத் தனியே அழைத்து, இவ்வாறு வருத்தப்பட்டிருக்கிறார்…
“தெனாலி ராமன் அவர்களே, இது கேளுங்கள்… நம் நாட்டின் மக்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். விசுவாசம் மிக்கவர்கள். மகா புத்திசாலிகள். கடும் உழைப்பாளிகள். ஆனாலும், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை ஓர் ஒழுங்கில்லாமல் இருப்பதைக் கண்டீர்களா? வாழ்க்கை முறையை ஓர் சீரான கட்டுக்குள் (Systematic life style) வரையறுத்துக் கொள்ளாமல் இருப்பதால்… மக்கள் சக்தி மொத்தமும் வீணாகிப் போய்க்கொண்டிருப்பதைக் கண்டு எனக்கு கவலையாயிருக்கிறது.
இதோ, அந்தணர்களைப் பாருங்கள்! அவர்களின் பலமே அந்த வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறைதான். அதனாலேயே, அவர்களிடம் ஒழுக்கமும் – அறிவும் ஒளிவீசுகிறது. மேலும், இரண்டும் பிணைந்ததால் எழும் உயர்ந்த ஞானமும் அவர்களிடம் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொருவரும் நான்கு மொழிகளுக்குக் குறையாமல் கற்று வைத்திருக்கிறார்கள். அவர்களது ஆராய்ச்சி அறிவும், அர்ப்பணிப்புக் குணமும் வியக்க வைக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள்? வெறும் பூஜை புனஸ்காரம் இவற்றிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கின்றார்கள். இது சரிதானா?”
தெனாலி ராமன் ஆழ்ந்த சிந்தனைக்கு செல்கிறார்.
“அவர்கள் கடவுளை நன்றாக தொழட்டும். இந்தச் சமூகத்தை வெறும் சட்ட திட்டத்தினால் மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. சமூக ஒழுங்குக்கு இறையச்சமும் இன்றியமையாதது என்பதை நானும் உணர்கிறேன்.
ஆனால், பல வகைகளிலும் உயர்ந்து நிற்கும் அவர்களது மொத்த சக்தியும், வெறும் கற்பூரம் காட்ட மட்டும்தானா? மலையேறி, ஆறு காலம் மணியடித்து, பூஜை முடிப்பதின் அர்த்தம் என்ன? ஆண்டவா இந்த மக்களைக் காப்பாத்து என்பதுதானே? அப்படியிருக்க… அந்தணர்கள் இந்த சமூகத்தில் நேரிடையாகவே இறங்கி உழைத்தால், அந்தக் கடவுள் சக்தி கோபித்துக் கொள்ளவா போகிறது !? மாறாக, இன்னமும் பேரருள் அல்லவா பொழியச் செய்யும்!?”
“மன்னரின் எண்ணம் மறுக்க முடியாதது. மாசற்றது.”
“அப்படியெனில், உடனடியாக பிராமணப் பெருமக்களை இந்த சமூகத்தின்பால் நேரிடையாகத் திரும்பக் கேட்டுக் கொள்வோம்.”
“அரசே, பொறுங்கள்! தாங்கள் எண்ணுவது போல, பிராமணர்களில் எல்லோரும் வல்லோர் என்றும் முடிவெடுத்துவிட முடியாது.”
“அப்படியென்றால்… தேடுங்கள், ஊர் ஊராகப் போய்த் தேர்ந்தெடுங்கள்! இந்த சமூகத் தேடலுக்காக நமது அரசாங்கத்திலிருந்து என்னென்ன வசதி வேண்டுமோ அவற்றை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்த சமூகமும் உயர்ந்தாக வேண்டும். விரைந்து முடியுங்கள்.”
ஆம், இந்திய சமூக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு பேராணையை அன்று ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் பிறப்பித்தார். ஸ்ரீ தெனாலி ராமன் அதை சிரமேற் கொண்டார்.
அவ்வாறு தெனாலி ராமன் அவர்களால் நாடு முழுவதும், சல்லடையிடப்பட்டு, சமூக மேன்மையின் அவசியம் இராப்பகலாக அறிவுறுத்தப்பட்டு, அதன்பின் கடைந்தெடுத்துக் கண்டடையப்பட்ட ஆகச் சிறந்த 6,000 அந்தணர்களை உள்ளடக்கிய பிரிவுதான் ‘ஆறு வேலி நியோகிகள்’ என்பவர்கள். தெலுங்கு மொழியில் ‘வேலி’ என்றால் ஆயிரம். ஆறு வேலி என்றால் ஆறாயிரம் என்று பொருள்.
**நியோகி என்றால்? பார்ப்போம்…**
தெனாலி ராமனால் கண்டடையப்பட்ட ஆறாயிரம் அந்தணர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர். 1,500 X 4.
முதல் 1,500 பேரை ராணுவத்துக்குள் அனுப்புகிறார். அவர்கள் ராணுவ செயற்பாடுகளை எல்லாம் ஓர் நியமத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தத் தொடங்குகிறார்கள். இன்னொரு 1,500 பேரை நிர்வாகத்தைச் சீர்படுத்திக் கொடுக்கச் சொல்லி அனுப்புகிறார். ஊழல் அகற்றப்பட்டு, அரசாங்க கஜானாவுக்கும் மக்களுக்குமான இடைவெளி குறைக்கப்படுகிறது. மேலும் ஒரு 1,500 பேரை அழைத்து வியாபார விஷயங்களை எல்லாம் ஒரு வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தக் கேட்டுக் கொள்கிறார். வணிகத்தில் புதுப்புது சூட்சுமங்கள் புகுத்தப்பட்டு மக்கள் நலன் முன்னிறுத்தப்படுகிறது. முடிவாக 1,500 பேரை கல்வி, கலை மற்றும் கலாசாரத்தை உயர்த்திப் பிடிக்கக் கேட்டுக் கொள்கிறார்.
அவரது நோக்கமெல்லாம், மக்கள் சக்தி ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரப்பட்டு ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். ஊழலற்ற – நேர்மையான வழியில் இந்தச் சமூகம் நடைபோட வேண்டும் என்பதுதான்.
அதன் பின்னர் அந்த 6,000 அந்தணர்களும் அயராது உழைக்கத் தொடங்கினார்கள். தமிழகத்தில் தஞ்சாவூர் வரை விரவியிருந்த விஜயநகரப் பேரரசின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரு நியமத்துக்குள் (Discipline) கொண்டுவந்து நிறுத்தினார்கள். அதனால் தான், அந்த 6,000 அந்தணர்களும் ‘நியோகிகள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.
‘நியோகிகள்’ சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களோடும் அன்போடு கலந்து பழகினார்கள். அவர்களோடே கூட உண்டு, உறங்கி அவர்களின் வாழ்க்கை முறையில் ஓர் ஒழுங்குமுறையைக் கொண்டுவந்து நிறுத்தி, அவர்தம் வாழ்வில் ஓர் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாகயிருந்தார்கள்.
வேதங்களிலிருந்து தாங்கள் கற்ற மேன்மைகளையெல்லாம் அவரவர்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு எளிமைப்படுத்திப் போதித்தார்கள். அந்தணன் என்பவன் அறவோன் என்னும் குறளோடு பொருந்தி வாழ்ந்தார்கள்.
அதன்பிறகான விஜய நகரப் பேரரசின் ஆட்சிமுறை மற்றும் மக்கள் நலன், குறுகிய காலத்திலேயே பற்பல மடங்கு உயர்ந்து நின்றது என்று வானளாவப் புகழ்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். நியோகிகளின் தன்னலமற்ற அயராத உழைப்பைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் அவர்கள், மக்கள் மத்தியில் தன் அமைச்சர் தெனாலி ராமன் அவர்களது தலைமையில் மாபெரும் விழா எடுத்து அவர்களுக்குப் பெரும் மானியங்களை வழங்கிக் கௌரவித்தார். அரசாங்கம் – மக்கள் இரண்டு தரப்பிலும் நியோகிகளின் அந்தஸ்து உயர் நிலையில் இருந்தது.
ஆனால், நியோகிகள் வேறு ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், சக பிராமணர்கள் அவர்களை ஒதுக்கி வைக்கத் தலைப்பட்டனர்.
**ஏன்…?**
வேட்டைக்குப் போகிறான். வீதிப் புழுதியிலமர்ந்து, வியாக்கியானம் பேசுகிறான். கொல்லப்பட்டறை அனலில் இருந்துகொண்டு, அதர்வண வேதம் விரித்துரைக்கிறான். அழுக்கு மூட்டைகளுக்கு நடுவே சாய்ந்தபடி, வணிகர்களுக்கு கட்டம் போட்டு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறான். தாழ்த்தப்பட்டவர்களைத் தேடிப் போய், அவர்களது கையைப் பிடித்து அட்சராப்பியாசம் செய்து பழக்குகிறான். ஊர் ஊராக சுற்றுகிறான். மக்களுக்கு நீதி நியாயம் சொல்கிறேன் என்று மேடைக்கூத்துக் கட்டுகிறான்.
வேட்டைக்குப் போனவன் பசிக்கு எதைப் பிடித்து தின்றிருப்பான்? அங்கென்ன அக்கார வடிசலா கிடைத்துவிடும்? கத்தி பிடிக்கிறான்… சரிக்கு சரி சண்டைக்கு நிற்கிறான். நமக்கேயுரிய சாத்வீகம் எங்கே? ரத்தம் பார்த்துப் பழகும் முகத்தில் எப்படி பொலியும் தேஜஸ்? இவர்களோடெல்லாம் ஒட்டிப்பழகுவது நமது சாஸ்திரத்துக்கு எதிரானதாகி விடக் கூடும் என்றெல்லாம் தங்களுக்குள் பரப்புரை செய்து மெல்ல விலகினார்கள். விலக்கினார்கள்.
இது போதாது என்று விவிலியத்தை முதன்முதலில் தெலுங்கில் மொழிபெயர்த்து விட்டார் ஒரு நியோகி! கேட்க வேண்டுமா..? மொத்தமாக முறுக்கிக்கொண்டு, நான்கு தெரு தள்ளிப்போய் வாழத் தொடங்கி விட்டார்கள்.
இன்றும் கூட ஆந்திராவில், விஜயவாடா உள்ளிட்ட சில பகுதிகளில் நியோகிகள் – வைதீகிகள் உறவு சுமுகமானதாக இல்லை. பெண் கொடுப்பதோ, எடுப்பதோ இல்லை என்கிற அளவுக்கு அந்த வெறுப்பு தொடர்கிறது.
நியோகிகளின் வாழ்க்கை முறையும் வேதம் சார்ந்துதான் இருக்கிறது என்றாலும், ‘சுதர்மா’ எனப்படும் இவர்களது ‘சொந்த நியாயம்’ வழக்கமான பிராமணர்களிடம் இருந்து வேறுபட்டதாகவே இருக்கிறது.
இவர்களுக்கும் ஆவணி அவிட்டம் உண்டு என்றாலும் ‘நியமம்’ (Discipline) என்பது, சமூக நலன் சார்ந்த சிந்தனையே அன்றி வேறில்லை என்கிறார்கள் நியோகி அந்தணர்கள்.
‘இறையொழுக்கம்’ என்பது சமூகத்தை மேம்படுத்தலில் மட்டும்தான் வெளிப்படுகிறது என்பது இவர்கள் தரப்பு. “மக்களைக் கொண்டாடினால் மகேசன் குளிர்கிறான்” என்று உறுதியாகவே நம்புகிறார்கள். அதனால்தான் இவர்களை, SECULAR PRIEST என்று குறிப்பிட்டு அழைக்கிறார்கள் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள்.
சுதந்திர இந்தியாவின் நான்காவது ஜனாதிபதி வராககிரி வேங்கட கிரி என்னும் வி.வி.கிரி அவர்கள், ‘ஆசிரியர் தினம்’ நாயகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள், ஜெனரல் கே.வி.கிருஷ்ணா அவர்கள், ‘சங்கரா பரணம்’, ‘ஸ்வாதி முத்யம்’, ‘சலங்கை ஒலி’ உள்ளிட்ட பற்பல திரைக் காவியங்களைப் படைத்த இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்கள் எனப் பற்பலர் இந்த நியோகி வகுப்பை இதுகாறும் அலங்கரித்துள்ளனர்.
ஆறுவேல நியோகி, ப்ரமாசகா நியோகி, நந்த வாரிகா நியோகி, காரணகம்மா நியோகி, வேலனாட்டி நியோகி, தெலகான்ய நியோகி, திராவிட நியோகி, ஸ்ருஷ்டி கரணாலு நியோகி, காசலநாட்டு நியோகி, பகநாட்டி நியோகி எனப் பல வகைப்படும் இவர்கள், ஆந்திரா அகன்று தமிழகத்தில் விரவி வாழ்ந்தனர்.
அன்றைய சேலம் ஜில்லா, திருவண்ணாமலை, வட – தென் ஆற்காடு போன்ற பலப் பகுதிகளில் நிலபுலன்களோடு, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்திருந்தனர். மக்களிடையே அன்போடு கூடிய பெரும் செல்வாக்கு இவர்களுக்கு இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் பெருமளவில் பங்கேற்றதால், ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இருந்து தப்பிக்க, மேலும் சிதறி வாழும் சூழலுக்கு ஆளாகினர்.
பொதுவாக, இவர்கள் பொருளைப் பின்னுக்குத் தள்ளி, சமூக கௌரவத்தை முன்னிறுத்தி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். நுண்மான் நுழை புலம்மிக்கவர்கள் என்பதால் ‘நியோகி’ வம்சத்தவர்கள் இன்று பற்பலத் துறைகளிலும், உயர் பதவிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம், அமெரிக்கா, கனடா போன்ற தேசங்களில் நியோகிகள் பெருமளவில் நிறைந்து காணப்படுகின்றார்கள். எங்கிருந்தாலும், சமூக சேவையில் முன்னணியில் நிற்கிறார்கள். எழுதுகோலையும், போர் வாளையும் கொண்ட நியோகி மகா சபையின் முத்திரை (LOGO) எழுத்தும் – சமூகப் பாதுகாப்பும் எமதிரு கண்கள் என்கிறது.
எல்லாவற்றுக்கும் ஆதி காரணமாக ஒளிர்வது மாமன்னர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் அவர்களின் அன்றைய மாறுபட்ட சிந்தனையே! அதனை, நிறைவேற்றிக் காட்டிய தெனாலி ராமன் அவர்களது சீரிய முன்னெடுப்பே!
ஆம், ஆள்வோர் அறச் சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்களேயானால், ஒரு சமூகம் எப்படி எல்லாம் பயன்பெற முடியும் என்பதற்கு நியோகிகளின் இந்த வரலாறு நமக்கு சான்றாகிறது.
நியோகிகள் இந்த மண்ணுக்கு நிறையவே செய்திருக்கிறார்கள். ஒரு வியப்பான, மகிழ்ச்சிக்குரிய செய்தியோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
திருவள்ளுவர். தமிழின் தலைமகன். வான்புகழ் கொண்ட நம் வள்ளுவப் பெருமானுக்கு 2000 ஆண்டுகளாக உருவம் இல்லாமலேயே இருந்து வந்தது. முடிவாக, 1959ஆம் ஆண்டுதான், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஒரு திருவுருவம் படைக்கப்பட்டு – நிலை நிறுத்தப்பட்டது. அந்தத் திருவள்ளுவர் திருவுருவத்தை தனது 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலனாக நமக்குப் படைத்துத் தந்தவர், பேரறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பரும், அவரால் ‘ஓவியப் பெருந்தகை’ என்று போற்றப்பட்டவருமான கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களும், SECULAR PRIEST எனப்படும் நியோகி வம்சத்தவரே.
தமிழுக்குத் தெலுங்கு தங்கையாவாள். வேணுகோபால் சர்மா எனது தந்தையாவார்.
கட்டுரையாளர் குறிப்பு:
ஸ்ரீராம் சர்மா…
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத்தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.