சாம்பல் புதன்: உக்ரைனுக்காக சிறப்பு பிரார்த்தனை!

Published On:

| By admin

சாம்பல் புதன் தினத்தில் அனைத்து தேவலாயங்களிலும் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் உக்ரைன்-ரஷ்ய போர் முடிவுக்கு வர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என்றும் மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறைப்பட்டார் என்றும், மீண்டும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்றும் பைபிள் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்தெழுதலையும் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.

இந்தாண்டு புனிதவெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 17ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் தினத்துக்கு முன்பு வருகின்ற, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, நாற்பது நாட்களைக் கிறிஸ்தவர்கள் ‘தவக்காலம்’ என அழைக்கின்றனர். அந்த தவ நாட்களின் தொடக்கம் ஒரு புதன் கிழமையில் தொடங்கும். அந்த நாள் தான் ‘சாம்பல் புதன்’. அதன்படி, சாம்பல் புதனான இன்று(மார்ச் 2) கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

சாம்பல் புதனை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் கொண்டு சிலுவை குறியிட்டு பூசினர். அதுபோன்று, சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேராலய வளாகத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வர வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சாம்பல் புதன் தினத்தில் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உக்ரைன் நாட்டின் அமைத்திக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel