பிரான்ஸ் நாட்டிடமிருந்து அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களின் முதல் விமானம் அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, ரபேல் விமானத்தைப் பெற்றுக்கொள்ள மூன்று நாட்கள் பயணமாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் சென்ற அவரை அந்நாட்டு விமானப் படை உயர் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்த ராஜ்நாத் சிங் இந்தியா – பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் ராஜாங்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, மெரிக்னாக் நகரில் பிரான்ஸிடமிருந்து நேற்று (அக்டோபர் 8) ராஜ்நாத் சிங் முதல் ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார். பின்னர் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இன்றைய தினம் வரலாற்றின் முக்கியமான நாள். இந்த நிகழ்ச்சி இரு நாட்டு உறவுகளின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது. ரஃபேல் எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எங்கள் இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அனைத்துத் துறைகளிலும் மேலும் அதிகரிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்துக்கு சந்தனம் மற்றும் பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது. விமானத்தின் மீது தேங்காய் மற்றும் பூக்களை வைத்து வணங்கிய ராஜ்நாத் சிங், முன் பகுதியில் ‘ஓம்’ என்று இந்தியில் எழுதினார். மேலும், புதிய வாகனம் வாங்கினால் டயரில் எலுமிச்சைப்பழம் வைத்து திருஷ்டி கழிப்பது போல, விமானத்துக்கும் கயிறு கட்டி, அதன் டயர்களுக்கு அடியில் எலுமிச்சைப்பழம் வைத்து பூஜை செய்தார். பின்னர், மெரிக்னாக் விமானப்படைத் தளத்தில் இருந்த ரஃபேல் விமானத்தில் ராஜ்நாத் சிங் 25 நிமிடங்கள் பறந்தார்.�,