gதீபாவளி சிறப்புப் பேருந்துகள் விவரம்!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகச் சிறப்புப் பேருந்துகளின் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை வரும் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதமாகவே பேருந்து மற்றும் ரயில்களில் முன் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் இன்று முதலே சென்னை மற்றும் பிறபகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. அதன்படி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் இன்று (அக்டோபர் 24) காலை முதல் தொடங்கப்பட்டது. கோயம்பேட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் பதிவு மையங்களைத் தொடங்கி வைத்தார்.

பயணிகளின் வசதிக்கு ஏற்ப கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர தாம்பரம் மெப்ஸில் 2 முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி, மாதாவரம் பேருந்து நிலையத்தில் தலா ஒரு முன் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 30 முன்பதிவு மையங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 2225 பேருந்துகளுடன், தீபாவளிக்காக அறிவிக்கப்பட்ட 10,940 சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

**27 முதல் 30 வரை சிறப்புப் பேருந்துகள்**

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்ப 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4,627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மற்ற மாவட்டங்களிலிருந்து இதர ஊர்களுக்குச் செல்ல சுமார் 6,921 பேருந்துள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

**பிற ஊர்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்**

பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் நெல்லை ஆகிய இடங்களுக்கு 1,165 பேருந்துகளும், பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களுக்கு 251 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அதுபோன்று, பேருந்துகள் எங்கு நிறுத்தப்பட்டிருக்கின்றன, பேருந்து புறப்படும் நேரம், நடைமேடை விவரம் ஆகியவற்றைப் பயணிகளிடம் எடுத்துக்கூறப் போக்குவரத்துத் துறை சார்பில் ஆங்காங்கே ஊழியர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளுக்குத் தேவையான விவரங்களை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**சிறப்புப் பேருந்து நிலையங்கள்**

மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் எனக் கிழக்கு கடற்கரைச் சாலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படவுள்ளன.

திண்டிவனம், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லக் கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும். விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாகக் கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.

**24 மணி நேர இணைப்பு பேருந்துகள்**

இந்த சிறப்புப் பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று, 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share