வெட்டியான்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

– ஸ்ரீராம் சர்மா

எனது திருவல்லிக்கேணி வாழ்வில், மறக்க முடியாத ஓர் கேரக்டர் சம்பத்.

சம்பத்துக்கு மின்னும் கருத்த மேனி. பரந்த தோளொடு கூடிய கட்டுடல். சிவந்த, அகன்ற கண்கள். பொல பொலவென அலைபாயும் தலைக் கேசம். பளீறெனும் வெண்ணிற சிரிப்பு. அசப்பில் கொஞ்சம் விஜயகாந்தைப் போலவே தோற்றமளிப்பான்.

பழகுதற்கு இனியவன். மிக நல்லவன். எனக்கு வாய்த்த இனிய நண்பன்.

சம்பத், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டின் வெட்டியான்.

“பேகி” பேண்டும், “டி சர்ட்டும்” அணிந்து கொண்டு, மாலை நேரங்களில் அவன் கிருஷ்ணாம்பேட்டை வீதியில் நடந்து வரும் போது, வளர்ந்து வரும் ஒரு சினிமா ஹீரோ போலவே இருப்பான் சம்பத்.

“டேய்…சம்பத்து, ஒரு நாள் உன்னை ஹீரோவா வெச்சி ஒரு படம் எடுக்கப் போறேன் பார்…” என்பேன்.

“அட, கம்முன்னு போப்பா…” என்று நெளிந்து கொண்டே ஓடி விடுவான்.

நமது சமூகத்தில் வெட்டியான்கள் என்றால் பொதுவாகவே ஓர் அச்சமும், அசூயையும் நிலவுகிறது. உண்மையில் அவர்கள் வெள்ளந்தியானவர்கள். மிக, மிக இலகுவானவர்கள்.

மனிதர்கள், மரணத்தின் பால் தங்களுக்கு இருக்கும் அச்சங்களை எல்லாம், வெட்டியான்கள் மேல் ஏற்றிக்கொண்டு, அவர்களிடம் இருந்து விலகி விடுகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

திருமூல நாயனார் தன் திருமந்திரத்தில், “நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே“ என்று மனிதர்களை சாடுவார்.

பாசம் பொழிந்து, பருவம் பார்த்து, கண் துஞ்சாது வளர்த்தெடுத்த, தன் ஆயி – அப்பனே ஆனாலும் கூட, உயிர் என்று ஒன்று போய் விட்டால்… சூறையங்காட்டிடை கொண்டு போய் சுட்டுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் செல்லும் குணம் படைத்தவர்கள்தான் மனிதர்கள்.

உற்ற நண்பனே ஆனாலும் பிணமான பின்பு, கட்டித் தழுவி அழ அருவெறுப்புக் கொண்டு ஒதுங்கி நின்று வாய் பொத்தி அழுவார்கள்.

மேலே, சாய்ந்தால் “அது” அடித்துவிடும்…”இது” அடித்து விடும் என்னும் மூட நம்பிக்கை சார்ந்த கற்பனை பயங்கள் வேறு அவர்களை பீடித்து விட, எட்ட நின்று கொண்டே துக்கம் காட்டிப் போவார்கள்.

ஆனால், உயிர் நீத்து “அது” வாகிவிட்ட பூத உடலை…பதமான தீயில் வெந்து தணிய வைத்து, சாம்பலாக்கி, மறுநாள் சாங்கியத்துக்கு அந்த சாம்பலை கவனமாக அள்ளித் தந்து சம்பந்தப்பட்ட உறவினர்களின் மனதில் நிம்மதியை கொண்டு சேர்க்கும் “மகா புண்ணிய” செயலை செய்து முடிப்பவர்கள் வெட்டியான்கள்.

இன்றாவது மின் மயானம் வந்துவிட்டது. 20 வருடங்களுக்கு முன்னர் எரிப்பதும், புதைப்பதும் தான் வழக்கமாக இருந்தது.

புதைப்பதில் இருக்கும் சிக்கல் பெரிது. ஒரு உடலை புதைத்த பின்னர், ஆறு மாதம் கழித்துத்தான் அந்த இடத்தில் மீண்டும் புதைக்க வேண்டும் என்பது மயான விதி.

அப்போதுதான், அந்த உடல் முழுவதும் “டீ கம்ப்போஸ்” ஆகி, மண்ணோடு மண்ணாகி விட்டிருக்கும். மீண்டும் அங்கே மற்றொரு உடலை புதைக்க முடியும்.

ஆனால், ஒரு புறம் ஜனத்தொகை பெருத்துக் கொண்டே இருக்க, மற்றொரு புறம் ஆக்ரமிப்பாளர்களால் சுடுகாடு சிறுத்துக் கொண்டே வர, நகர மயானங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் போய் விட்டது.

இரண்டு அல்லது மூன்றே மாதங்களில் மீண்டும் “அதே இடத்தில்” குழி தோண்ட நிர்பந்திக்கப்படுகிறார்கள் வெட்டியான்கள்.

அப்படி இறங்கித் தோண்டும் போது, மிக மோசமான துர் நாற்றத்தோடு கூடிய “ஆபத்தான வாயு” வெளிப்படும். அதில் மயங்கி, குழிக்குள்ளாகவே சரிந்த வெட்டியான்கள் பலர் உண்டு.

உடனிருக்கும் வெட்டியான் நண்பர்கள் அவசர அவசரமாக அவரை

ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிப் போய் ஆக்ஸிஜன் வைத்து பிழைக்க வைப்பதற்குள் படாதபாடு பட்டு விடுவார்கள்.

தொடரும் நாட்களில் பாதிக்கபட்டவருக்கு தூக்கம் மிக மோசமாகக் கெடும். நடு ராத்திரியில் அலற விழிப்புக் கொடுத்து விடும். அவர்களும் மனிதர்கள் தானே? ஊரே கோயிலுக்கு அழைத்துச் சென்று பூசாரியை விட்டுக் கழிப்பு எடுப்பார்கள்.

அப்படி இப்படி சகஜ நிலைக்குக் கொண்டு வர ஒரு மாதமாவது ஆகி விடும். அதுவரை அவரது பிழைப்பு ஸ்தம்பித்துப் போகும். அந்த வெட்டியான் குடும்பத்தின் வாழ்வாதார நிலை இன்னும் மோசமாகும்.

**எரிப்பதில் இருக்கும் சிக்கல் வேறு ரகம்**

விறகுகளையும், சாண விராட்டிகளையும் கொண்டுதான் உடலை எரியூட்டுவார் வெட்டியான். நல்ல மழைக் காலத்தில் அவைகள் நமத்துப் போய் எரிய மறுக்கும். அது போதாதென்று, சுடுகாட்டு ஓட்டைக் கொட்டகை தன் பங்குக்கு ஒழுகி, எரியும் பிணத்தை அணைக்கப் பார்க்கும். மழைக் கால நாட்கள் வெட்டியான்களுக்கு பெரும் போராட்டம் தான்.

விறகுக்கும், சாண விரட்டிக்கும் மாநகராட்சி ஒதுக்கித் தருவதோ மிக சொற்பத் தொகை. அப்படி, இப்படியாக போராடி ஒரு வழியாக கடமையை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள்.

இவ்வளவு போராட்டங்களுக்குப் பின், தங்கள் நிலையை சொல்லி அழுதாலும், வெட்டியான்களுக்கு காசு தர மனமில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நிற்பார்கள் பாழும் மனிதர்கள்.

மனிதர்கள் மிக விந்தையானவர்கள். நோயுற்ற ஓர் உடலை, உயர் தர மருத்துவமனையில் அட்மிட் செய்து மாதக் கணக்காக மருத்துவம் செய்ய சொல்வார்கள். மருத்துவம் பலனளிக்காமல் போக, உயிர் போன உடலை ஐசியூ-வில் வைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் பேசியபடியே அவர்கள் தீட்டும் லட்சக்கணக்கான பில்களுக்கு, எந்த எதிர்ப் பேச்சும் இல்லாமல் தலையாட்டியபடியே கட்டி உடலை மீட்பார்கள்.

இறந்த உடலை கிடத்தி வைத்து, அதன் ஆன்மாவை வழியனுப்பும் “வைதீகக் காரியம்” செய்யும் அந்தணர்களிடமும், அவர்கள் கேட்கும் தொகையை வணங்கிக் கொடுத்து விடுவார்கள்.

ஆனால், கொஞ்சமும் அசூயை பார்க்காமல், நாள்பட்ட அந்த “உடலை” நல்லபடியாக தொட்டு அணைத்து, தூக்கி வைத்து வழியனுப்பி முடிக்கும் வெட்டியானுக்கு மட்டும் வெறும் ஒரு ஆயிரம் ரூபாய் தரக்கூட மனமில்லாமல் சலித்து சபிப்பார்கள்.

**பலருக்கு தெரியாத செய்தி ஒன்று உண்டு**

சுடுகாட்டு வெட்டியான்களுக்கு, அரசாங்க சம்பளமும் தரப்படுவது இல்லை. மாநகராட்சியின் சம்பளமும் அளிக்கப்படுவது இல்லை. இது 20 வருடங்களுக்கு முன்பான நிலை.

ஆம், எந்தவிதமான சம்பள உத்தரவாதமும் இல்லாமல் இந்த சமூகத்துக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த பெருமக்கள் தான் வெட்டியான்கள்.

பிணம் சுமந்தபடி சுடுகாட்டுக்கு வருபவர்கள், மனம் உவந்து கொடுக்கும் பணத்தை மட்டுமே நம்பி அன்றைய அவர்களது வாழ்வாதாரம் அமைந்திருந்தது.

வெட்டியான்களைப் பற்றிக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு.

வறுமையின் பிடியில் வாழ்பவர்கள்தான் என்றாலும், வெட்டியான் சமூகத்தவர்களில் யாரும், என்றும் நெறி மாறிப் போனதில்லை.

ஆம், ஒரு வெட்டியான் திருடியதாகவோ, கொள்ளையடித்ததாகவோ, கொலை செய்ததாகவோ, கற்பழிப்பில் ஈடுபட்டதாகவோ வழக்கு ஏதும் என்றைக்கும் இருந்ததில்லை. சிறைக்கு சென்ற வெட்டியான் என்று இங்கே யாரும் இல்லை. சமூக ஒழுக்கத்தில் வெட்டியான்கள் என்றுமே தவறியதில்லை.

**அப்படிப்பட்டவர்களை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது ?**

அவர்கள் பொது வீதிகளில் நடமாடிவிட முடியாது. தாகத்துக்கு எங்கும் தண்ணீர் கேட்டு விட முடியாது. அவ்வளவு ஏன்….நடந்து களைத்தால் யார் வீட்டு வாசற் படியிலும் அவர்கள் காலார அமர்ந்து விட முடியாது.

“ஐயோ, என் வீட்டு வாசலில் வந்து ஏன் அபசகுனமாக உட்காருகிறாய்….?” என்று விரட்டி விடுவார்கள்.

அரசாங்கமும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. இந்த சமூகமும் அவர்களிடம் நன்றி உணர்வோடு இல்லை. ஆனாலும், அவர்கள் இந்த சமூகத்துக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தானாக இறந்த உடல், தற்கொலைக்கு ஆட்பட்ட உடல், தீயில் கருகிய உடல், நோயில் நொந்த உடல், படுகொலையாகி கிழிந்த உடல், பச்சைக் குழந்தையின் உடல், புதரில் கண்டெடுக்கப்படும் பல நாள் அழுகிய அனாதை உடல் என எது வந்தாலும் தொட்டு, எடுத்து, புதைக்கும் இவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரம் தெரேஸா அம்மையார்களுக்கு சமம் ஆவார்கள்.

ஆனால், இந்த சமூகத்துக்குத்தான் அதை உணரும் அளவுக்கு சுரணை இல்லாமல் போய் விட்டது.

வெட்டியான்களுக்கு இணையான “சமூகப் பொறுப்பு” உடைய மனிதர்கள் இந்த சமூகத்தின் எந்த மட்டத்திலும் இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்.

அரசாங்க சம்பளம் வாங்கும் போக்குவரத்து ஊழியர்கள் போன்றவர்கள் சில சமயங்களில் அதிக சம்பளம் கேட்டு “ஸ்ட்ரைக்” செய்திருக்கிறார்கள்.

கார்ப்பொரேஷன் சம்பளம் வாங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் கூட “ஸ்ட்ரைக்” செய்திருக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள்… அரசாங்க சம்பளப் பட்டியலில் இல்லாது போனாலும் கூட, எல்லோராலும் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்ட போதும் கூட, என்றைக்காவது ஓர் நாள், ஒரே ஒரு நாள் வெட்டியான்கள் “ஸ்ட்ரைக்” செய்தது உண்டா ?

அப்படி அவர்கள் “ஸ்ட்ரைக் செய்தால் நிலைமை என்னவாகும் ? ஊர் நாறிப் போகாதா ?

வெட்டியான்களின் “சமூகப் பொறுப்பு” நமக்கு பல பாடங்களை சொல்லித் தருகிறது. ஆனால், படித்துக் கொள்ளத்தான் நமக்கு நேரமில்லாமல் போய் விட்டது.

இது போன்ற குமுறல்களைத்தான் 1994ஆம் ஆண்டு 10 நிமிடம் ஓடும் ஓர் குறும்படமாக இயக்கினேன்.

-இதனுடைய தொடர்ச்சியை மதியம் 1 மணி பதிப்பில் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share