மழித்தலும் நீட்டலும் – 2 – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

உலகின் ஆதி சமயங்களாக சைவ – வைணவ சமயங்கள் இருந்தன என்பது அதீதம் என்றாலும், நாம் வாழும் இந்தியப் பெருநிலப் பரப்பின் ஆதி சமயங்களாக அவை நின்று நிலாவின என்பது உண்மை.

அடுத்து வந்தது சமண – பௌத்த சமயங்கள்.

குறித்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் சமணமும் புத்தமும் இந்து மதத்தை எதிர்த்தோ அல்லது மறுத்தோ வந்தவை என்கிறார்கள். அப்படி அல்ல. மாறாக, அதன் கிளைகளாக வந்தவையே அவை.

“ஆதிநாத்” எனப்படும் கடவுளை வணங்கும் சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் தன் பெயரை “ரிஷப நாதா” என்றுதான் வைத்துக்கொண்டார்.

ரிஷபம் என்பது காளை. அதன் முதுகில் அமர்ந்த நாதன் சிவன். சிவன் சைவத்தின் மூல வடிவம். (ஜைனம் என்பதும் சமணம் என்பதும் வேறு வேறு என்ற வாதங்களும் இங்கே உண்டு. அது தனிக்கதை.)

அடுத்தக் கட்டம் செல்வோம்…

மகாவீரர் தோன்றியது திருவள்ளுவருக்கு 600 வருடங்களுக்கு முன்பு.

அவர் ஐந்து உறுதி மொழிகளை எடுக்க சொல்கிறார்.

அவை: அஹிம்சை – சத்தியம் – அஸ்தேயம் (திருடாமை) – பிரம்மச்சர்யம் – அபாரிகிருகம் (பற்றற்று இருத்தல்)

குறித்துக்கொள்ள வேண்டும் மேற்கண்ட ஐந்தில் தலையை மழுங்கடித்தல் என்பது எங்கும் காணப்படவில்லை.

அவருக்குப் பின்னே தோன்றிய புத்தர் பெருமான் வகுத்த “பஞ்ச சீலங்கள்” என்பதிலும்கூட இந்த மழுங்கடிக்கும் உத்தரவு இல்லை.

ஆனால், போகப்போக பின்வந்த “பிக்குகள்” தங்களை இந்து சமயத்திலிருந்து தனித்துக் காட்ட முடிவெடுத்தார்கள்.

ஆதியிலிருந்தே இந்து சமய ரிஷிகளின் அடையாளமாக இருப்பது சடா முடியும் நீண்ட தாடியும்.

அதை மறுத்தால் மட்டுமே தாங்கள் தனித்துத் தெரிவோம் என்பதனால் சமண துறவிகள் தங்கள் தலைகளை மழித்துக்கொண்டு காட்டினார்கள்.

ஏறத்தாழ அரசியலாக்கினார்கள் எனலாம்.

காரணம், எல்லோராலும் ஏற்றுக்கொண்டு வழிபடப்படும் அந்த ரிஷப நாதாவின் தோற்றமும், மகாவீரரின் தோற்றமும் ஏன் புத்தரின் தோற்றமும்கூடத் தலை மழுங்கடிக்கப்பட்டதாகக் காண முடியவில்லை.

ஒன்றை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே அங்கே சண்டையும் சச்சரவும் வந்துவிடும் அல்லவா? வந்தது.

அது ஏறத்தாழ கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நாயன்மார்களும் – ஆழ்வார் பெருமக்களும் தோன்றும் வரை தொட்டுத் தொடர்ந்தது என்று அறுதியிட்டு சொல்கிறார் மகாவித்வான் சண்முகம் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்ற மயிலை சீனி வேங்கடசாமி.

இந்த இடைப்பட்ட காலத்தைத்தான் திருவள்ளுவப் பேராசான் கடக்கிறார்.

திருவள்ளுவருக்கு ஏறத்தாழ 600 வருடங்களுக்கு முன்னால் வீரியம் கொண்டு எழுந்த ஜைன அல்லது சமண சமயம், பௌத்த சமயம் ஆகிய இவ்விரண்டின் கருத்தாக்கங்களும் ஏறத்தாழ 7ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி நின்றிருக்கின்றன.

எனில் ஆதியில் இருந்த சைவ, வைணவ சமயங்கள் அதன் தாக்குதலைச் சந்தித்தே இருக்க வேண்டும். அதனால் சண்டையும் சச்சரவும் அவ்வப்போது எழுந்தபடியேதான் இருந்திருக்க வேண்டும். அதனால் இந்த மானுட சமூகம் பாதிப்புக்குள்ளாகி தத்தளித்தபடியேதான் கடந்திருக்கும்.

ஆம், தங்கள் தங்கள் நிலைப்பாட்டை நிலைநிறுத்தி மக்களை ஈர்த்துக்கொள்ள வாக்குவாதம், குரோதம், துரோகம், கொலை, கொள்ளை எனப் பல வகைகளிலும் இந்தச் சமூகத்தை நாசம் செய்திருக்கிறது.

இந்த, வீண் விவாத அடிதடியினால் அன்று பெரிதும் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்கள்தான்.

“ஐயோ, இவர்கள் தங்கள் தங்கள் சமய நியாயங்களுக்காக, அல்லாதது, பொல்லாதது செய்து எங்கள் அடிப்படை வாழ்வாதார நிம்மதியைக் கெடுக்கிறார்களே… ச்சீ, ச்சீ…” என்று தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில்தான்… சைவ – வைணவ சமயங்கள் சொல்லும் நியாயத்தையும், ஜைன அல்லது சமண மற்றும் பௌத்த சமயங்கள் சொல்லும் நியாயத்தையும் உணர்ந்து ஏற்றுக்கொண்டவர். அதனால் ஏற்படும் சச்சரவுகளை சகித்துக்கொள்ள முடியாதவராக வெகுண்டு போகிறார்.

மக்களின் மனக் குமுறலைப் பொறுக்க மாட்டாமல்தான், உத்தர வேதம் எனப்படும் தன் குறள் ஒன்றின் மூலம் உள் புகுந்து “மத்தியஸ்த்தம்” செய்கிறார் திருவள்ளுவப் பேராசான்.

தன் தகவுக்கேற்ப அறிவுறுத்தச் செய்கிறார்…

“ஐயோடா சாமி… நீ மழுங்க மொட்டை அடித்துக்கொள்ளவும் வேண்டாம்; எஞ்சாமி… நீ தாடிமுடி நீட்டியும் காட்ட வேண்டாம்… இந்த மக்கள் உங்களை எதனால் வெறுக்கிறார்களோ அதை மட்டும் விட்டுவிட்டு உய்யும் வழியைப் பாருங்கள். அது போதும்” என்றார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்

பழித்ததை ஒழித்து விடின்.

இது, சமய சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் எழுதிய தீர்ப்பு!

குறிப்பு:

“திருவள்ளுவத் திருவுருவப் பட விளக்கம்” என்னும் அந்த சிறு நூலில் ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள் இரண்டே வரிகளில் சொன்னதை இங்கே என்னளவில் நீட்டிச் சொல்லியிருக்கிறேன்.

அவரால் எழுதப்பட்ட அந்த சிறு நூலை மின்னம்பலம் பதிப்பகத்தின் மூலமாகவும் விரைவில் வெளியிடவிருக்கிறேன். நன்றி!

**கட்டுரையாளர் குறிப்பு**

**ஸ்ரீராம் சர்மா**

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

[மழித்தலும் நீட்டலும் 1](https://minnambalam.com/k/2018/01/06/14)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share