அம்மைக்கு எளிது! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

– ஸ்ரீராம் சர்மா

ஆண்டாள் மேல் வைரமுத்து கல்லெறிந்து விட்டார் என்று ஊரெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

“யாதும் ஊரே ; யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றன்.

போலவே…

“வையத்து வாழ்வீர்காள்…” என்று எல்லோரையும் ஒருங்கே அழைத்தவள் அந்த ஆண்டாள் பெருமாட்டி.

அப்படிப்பட்டவளை ஆளாளுக்கு இப்படி நடு வீதியில் வைத்து கேள்வி கேட்டு பஞ்சாயத்துச் செய்துகொண்டிருப்பதை மனம் முற்றிலுமாக வெறுக்கிறது.

பரம்பரையாகத் தமிழ் ஞானம்கொண்ட எனது தந்தையார் அவர்களிடமிருந்து ஓரளவுக்குத் தமிழ் கற்றவன் என்ற வகையில் துணிந்து சொல்வேன்…

கம்பனுக்குப் பிறகான மாமாயத் தமிழ் ஆண்டாளின் திருப்பாவையில் மட்டுமே உண்டு.

அதன்பின் பாரதியிடம்…

பின் கண்ணதாசனிடம்…

அதன்பின் வேறு யாரிடமும் இதுகாறும் காணக் கிடைக்கவில்லை.

கிடைக்காது.

காரணம், தமிழில் மட்டுமல்ல, அகண்ட ஆன்மவெளியிலும் அதற்காக ஆழ, ஆழத் தோய்ந்தாக வேண்டும்.

அவ்வாறான ஆன்ம சக்தி அமைவது என்பது எளிதல்ல.

அதற்கு தன்னோடும், தன் வாழ்க்கையோடும் ஓயாமல் நின்று உள்ளும் புறமுமாகப் போராடியாக வேண்டும்.

அதன்பின் படைப்பு என்பது தானாகவே தோன்றிவிடும்.

அப்படிப்பட்ட படைப்புகள் மட்டுமே காலத்தால் கடந்து நிற்கும். அந்த அனுபவத்தைக் கொடுப்பினை என்று சொன்னாலும் தகும்!

சரி, விஷயத்துக்கு வருவோம்!

இன்று, வைரமுத்து அவர்களை ஊர் ஊராக எல்லோரும் நையப் புடைந்தபடி பழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கு அவர் இடம் கொடுத்திருக்கக் கூடாது என்பதை ஒருபுறம் ஏற்றுக்கொண்டாலும்…

அவரது உளம் நோகும்படி சகட்டுமேனிக்கு ஏசுவதும் தகாது என்பதே அடியேனின் எளிய கருத்து.

காரணம், அது “கவி உள்ளம்”.

அந்தக் கவி உள்ளத்தை… “ஏச… ஏச…” அது, தன் ஆன்மாவுக்குள் புகுந்து தன்னைத் தானே நசுக்கிக்கொள்ளும்.

மாற்றார் அறியாதபடிக்கு உள்ளுக்குள் புதைந்துகொண்டு அலறும். அதை ஆண்டாள் பொறுக்க மாட்டாள்.

பொறுக்க…

வைரமுத்து அவர்களின் உள்ளம் “கவி உள்ளம்” என்று நான் ஏன் சொல்கிறேன் என்பதை, அன்றைய என் பள்ளிக் கல்லூரிக் காலத்தை நினைவுகொண்டு கொஞ்சம் பகிர எண்ணுகிறேன்.

இன்று அவர்மீது இருக்கும் கோபத்தைக் கொஞ்சம் தள்ளிவைத்துக் கொண்டு தொடர வேண்டுமாய் இறைஞ்சுகிறேன்.

நான் அறிந்த வைரமுத்து மகா கவிஞன். தமிழின் ஆழங்காற்பட்டவன். அவன் அறியாத சந்தங்கள் தமிழில் இல்லை என்பேன்.

ஏதோ சினிமாவுக்கு “தகிட, தகிட…” என்று எழுதும் மற்ற வெற்றுக் கவிஞர்கள் போல வைரமுத்துவை இன்றைய தலைமுறையினர் இழித்துப் பார்த்துவிடக் கூடாது என்பதால் கொஞ்சம் முன்னேறிச் சொல்கிறேன்.

வடுகப்பட்டியாருக்கு வாய்த்த “மரபுக் கவி ஆற்றல்” என்பது சாதாரணமானதல்ல.

“புலவர்க்கு வெண்பா புலி” என்பார்கள். அவர், அதில் வல்லவர்.

ஆம், வெண்பா இலக்கணம் அவ்வளவு கடினமானது. அதை வெறும் இலக்கண “ஸ்ட்ரக்சராக” மட்டுமே உள்வாங்கிக்கொண்டு ஓயாமல் எழுதித் தள்ளுபவர்கள் இங்கே ஏராளம் உண்டு. அவையெல்லாம் வெண்பாக்கள் அல்ல.

கண்ணதாசன்கூட தனது “தென்றல்” பத்திரிகையில் வெண்பாவுக்காகவே ஒரு போட்டியை வைத்துப் பரிசளித்துவந்தார். “வெண்பா ஆயிரம்” என்னும் நூலைப் படித்துப் பார்க்கப் புரியும்.

அந்த வெண்பா ஆயிரம் நூலின் ஒவ்வொரு ஈற்றடிக்கும் ஓயாமல் வெண்பா எழுதிப் பழகியவன் நான்.

கேளுங்கள், வெண்பாவுக்கென்று ஓர் “ஆன்மா” உண்டு!

“கவி உள்ளம்” ஒன்றின் வழியே வெளிப்படும்போது அது நம்மை சிலிர்க்க வைத்துவிடும்.

ஆம், “தாயின் சிறு துளை வழியே வெளியேறும் மனிதனை” போல, வெண்பாவுக்கே என்று நூதனமான “லாகவம்” ஒன்று உண்டு!

அந்த லாகவத்தில் தோய்ந்தவர் வைரமுத்து…

பாவாடை தாவணி பருவநயம் சிந்திவர

தாவாமல் தாவும் தர்சிட்டு – பூவாகி

ஆடிக் குலுங்கி அடையாளம் மாறி இனி

மூடி மறைப்பாள் முகம்!

என் கல்லூரிக் காலத்தில் படித்த அவரது வெண்பா இது.

ஆதி தாளத்தின் சூட்சுமத்தில் அடங்கிய இதுபோன்ற “நாத வெண்பா” க்கள் வசப்பட வேண்டும் என்றால், உள்ளுக்குள் “ஆன்ம லயம்” என்ற ஒன்று வாய்த்திருக்க வேண்டும். அது அவருக்கு பரிபூரணமாக வாய்த்திருந்தது.

இதுபோன்ற அவரது பல நூறு பழைய படைப்புகள் என் நினைவில் உண்டு.

அப்படிப்பட்ட படைப்பாளனை நாம் லேசில் விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதே எனது எளிய கருத்து.

எனது இளம் வயதில், நூற்றியெட்டு அம்மன் கோயில்களைக் கோத்து அதனை வெண்பாக்களாக – அந்தாதியாக எழுதிப்பார்த்துத் திகைத்தவன் என்னும் வகையில் அறுதியிட்டு சொல்கிறேன்… வைரமுத்து என்ற மனிதன் ஒரு வரகவி!

உள்ளுக்குள் தமிழாய்ந்த தாள லயம் ஒன்று இல்லாது போனால் இதுபோல் எழுதுவது சாத்தியமில்லை.

இந்திர லோகத்து இளசுகளை தேவரெலாம்

மோகக் கிறுக்கெடுத்து முன்னூறு முத்தமிட

இட்ட முத்தத்து எச்சில் கறையழிக்க

வட்டில் அமுதெடுத்து வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெலாம் வாய்க்கால் வழியோடி

கற்பக மரங்களுக்கு கால்கழுவ கால்கழுவ

கால் கழுவும் சுக வெறியில் கற்பக மரம் பூக்க

அந்தப் பூவையெல்லாம் அரும்போடு கிள்ளிவந்து

சொல்லரசே நானுனக்கு சூட்டிவிட வேணுமல்லோ!

இது, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தபோது வைரமுத்து எழுதிய கவிதாஞ்சலி !

நினைவில் இருந்து தருகிறேன். என் நினைவில் தங்காமல் போன சில வரிகளும் இருக்கலாம்.

வைரமுத்து என்பவர் ஏதோ சாதாரண சினிமா கவிஞர் என்று இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ளக் கூடாது என்பதால்தான் இவ்வளவு நீட்டிச் சொல்கிறேன்.

கண்ணதாசனின் திரைப்பாடல் அகன்று அவரது, ஆட்டனத்தி ஆதிமந்தி, தைப்பாவை, கிருஷ்ண காந்தன் பாமாலை எனப் பலவும் உண்டு என்பதைப் போல…

வைரமுத்துவுக்கும் “பழைய பனை ஓலைகள்”, “வைகறை மேகங்கள்” போன்ற அவரது படைப்புகளும் உண்டு.

அதிலடங்கிய யாப்புடன் கூடிய சந்தங்கள் எல்லாம் அன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து தமிழின் அடுத்த கட்டம் காண வாய்ப்பளித்தன என்பது சர்வ சத்தியம்.

வடுகப்பட்டியிலிருந்து அந்தப் பெருமகன் தமிழுக்காக எழுந்து வந்தவன் என்பது உண்மை. வறுமையிலும் தமிழுக்காக தன் ஞான வேள்வியைத் தொடர்ந்தான் என்பதும் உண்மை. ஓயாமல் கவிதைகளாக யாத்து வைத்தான் என்பதும் உண்மை.

பின், அந்த எளிய கவிஞனை வாழ்க்கை ஓங்கி அறைய, திரை இசைப் பாடலில், அதன் தில்லாலங்கடித்தனத்தில் மெல்லக் கரைந்து போனான் என்பதும் உண்மை.

போகட்டும்… ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்று அந்த முதிய கவிஞனுக்கு வயது 64.

ஏதோ, மேடை போட்டுக் கொடுத்தார்கள். சற்றே பிசிறடித்து விட்டது. விதியின் பாற்பட்டு பேசிய பேச்சு அது என்று விட்டுவிடுங்கள்.

அச்சேறுவதற்கு முன்பு இதைப் படித்தவர், படித்த பின்னும் அனுமதித்தவர் என்று பலருக்கு இதில் பங்குண்டு. ஒருவரை மட்டுமே குறிவைத்து பிழை செய்துவிடாதீர்கள்.

நம்மிடையே எஞ்சியிருக்கும் மரபு அறிந்த அந்தக் கவிஞனை இதற்கு மேலும் அடிக்காதீர்கள்.

“ஆண்டாளின் சந்நிதியில் வந்து, தெண்டனிட்டு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்…” என்று ஏற்கெனவே நொந்து கிடக்கும் அந்த முதிய மனிதனின் மீது கொத்திக் கிளறாமல் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்.

அப்படித்தான் ஆக வேண்டுமெனில்,

ஆயிரக்கணக்காண ஆன்மிகத் தத்துவப் பாடல்களை எழுதி வைத்தவன் என்னும் முறையில், கவி உள்ளம்கொண்ட வைரமுத்து அவர்களுக்காக… சகக் கவிஞனாக அடியேன் வந்து ஆண்டாள் திருச் சந்நிதியில் தெண்டனிட்டு மண்டியிடச் சித்தமாக இருக்கிறேன்.

மன்னிப்பது, என் அம்மைக்கு எளிது!

**கட்டுரையாளர் குறிப்பு**

**ஸ்ரீராம் சர்மா**

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share